Ad

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

`சமாதிகள் எழுப்பப்படாத சுடுகாடு!' - அணுகுண்டால் அழிந்த ஹிரோஷிமா, நாகசாகி #Hiroshima75

அப்பாவி மக்கள், குழந்தைகள், முதியவர்கள் என எந்த கரிசனமும் இன்றி அமெரிக்கா நடத்திய முதல் அணுகுண்டு தாக்குதலின் 75-வது ஆண்டு இன்று. இங்கு பலியானவர்களின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவிடத்தில், `இனி எப்போதும் இப்படிப்பட்ட கொடூரத்தை நடக்க விட மாட்டோம்’ என குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், அந்தக் கொடூரம் நிகழ்ந்து முக்கால் நூற்றாண்டு முடிந்து பின்னரும் கூட இலங்கை - பாலஸ்தீனம் - ஆப்கானிஸ்தான் என தொடர்ந்து இந்த கொடூரம் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் அழிவுக்கு உள்ளான ஹிரோஷிமா - நாகசாகி நினைவுகளை இங்கே பகிர்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகியும், கவிஞருமான சி.ஆர்.செந்தில்வேல்.

``1945 ஆகஸ்ட் 6 காலை 8 மணி. அன்று காலை வழக்கம்போல் ஜப்பானின் துறைமுக நகரான ஹிரோஷிமா நகரமும் துயில் கலைந்து பரபரப்பாகிக் கொண்டிருந்தது. எல்லோரும் காலை பரபரப்பில் இருந்த நேரம். பிள்ளைகள் பள்ளிக்குப் போகத் தயார் நிலையில்; அப்பா, சில வீட்டில் அம்மாவும், வேலைக்குப் போக தயார் நிலையில். தாய்மார்கள் மதிய உணவும் காலை உணவும் தயாரிக்கும் மும்முரத்தில். திடீர் என ஒலித்தது சைரன். எதிரி விமான தாக்குதலுக்கான எச்சரிக்கை. விமானம் எங்கு குண்டுபோடுமோ, யார் யார் மடிவர்களோ என்ற அச்சமும் பீதியும் அனைவரையும் வாட்டியது.

குண்டுவெடிப்பு

விமானத்திலிருந்து குண்டு விழும். பெரும் சப்தம் கேட்கும் என எதிர்பார்ப்புடன் இருந்த அனைவரும் சற்றே அச்சத்தில் ஆழ்ந்தனர். தலைக்கு மேலே இரண்டு விமானங்கள் பறந்தன. எங்கு குண்டு விழுமோ என அச்சப்பட்டு அண்ணாந்து பார்த்தவர் வியப்பில் ஆழ்ந்தனர். முதலில் வந்த விமானம் பூசணிக்காய் போன்ற ஏதோ ஒன்றைப் பாராசூட்டின் மூலம் கீழே போட்டுவிட்டுச் சென்று விட்டது. இரண்டாவது விமானம் அங்கேயே வட்டமடித்துக் கொண்டிருந்தது. சிலர் விமானத்திலிருந்து ஏதோ விழுகிறதே என வேடிக்கை பார்த்து நின்றனர் அடுத்து ஏற்படப்போகும் அவலத்தை அறியாமல்.

இந்தக் குண்டு வெடிப்புகள் குறித்து அங்கு சென்ற பார்வையாளர்கள்,``சாமதிகள் எழுப்பப்படாத சுடுகாடாக ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் காணப்பட்டன” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

விமானத்தில் இருந்து விழுந்த குண்டு வெடிக்கவில்லை. பெரும் சப்தம் எதுவும் எழுப்பவில்லை. ஆனால் எங்கும் பரவியது பெரும் ஓளி. கண்ணை கூசும் ஒளி. ஒளியின் பிரகாசம் அவ்வளவு அதிகமாக இருந்ததால் நிழல் கூட ஏற்படவில்லை. ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு ஒளி வீச்சு. ஒளி வீச்சிற்கு பிறகு சுமார் 2,000 அடி உயர்ந்த புகை தூசு மண்டலம் தென்பட்டது. வானம் இருண்டது; அதுவரை தெளிவாக இருந்த வானம் முற்றிலும் தூசு படிந்து இரவு போல் ஆகியது.

ஒளிவீச்சு பட்டவர்கள் திடீர் என வலியை உணர்ந்தனர். அவர்களது ஆடைகள் எரிந்து சுற்றும் முற்றும் வீடுகள் இடிந்து போயிருந்தன. கண்ணாடி உடைந்து சிதறி பலர் காயம் அடைந்தனர். அந்த நகரமே அழிந்து போயிருந்தது. எல்லாம் ஒரு சில வினாடிகளில். ஒளி வீச்சு அடங்கியதும் எங்கும் பரவியது பெரும் தீ. சற்று நேரத்தில் நகரின் மையப்பகுதி பெரும் தீயில். எரிகின்ற பொருட்கள் எல்லாம் தாமே எரியத் துவங்கின; மனிதர்களின் தோல் கூட அனலில் வெந்து உரிந்தது.

குண்டு வீச்சின் மையப்பகுதியில் கன நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் சட்டென்று பஸ்பமாகினர். அவர்களது எலும்பு கூட மிஞ்சவில்லை. எல்லாம் கன நொடியில் எரிந்தது; சம்பல் கூட மிஞ்சாமல் போயிற்று. அவ்வாறு மடிந்தவர்கள் பெரும் வேதனையும் வலியும் இல்லாமல் இறந்து போயினர். ஆனால் குண்டு வீச்சின் மையப்பகுதிக்கு சற்றே விலகி இருந்தவர்கள் தீயிலும் இடிபாடுகளிலும் பட்டு வலி வேதனையுடன் மடிந்தனர். எங்கும் அவலக்குரல். காப்பாற்ற, உதவிக்கரம் நீட்ட ஒரு ஆள் கூட மிஞ்சவில்லை.

சி.ஆர்.செந்தில்வேல்

ஹிரோஷிமாவில் குண்டு விழுந்த இடத்திலிருந்து சுமார் 280 மீட்டர் சுற்றளவுக்குள் இருந்த கல்லையும் மண்ணையும் தவிர, எரியக்கூடிய பொருட்கள் அனைத்தும் ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் சாம்பலாகி இருந்தன. அணுகுண்டிலிருந்து வெளிப்பட்ட வெப்பத்தின் அளவு 3 லட்சம் டிகிரி செல்சியஸ் என்கிறார்கள். அடுத்த ஒரு வினாடியில் 280 மீட்டர் சுற்றளவுக்குப் பரவிய வெப்பத்தின் அளவு 4 முதல் 5,000 டிகிரி செல்சியஸ். நகரத்திற்கு 2,000 அடிகளுக்கும் மேல் தீப்பிழம்புகள் தெரிந்தன. மொத்தத்தில் சுமார் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த அனைத்தும் முழுமையாக அழிந்தது. கட்டங்கள் தரைமட்டமாயின. குண்டுவெடித்த சில நிமிடங்களில், கனத்த புழுதி மேகங்களும் புகையும் வானில் நிரம்பி, பகல் இருண்டது.

Also Read: உலகை உலுக்கிய ஹிரோஷிமா குண்டுவெடிப்பு: ஜப்பானில் நினைவு தினம் அனுசரிப்பு!

ஹிரோஷிமா நகரை அணைத்துக்கொண்டு இரண்டு ஆறுகள் ஓடின. அணுகுண்டு வெடித்தவுடன் ஏற்பட்ட வெப்பத்தைத் தணிக்க இந்த ஆறுகளுக்கு அருகில் இருந்தவர்கள் அனைவரும் ஆழத்தைப் பற்றிய பயமே இல்லாமல் சரமாரியாகக் குதிக்க ஆரம்பித்தனர். ஆணா, பெண்ணா, உடலில் துணி இருக்கிறதா, இல்லையா, தனக்கு அடியில் இருக்கும் உடலில் உயிர் இருக்கிறதா, இல்லையா, யாருக்கும் எந்த நினைப்பும் இல்லை. வெப்பத்தை எப்படியாவது குறைத்தால் போதும் என்று எண்ணி, தொங்கிக் கொண்டிருக்கும் சதைகளுடன் ஆற்றில் குதித்த பிறகுதான் தெரிந்தது, ஆற்று நீரும் கொதித்துக் கொண்டிருக்கிறது என்று.

தீ ஜூவாலை அணைந்தவுடன் அடர்த்தியான நச்சுக் கரும்புகை மேகங்களாக உயரத்தில் உருவெடுத்து உலவின. சற்று நேரத்தில் மழை பொழியத்துவங்கியது. ஆகா, வெப்பத்தைத் தணிக்க மழையாவது பெய்கிறதே என மகிழ்ந்து மழையில் நனைந்தவர்கள் எல்லாம் முட்டாள் ஆகினர். பெய்தது கருநிற அமிலமழை. மழைத்துளிகளில் கதிரியக்கத் துகள்கள் இருந்ததுதான் அமிலமழைக்குக் காரணம். மழைபட்டவர்கள் உடல் அமிலத்தில் அழிந்து மடிந்தனர்.

ஹிரோஷிமா

ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டுக்கு பிறகு அடுத்த 3 நாள்களில், ஆகஸ்ட் 9 அன்று நாகசாகியில் இரண்டாவது அணுகுண்டு போடப்பட்டது. இந்த அணுகுண்டு வெடிப்பில் சுமார் ஒரு லட்சம் பேர் மடிந்தனர். ஹிரோஷிமா மீது வீசிய அணுகுண்டிற்கு அமெரிக்கா விளையாட்டாக வைத்த பெயர் `சின்னப் பையன்’ (LITTLE BOY) என்பதாகும் இரு நாள்கள் கழித்து `நாகசாகி’ நகரத்தின் மீது போடப்பட்ட அணுகுண்டிற்கு `குண்டு மனிதன்’ (FAT MAN) என்று பெயர் சூட்டினர்.

குண்டுவெடிப்பு

அன்று ஹிரோஷிமாவில் இருந்தவர்களுக்கு தெரியாது, தமது நகரத்தின் மீது விழுந்தது அணுகுண்டு என்று. அணுகுண்டு வீச்சுக்கு உள்ளான முதல் நகரம் ஹிரோஷிமா. நகரின் மொத்த மக்கள்தொகையான 3.5 லட்சம் பேரில் சுமார் 70,000 பேர் அந்த சில நிமிடங்களில் மடிந்தனர். இந்த குண்டு வீச்சு காரணமாக மேலும் 70,000 பேர் அடுத்த சில நாள்களில் மடிந்தனர். இதே போல நாகசாகியில் சுமார் 74,000 மக்கள் மடிந்தனர். இந்த அகோரக் குண்டு வீச்சினால் ஏற்பட்ட சாவும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட முயன்றும் முடியவில்லை. வரலாறு காணாத சேதாரம் என்று மட்டுமே சொல்ல முடியும். இடிபாடுகளுக்கிடையே சிக்கிக்கொண்டு வெளியே வரவும் முடியாமல், முழுதாக உயிரும் போகாமல் பலர் அவலமாக மடிந்தனர். இந்தக் குண்டு வெடிப்புகள் குறித்து அங்கு சென்ற பார்வையாளர்கள்,`சாமதிகள் எழுப்பப்படாத சுடுகாடாக ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் காணப்பட்டன’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கொடூர செயலை அரங்கேற்றிய அமெரிக்க அரசு, தனது அறிக்கையில் இந்த அணுகுண்டு வீச்சினால்தான் 2-ம் உலகயுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அணுகுண்டை ஜப்பான் மீது போட்டு பேரழிவை உண்டக்காமலிருந்திருந்தால் 2-ம் உலகயுத்தம் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும். அதன்மூலம் இதனை விட அதிகமான மக்கள் செத்திருப்பர். பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டது அமெரிக்கா என்று குறிப்பிட்டது. நெஞ்சுபதறும் இப்படுபாதகப் படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை குறித்துப் பெரும் சர்ச்சை உலகெங்கும் இன்றும் தொடர்கிறது.

ஹிரோஷிமா

குழந்தைகள், பொது மக்கள், முப்படைந்தோர் என பலயிரக்கனக்கானோர் மடிந்த ஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடிப்பில் மடிந்தவர்களுக்கு நினைவுச்சின்னம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் `இனி எப்போதும் இப்படிப்பட்ட கொடூரத்தை நடக்க விட மாட்டோம்’ என பொறிக்கப்பட்டுள்ளது. ஆம். இனி இதுபோன்ற கொடூரங்களுக்கு எதிராக உலக சமாதானம், உலக சமத்துவம், உலக சுழல் பாதுகாப்பு, நிலைத்தகு வளர்ச்சி யை வலியுறுத்தி போராடுவது தான் இந்த ஹிரோஷிமா தினத்தில் நாம் மேற்கொள்ளவேண்டிய சபதம்’’ என்றார் அவர்.

Also Read: `ஹிரோஷிமாவில் வீசப்பட்டதைவிட 17 மடங்கு அதிகம்!' -இஸ்ரோவை அதிரவைத்த வடகொரியா அணுஆயுத சோதனை ஆய்வு



source https://www.vikatan.com/news/international/japan-marks-75th-year-of-the-atomic-bomb-attack-on-hiroshima-nagasaki

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக