தேனி மாவட்டம் உப்புக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது பச்சையப்பா உயர்நிலைப்பள்ளி. அரசு உதவிபெறும் இப்பள்ளியில் 550 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். கொரோனா காலகட்டமாக இருப்பதால், ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் மாணவர்களின் பெற்றோர்களை ஒருங்கிணைத்து, வாட்ஸப் குழுவை ஏற்படுத்தி, ஆன்லைன் வகுப்பு மற்றும் வீட்டுப்பாடங்கள் என முயற்சி எடுத்துள்ளனர் பள்ளி ஆசிரியர்கள்.
அப்போது, ஸ்மார்ட் போன் அல்லாத மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் கூடிய ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள மாணவர்களை ஒருங்கிணைத்து பாடம் சொல்லிக் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். திட்டத்தோடு நிற்காமல் அதற்கு செயல்வடிவம் கொடுத்து அசத்தி வருகிறார்கள்.
நம்மிடையே பேசிய பள்ளி தலைமையாசிரியர் புவனேஷ்வரி, “எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் கிராமப் புற மாணவர்கள் தான். அவர்களின் வீடுகளில் ஸ்மார்ட் போன் இருப்பதில்லை. அப்படிப்பட்ட மாணவர்கள், தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வகுப்புகளை பார்க்கிறார்கள். இருந்தபோது, அவர்களுக்கு சில சந்தேகங்கள் ஏற்படுகிறது. அதனை நிவர்த்தி செய்வதற்கும், நேரடியாக பாடம் நடத்தவும் திட்டமிட்டு, மாணவர்களின் கிராமத்திற்கே செல்கிறோம்.
என் தலைமையில் 13 ஆசிரியர்கள் உள்ளனர். இன்று ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து, அங்குள்ள மாணவர்களுக்கு தகவல் தெரிவித்துவிடுவோம். அவர்களை ஊர் பொதுவான இடத்தில், மந்தை, மரத்தடி என சமூக இடைவெளியோடு அமர வைத்து பாடம் சொல்லிக்கொடுப்போம். கடந்த 1 மாதமாக இப்பணியினை செய்து வருகிறோம். பெற்றோர்களின் ஒத்துழைப்பு இருப்பதால் இது சாத்தியமாகிறது” என்றார்.
பள்ளியின் பட்டதாரி அறிவியல் ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் கூறும் போது, ``6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக கவனம் செலுத்துகிறோம். 71 மாணவர்கள் எங்கள் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோருக்கு ஸ்மார்ட் போன் வசதி இல்லை. இவர்கள், உப்புக்கோட்டை, சடையால்பட்டி, டொம்புச்சேரி, குண்டல்நாயக்கன்பட்டி, போடேந்திரபுரம், பாலார்பட்டி ஆகிய கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
தினம் ஒரு கிராமம் வீதம் சுழற்சி முறையில் ஒவ்வொரு கிராமத்திற்குச் சென்று மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கிறோம். ஒரு நாளில் தலா 45 நிமிடம் கொண்ட இரண்டு அல்லது மூன்று வகுப்புகள் நடக்கும். அன்றைய வீட்டுப்பாடமும் கொடுத்துவிடுவோம். சுழற்சி முறையில் மீண்டும் அந்த கிராமத்திற்கு வரும் போது, வீட்டுப் பாடத்தினை சரிபார்த்துவிட்டு அடுத்த பாடம் நடத்துவோம்.
இது மட்டுமல்லாமல், மாணவர்கள் அனைவரும் வீட்டில் கல்வி தொலைக்காட்சி பார்க்கிறார்கள். அதில் சொல்லிக்கொடுக்கப்படும் பாடங்களில் சந்தேகம் இருந்தாலும், அதனை நோட்டில் குறித்துக்கொண்டு வந்து எங்களிடம் கேட்பார்கள். மாவட்ட கல்வி அதிகாரிகள், பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் என அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். பெற்றோர்களும் ஊர் பொதுவான இடத்திற்கு அவர்களின் பிள்ளைகளை அழைத்துவருகிறார்கள். பள்ளி திறக்கும் வரை இப்பணியினை செய்ய திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
பச்சையப்பா உயர்நிலைப்பள்ளியின் பொருளாளர் பச்சையப்பராஜா கூறும் போது, “கிராமப் புற மாணவர்களுக்காக 1958ம் ஆண்டு என்னுடைய தாத்தாவால் உருவாக்கப்பட்டது இந்த பள்ளி. அப்போதைய முதல்வர் காமராஜர், இங்கே நேரடியாக வந்து பள்ளி கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். நடுநிலைப்பள்ளியாக ஆரம்பித்து தற்போது உயர்நிலைப்பள்ளியாக வளர்ந்துள்ளது.
கொரோனா காரணமாக மாணவர்களின் படிப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, ஆசிரியர்கள் குழு ஏற்படுத்தி மாணவர்களின் கிராமங்களுக்குச் சென்று பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், தங்களால் முடிந்த முயற்சி எடுத்து அதனை சிறப்பாக செயல்படுத்திவருகிறார்கள். மாணவர்களை சமூக இடைவெளியில் அமர வைத்து, மாஸ், சானிடைசர் எப்போதும் அவர்களிடம் இருப்பதை உறுதி செய்து பாடம் நடத்துவதால், பெற்றோர்களும் ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்” என்றார்.
மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, ஆசிரியர்கள் கையில் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு, பலரும் பாராட்டு தெரிவித்துவருகிறார்கள்.
source https://www.vikatan.com/news/tamilnadu/teachers-visits-students-village-and-conduct-lessons-in-theni
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக