''உங்கள் குரு ஜீவாவின் வழியிலேயே நீங்களும் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராகணும்னு முன்னாடியே முடிவு பண்ணியிருந்தீங்களா?''
’’ஜீவா சார்கிட்ட வேலைப் பார்த்திட்டு இருந்த சமயத்தில், ஒளிப்பதிவாளரா எனக்கு முதல் படம் கிடைச்சது. ’ஆனந்த தாண்டவம்’ படத்தில் ஒளிப்பதிவாளரா வேலைப் பார்த்திட்டு இருந்த சமயத்தில்தான் ’நான்’ படக்கதையை எழுத ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் இருந்து எனக்கு இயக்குநராகணும்கிற ஐடியா வந்ததில்லை. ஆனால், இந்தக் கதையை எழுதி முடிச்சதும், இதை நல்லபடியா இயக்கிடலாம்கிற நம்பிக்கை எனக்கு இருந்துச்சு. அந்த நம்பிக்கை எனக்கு வந்ததற்கு முக்கியமான காரணம், ஜீவா சார்தான். அவர் ஒளிப்பதிவாளராக இருந்துட்டு, ’12B' படம் மூலம் இயக்குநரானப்போ, அந்த டிஸ்கஷனுக்கு என்னையும் அழைச்சிட்டுப் போனார். அப்போ அவருக்கு நான் உதவி ஒளிப்பதிவாளர்தான். ஆனால், அவர் என்ன நினைச்சார்னு தெரியலை, என்னை டைரக்ஷன் டிஷ்கஷனிலும் உட்கார வெச்சார். அதுமட்டுமல்லாமல், அவர் அடுத்ததா இயக்குன படங்களில் நான் வேலைப் பார்த்தப்போதும், அவருக்கே தெரியாமல் சில முறையும் எனக்கே தெரியாமல் பல முறையும் எனக்கு டைரக்ஷனைச் சொல்லிக் கொடுத்திருக்கார்.
அதெல்லாம்தான், 'நான்' படத்தை இயக்கிற நம்பிக்கையை எனக்கு கொடுத்துச்சு. ‘நான்’ படத்தின் கதையை எழுதி முடிச்சதும் அப்போ நான் வொர்க் பண்ணிட்டு இருந்த 'ஆனந்த தாண்டம்’ படத்தோட தயாரிப்பாளர் ’ஆஸ்கர்’ ரவிச்சந்திரன் சார்கிட்ட சொன்னேன். அவருக்கும் கதை ரொம்ப பிடிச்சிருந்தனால, ’நானே தயாரிக்கிறேன்’னு சொன்னார். ஆனால், ’ஆனந்த தாண்டவம்’ படம் சரியா போகாததனால, அவர் கொஞ்ச நாள் ப்ரேக் எடுத்துக்குறேன்னு சொல்லிட்டார். அதுனால, நான் வேற தயாரிப்பாளர்களை தேடிட்டு இருந்த சமயத்தில்தான், என் நண்பர் விஜய் ஆண்டனி இந்தப் படத்திற்குள் வந்தார். அவரே தயாரிச்சு, நடிக்கிறேன்னு சொன்னதும், இந்தப் படம் ஆரம்பமாச்சு.’’
இயக்குநராகணும்னு முடிவு பண்ணதுக்கு அப்பறம்தான் ஜீவாவின் பெயரை உங்களது பெயரில் இணைத்துக்கொண்டீர்களா?
’’ ‘ஆனந்த தாண்டவம்’ படத்தோட ஷூட்டிங் போயிட்டிருந்த சமயத்தில்தான் ஜீவா சார் காலமானார். அப்போ நான் எடுத்த முடிவுதான், என் பெயருக்கு முன்னால் அவர் பெயரை சேர்க்கணும்கிறது. ஏன்னா, ஜீவா சார் சினிமாவில் என்னவெல்லாம் பண்ணணும்னு கனவு கண்டார்னு எனக்கு நல்லா தெரியும். ஆனால், அதெல்லாம் வெறும் கனவாவே போயிடுச்சு. எனக்கு சினிமாவைப் பற்றிய தெளிவான புரிதலைக் கொடுத்ததே ஜீவா சார்தான். அதனால, என்னோட சினிமா கரியர் இருக்கிறவரைக்கும், என் பெயருக்கு முன்னால் அவர் பெயர் இருக்கணும்னு ஆசைப்பட்டேன். இதை நான் சிலரிடம் சொன்னப்போ, ’இது எமோஷனில் எடுக்கிற முடிவு. நல்லா யோசிங்க’னு சொன்னாங்க. ஆனால், நான் யோசிச்சுத்தான் அந்த முடிவை எடுத்தேன். என் அப்பா, அம்மாக்கிட்டேயும் ஜீவா சாரோட மனைவி அனிஷ் மேடம்கிட்டேயும் சொன்னப்போ அவங்க என் உணர்வை புரிஞ்சுக்கிட்டு ஓகே சொன்னாங்க. ஒளிப்பதிவாளரா என்னோட முதல் படத்திலேயே ஜீவா சங்கர்னுதான் என் பெயரைப் போட்டேன்.’’
விஜய் ஆண்டனியை நடிக்க வைக்கலாம்கிற முடிவை எப்போ எடுத்தீங்க?
’’விஜய் ஆண்டனியும் நானும் ஒரே காலேஜ்ல படிச்சோம். அவர் இசையமைப்பாளரா வாய்ப்பு தேடிட்டு இருந்தப்போ, நானும் அவரும்தான் ஒண்ணா போவோம். அவர் தயாரிப்பாளரையும், இயக்குநரையும் பார்க்க ஆபிஸுக்குள்ள போனதுக்கு அப்பறம், நான் வெளியில வெயிட் பண்ணிட்டு இருப்பேன். விஜய் ஆண்டனிக்கு முன்னாடி இருந்தே நடிக்கணும்னு ஆசை இருந்தது. அவர் சில படங்களுக்கு மியூசிக் பண்ணதுக்கு அப்புறம், ’ஆல்பம் சாங் பண்ணலாம்’னு கேட்பார். அதில் அவரே நடிக்கணும்னு அப்போவே சொன்னார். ஆனால், அது அப்போ நடக்கலை. அவர் இசையமைப்பாளரா பிஸியா இருந்தாலும், நான் உதவி ஒளிப்பதிவாளரா வொர்க் பண்ணிட்டு இருந்தாலும் நாங்க என்னென்ன வொர்க் பண்ணிட்டு இருக்கோம்னு பேசிட்டுத்தான் இருப்போம். அப்படித்தான், ’நான்’ படக்கதையை நான் எழுதியதையும், அந்தக் கதைக்காக தயாரிப்பாளர் தேடிட்டு இருக்கிறதையும் விஜய் ஆண்டனிக்கு சொன்னேன். அப்போ அவரே இந்தப் படத்தை தயாரிச்சு, நடிக்கிறேன்னு சொன்னார். அதுக்கு நான், ’இது ஸ்கூல் முடிச்சிட்டு காலேஜ் போற பையனோட கதைப்பா. அதுக்கு நீ எப்படி சரியா இருப்ப’னு கேட்டதுக்கு, ’உனக்கு ஓகேனா சொல்லுங்க, நான் அதுக்காக வெயிட் குறைக்கிறேன்’னு சொன்னார். இப்படித்தான், விஜய் ஆண்டனி இந்தப் படத்திற்குள் வந்தார்.
அவர்தான் நடிக்கிறார்னு உறுதியானதுக்கு அப்புறம், மற்ற கேரக்டர்களில் நடிக்கிற ஆள்களையும் கமிட் பண்ணேன். அதையும் என் முடிவாவே விட்டுட்டார். தயாரிப்பாளரா அவர் இருந்தாலும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். விஜய் ஆண்டனி, சித்தார்த் வேணுகோபால், ரூபா மஞ்சரினு மூணு பேருக்கும் 2 மாசம் வொர்க்ஷாப் வெச்சோம். அதுனால, ஷூட்டிங்கில் எந்த சிரமமும் இல்லை. நான் நினைச்சதைவிட விஜய் ஆண்டனி சூப்பரா நடிச்சுக் கொடுத்தார். குறிப்பா, ஷூட்டிங் ஆரம்பிச்ச ஒரு வாரத்திலேயே இடைவேளை காட்சியை படமாக்கினோம். அந்தக் காட்சியில்தான் ஹீரோ அவரோட ஃப்ரெண்ட்டை கொலை பண்ற சீன் வரும். அந்தக் கொலை நடந்ததும், அதிர்ச்சி, பயம்னு ஒரே சீனில் கலவையான எமோஷன்களைக் கொடுக்குற மாதிரி இருக்கும். அதில் விஜய் ஆண்டனி நடிச்சதைப் பார்த்ததுக்கு அப்புறம் எனக்கு மிகப் பெரிய நம்பிக்கை வந்துச்சு.’’
’நான்’ கதையோட ஒன்லைன் உங்களுக்கு எப்போ தோணுச்சு?
’’ஜீவா சாரோட ஆபிஸில் ஒரு ஆபிஸ் பாய் இருந்தான். பார்க்கிறதுக்கு ரொம்ப அப்பாவியா இருப்பான். அவன்கிட்ட எப்போதாவது வங்கியில் பணம் போடச் சொல்லி அனுப்புவேன்; எனக்கு சாப்பாட்டு வாங்கிட்டு வர சொல்லுவேன். என் பர்ஸ் டேபிள்ல இருக்கும்; அவனையே அதுல இருந்து காசை எடுத்துட்டு போடானு சொல்லுவேன். ஒரு நாள்கூட என் பர்ஸ்ல இருந்து காசை அதிகமா எடுத்ததில்லை. ரொம்ப நம்பிக்கையான பையன். திடீர்னு ஒரு நாள் அவனைத் தேடி ஆபீஸுக்கு சில பேர் வந்தாங்க. அப்போ அவன் ஆபீஸ்ல இல்லாத நேரம். என்னனு விசாரிச்சால், ஜீவா சார்கிட்ட உதவி இயக்குநரா வேலைப் பார்க்கிறதாவும், அவர் எடுக்கிற படங்களில் நடிக்க வைக்கிறேன்னு சொல்லியும் அவங்ககிட்ட காசு வாங்கியிருக்கான். அப்புறம் விசாரிச்சுப் பார்க்கும் போதுதான், ஆபீஸ்ல சில பொருள்கள் திருடு போனதும் தெரிய வந்துச்சு. அப்பாவியா தெரிஞ்ச பையனுக்குள்ள இப்படி ஒரு முகம் இருந்திருக்கேனு ஆச்சர்யமா இருந்துச்சு. இந்தச் சம்பவத்தை அடிப்படையா வெச்சுத்தான் நான் கதையை எழுதினேன்.’’
Also Read: `` `காலா'வுக்கு நன்றி... `கே.ஜி.எஃப்-2'ல என்ன ஸ்பெஷல்னா?!'' - ஈஸ்வரி ராவ்
முதலில் இந்தக் கதையை வேற நடிகருக்கு சொல்லியிருக்கீங்களா?
’’ ‘ஆஸ்கர்’ ரவி சாருக்கு ’நான்’ கதைப் பிடிச்சிருந்தனால, தனுஷ்கிட்ட கதைச் சொல்றதுக்கு ஏற்பாடு பண்ணிக்கொடுத்தார். ’பொல்லாதவன்’ ஷூட்டிங்ல தனுஷ் இருந்தப்போ, அவர்கிட்ட கதைச் சொல்லப் போனேன். முதல் முறை ஒரு நடிகருக்கு கதைச் சொல்லப் போயிருக்கேன்றதால ரொம்பவே பதற்றமாகி, உடம்பெல்லாம் வேர்த்துடுச்சி. ‘ரிலாக்ஸா சொல்லுங்க... ஒன்னும் பிரச்னை இல்லை’னு என்னை கூல் பண்ணார் தனுஷ். இரண்டரை மணி நேரத்தில் நான் அவர்கிட்ட கதைச் சொன்னதைவிட, அவர் எனக்கு ஆறுதல் சொன்ன நேரம்தான் அதிகம். நான் ஒளிப்பதிவு பண்ணின முதல் படமும் ரிலீஸாகலை; உதவி இயக்குநராகவும் வேலைப் பார்க்கலை; எனக்கு கதை சொல்லவும் வரலை. அப்படி ஒருத்தர் எனக்கு கதைச் சொல்லியிருந்தால், நானே அந்த இடத்திலேயே முடியாதுனுதான் சொல்லியிருப்பேன். ஆனால், ’ரெண்டு நாள் டைம் கொடுங்க; யோசிச்சு சொல்றேன்’னு என்னை அனுப்பிவெச்சார். ரெண்டு நாள் கழிச்சு நேரில் வரச் சொன்னார். படத்தில் அவர் ஏன் நடிக்கலைங்கிறதைக் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் என்கிட்ட எடுத்து சொன்னார். எனக்கு எந்த மன கஷ்டமும் வராத அளவுக்கு அதைச் சொன்னார். இந்தப் படத்தில் தனுஷ் நடிக்காமல் போனதுக்கு முழுக்க முழுக்க நான்தான் காரணம். நான் கதையை ஒழுங்க சொல்லாதனாலதான் தனுஷ்னால இதில் நடிக்க முடியாமல் போச்சு.’’
source https://cinema.vikatan.com/tamil-cinema/director-jeeva-shankar-shares-his-naan-movie-experience
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக