Ad

புதன், 19 ஆகஸ்ட், 2020

திருவள்ளூர்: நாய் பண்ணையில் கொன்று புதைக்கப்பட்ட இளம்பெண்! - கிணற்றில் மிதந்த போதைப்பொருள்?

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரின் மனைவி பிரியங்கா (35). கணவரைப் பிரிந்து வாழும் பிரியங்கா, திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு அடுத்த வாணியமல்லி கிராமத்தில் வசித்துவந்தார். அந்தக் கிராமத்தில் சென்னை மாதவரத்தை சேர்ந்த காட்வின் டோமினிக் என்ற காடிபாய் (40) என்பவர் நாய்பண்ணை வைத்துள்ளார். நாய்களைப் பராமரிக்கும் வேலையை பிரியங்கா செய்து வந்தார்.

பிரியங்கா சடலம் புதைக்கப்பட்ட இடம்

இந்தநிலையில், பிரியங்காவைக் காணவில்லை என்று அவரின் சகோதரர் விக்ரம் என்பவர் சில தினங்களுக்கு முன் ஆன்லைனில் பாதிரிவேடு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் டிஎஸ்பி ரமேஷ் மேற்பார்வையில் போலீஸார் நாய்பண்ணைக்குச் சென்று விசாரித்தனர். விசாரணையில் பிரியங்கா கொலை செய்யப்பட்ட தகவல் தெரியவந்தது.

போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்படி பிரியங்கா கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த இடத்தை ஜேசிபி மூலம் தோண்டினர். அப்போது அழுகிய நிலையில் பிரியங்காவின் சடலம் காணப்பட்டது. இதையடுத்து தாசில்தார் கதிர்வேல் முன்னிலையில் நேற்றிரவு தோண்டியெடுக்கப்பட்ட பிரியங்காவின் சடலம், பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொலை

இந்தக் கொலை சம்பவம் குறித்து பாதிரிவேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கணவரைப் பிரிந்து வாழ்ந்த பிரியங்காவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் பழக்கம் இருந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தற்போது, அவர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைப் பிடித்து விசாரித்தால்தான் பிரியங்கா கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

Also Read: `வெடிகுண்டு வீசிக் காவலர் கொலை; படுகாயமடைந்த ரௌடியும் பலி!’ - தூத்துக்குடியில் என்ன நடந்தது?

இந்தச் சம்பவம் குறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,``பிரியங்கா சடலம் தோண்டியெடுக்கப்பட்ட நாய்ப் பண்ணை முழுவதும் சோதனை நடத்தினோம். அப்போது அந்தப்பகுதியில் உள்ள கிணற்றிவ் பிளாஸ்டிக் பைகள் மதிந்தன. உடனடியாக அதை எடுத்து பார்த்தபோது அதற்குள் 12 சின்ன சின்ன பிளாஸ்டிக் பை பொட்டலங்கள் இருந்தன. அதை பிரித்துப் பார்த்தபோது பவுடர் போன்ற பொருள் இருந்தது.

போதை பொருள்

Also Read: சென்னை: `காதலிக்கு பட்டுப்புடவை; காட்டிக்கொடுத்த கத்திரிக்கோல்' - கவரிங் நகைகளை திருடிய இளைஞர்

அவை போதை பொருளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். ஆய்வின் முடிவு வந்தப்பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நாய் பண்ணையின் உரிமையாளர் காட்வின் டோமினிக் குறித்து விசாரணை நடந்துவருகிறது. பிரியங்கா எப்போது, எதற்காகக் கொலை செய்யப்பட்டார் என்று விசாரித்து வருகிறோம். மேலும், பிரேத பரிசோதனை ரிப்போர்ட் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்படும்" என்றார்.

நாய்பண்ணையில் இளம்பெண் பிரியங்கா கொலை செய்யப்பட்டு ரகசியமாக புதைக்கப்பட்ட சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/tiruvallur-police-recovers-telangana-womans-dead-body-from-dog-farm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக