உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் எனக் கடந்த வருடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதையடுத்து அங்கு கோயில் கட்டுவதற்காகப் புதிய அறக்கட்டளை அமைத்து பணிகள் தொடங்கப்பட்டன. ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவும் நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியிலும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க-வின் மூத்த தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். இதைச் சிறப்பிக்கும் வகையில் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ராமரின் உருவப்படம், உருவாகவுள்ள கோயிலின் மாதிரிப்படத்தை வெளியிட்டனர். அங்கு வாழும் இந்தியர்கள் இதன் முன்பு கூடி `ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷங்களையும் எழுப்பிக் கொண்டாடியுள்ளனர்.
இதுதொடர்பாக அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பேசுகையில், ``நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறோம். மக்கள் பலரும் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் விழாவைக் கொண்டாடியுள்ளனர். உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களுக்கு இந்தத் தருணம் மிகப்பெரியது. மக்களுடன் இணைந்து இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளனர். நியூயார்க் பிராட்வேயில் உள்ள உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் விளம்பரப் பலகைக்கு முன்பாக 1,000-க்கும் மேற்பட்டவர்கள் கூடி இதைக் கொண்டாடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பிராட்வே பகுதி திருவிழாவைப் போல காட்சியளித்ததாகவும் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் மிகவும் தொலைவான இடங்களில் இருந்து பாரம்பர்ய உடைகளை அணிந்து வந்து, மெழுகுவத்திகள் ஏற்றி, இனிப்புகள் வழங்கி இதைக் கொண்டாடியுள்ளனர். கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் இந்த டைம்ஸ் சதுக்கத்தில் தீபாவளி கொண்டாட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். பிற்பகல் வரை டைம்ஸ் சதுக்கத்தில் இந்தப் படம் இருந்ததாகக் கூறப்படுகிறது. டைம்ஸ் சதுக்கத்தில் ராமர் படத்தை வெளியிட்டதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடிக்கல் நாட்டு விழாவில் மோடி பேசுகையில், ``ஜெய் ஸ்ரீராம்’ இந்த வார்த்தை இன்று அயோத்தியில் மட்டுமல்ல உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. இந்தப் புனிதமான சந்தர்ப்பத்தில் தேசத்தின் அனைத்து மக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கும், ராமர் பக்தர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டு மக்களின் பல வருடக் காத்திருப்பு இன்று முடிந்துவிட்டது. சரயு நதிக்கரையில் ஒரு புதிய வரலாறு உருவாக்கப்படுவதை முழு உலகமும் கண்காணித்துக்கொண்டிருக்கிறது. இன்று முழு நாட்டுக்கு உணர்ச்சிகரமான தருணம். ஒரு கூடாரத்தில் தங்கியிருந்த ராமருக்கு தற்போது பெரிய கோயில் கட்டப்படவுள்ளது. இந்த ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாக மாறும். இந்தக் கோயில் கோடிக்கணக்கான மக்களின் கூட்டுத் தீர்மானத்தின் சக்தியைக் குறிக்கும். இது எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கும்” என்றார்.
Also Read: `குழந்தை ராமர்; கூட்டிச்செல்லும் மோடி!' - சர்ச்சையான ட்வீட்க்கு வானதி சீனிவாசன் விளக்கம்
source https://www.vikatan.com/news/international/new-yorks-times-square-displayed-ramar-temple-picture
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக