தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகிலுள்ள கே.கைலாசபுரத்தைச் சேர்ந்தவர் ஜோசப். மீன் வியாபாரம் செய்து வரும் இவரது மகள் செல்சியா, கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சென்னையில் கார் டிரைவராகப் பணிபுரிந்து வரும், இதை ஊரைச் சேர்ந்த ஜோசப்பின் அக்கா மகன் டோனிராஜாவுக்கு செல்சியாவை பெண் கேட்டார்களாம். மகள் கல்லூரியில் படித்து வருவதால், இன்னும் இரண்டு ஆண்டுகள் போகட்டும் எனச் சொன்னாராம் ஜோசப்.
இந்நிலையில், ஊரடங்கினால் சென்னையிலிருந்து ஊருக்கு வந்த போதும் தொடர்ந்து பெண் கேட்டு மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த செல்சியாவின் கழுத்து, கைகளில் பிளேடால் கிழித்துவிட்டு தப்பியோடிவிட்டார் டோனிராஜா. அதிக ரத்தம் வெளியேறி துடித்த செல்சியா நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தப்பியோடியா டோனிராஜாவை நாரைக்கிணறு போலீஸார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Also Read: ஆபாசம், அச்சுறுத்தல், கொலை மிரட்டல்... பெண் ஊடகவியலாளர்களை குறிவைக்கும் கும்பல்!
கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் வாய்பேச முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் செல்சியா. இந்நிலையில், செல்சியாவின் தந்தை ஜோசப் போலீஸாரிடம், ``நான் மீன் வியாபாரம் செய்துட்டு வர்றேன். என் மனைவி விவசாயக் கூலி வேலைக்குப் போகிறாள். எனக்கு 10-ம் வகுப்பு முடித்த மகனும், கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வரும் மகளும் இருக்கிறார்கள். எனது அக்கா விக்டோரியாவின் கணவர் இறந்துவிட்டதால், எங்களுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறாள்.
அவளின் மூத்த மகன் திருமணமாகி ஈரோட்டில் குடும்பத்துடன் வசிக்கிறான். இரண்டாவது மகனான டோனிராஜா, சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறான். ஊரடங்கு துவங்கிய கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை உள்ளூரிலேயே வசித்து வந்தான். ஒரு மாதத்திற்கு முன்பு டோனிராஜா, என் மகளை என்னிடம் திருமணம் செய்து கொள்ள, பெண் கேட்டான்.
`என் மகள் கல்லூரி படித்து வருவதால் இப்போதைக்கு திருமணம் செய்துதர முடியாது' எனச் சொன்னேன். இதனால், ஒரு வாரமாக வீட்டிற்கே வரவில்லை. இந்நிலையில், சமையல் செய்து கொண்டிருந்த என் மகளிடம் வந்து, `ஒழுங்கா என்னைக் கல்யாணம் செஞ்சுக்கோ. இல்லேன்னா உன்னைக் கொன்னுடுவேன்’ எனச் சொல்லி மிரட்டியிருக்கான். `எனக்கு படிப்புதான் முக்கியம்; கல்யாணம் முக்கியமில்ல’ எனச் சொல்லியிருக்காள்.`எனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது’ எனச் சொல்லி, பிளேடால் இடது கழுத்து, வலது கையில் கிழித்துள்ளார்.
வலியாலும் ரத்தப்போக்காலும் என் மகள் துடிதுடித்துப் போனாள். பாவி, என் மகளை இப்படி செஞ்சுட்டான். இன்னும் கொஞ்சம் ஆழமாக் கிழித்திருந்தால் என் மகளின் உயிரே போயிருக்கும்” என விம்மி அழுதார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/thoothukudi-police-arrested-youth-in-attempted-murder-charge
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக