Ad

சனி, 15 ஆகஸ்ட், 2020

`பிரசாந்த் பூஷண் குற்றவாளி’ என தீர்ப்பு... கருத்துரிமையை நெரிக்கிறதா உச்சநீதிமன்றம்?

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான எஸ்.ஏ.பாப்டே, விலை உயர்ந்த `ஹார்ட்லி டேவிட்சன்’ மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. அதை வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தன் ட்விட்டர் பக்கத்தில், ``உள்ளூர் பா.ஜ.க தலைவரின் விலை உயர்ந்த பைக் ஒன்றில் முகக் கவசம், தலைக்கவசம் இல்லாமல் தொற்றுநோய் காலத்தில் பயணம் செய்யும் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றத்தைப் பூட்டிவைத்துள்ளார்" என்று ட்வீட் செய்திருந்தார். அந்த ட்வீட் வைரலானது. அதையடுத்து, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து பிரசாந்த் பூஷண்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவுசெய்தது. மேலும், பிரசாந்த் பூஷண் ஏற்கெனவே பதிவுசெய்த ஒரு கருத்துக்கும் நீதிமன்றத்தை அவதூறு செய்ததாக அறிவிக்கை கொடுக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது, ``அந்த மோட்டார் சைக்கிள் ஸ்டாண்டு போட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை கவனிக்காமல் அந்தக் கருத்தைத் தெரிவித்துவிட்டேன். ஸ்டாண்டு போட்டு நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் அமர்வதற்கு தலைக்கவசம் அணியத் தேவையில்லை என்பதை உணர்கிறேன். எனவே, என் ட்வீட்டுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். என் கருத்துரிமையையே வெளிப்படுத்தியிருந்தேன். நீதிமன்றத்தின் செயல்பாடு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகாது" என்று பிரசாந்த் பூஷண் நீதிமன்றத்தில் விளக்கமளித்தார். உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷண் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தாவே, ``பிரசாந்த் பூஷண் பதிவிட்ட ட்வீட்டுகள் நீதிமன்ற அமைப்புக்கு எதிரானவை அல்ல. தலைமை நீதிபதி குறித்தோ, வேறு நீதிபதிகள் குறித்தோ பிரசாந்த் பூஷண் கூறிய கருத்தானது, நீதிமன்றத்தின் தரத்தைத் தாழ்த்துவது ஆகாது” என்றார்.

பிரசாந்த் பூஷண்

இந்த வழக்கில், `பிரசாந்த் பூஷண் குற்றவாளி’ என்று உச்ச நீதிமன்றம் நேற்று (ஆக. 14) தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர்.கவை, கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. `ஆகஸ்ட் 20-ம் தேதி தண்டனை விவரம் தெரிவிக்கப்படும்’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து நீதித்துறை வல்லுநர்களிடம் பேசினோம். உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமனிடம் பேசியபோது,

``நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், `பிரசாந்த் பூஷண் குற்றவாளி’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதைப் பார்க்கும்போது, இது என்ன 18-ம் நூற்றாண்டா என்ற கேள்வி எழுகிறது. உலகில் எல்லா நாடுகளும் நீதிமன்ற அவமதிப்பு என்பதை சட்டப் புத்தகத்திலிருந்து தூக்கியெறிந்துவிட்டன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவின் படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பிரசாந்த் பூஷண் வெளியிட்டது நீதிமன்ற அவமதிப்பு என்றால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராகப் பாலியல் குற்றச்சாட்டு சொன்ன பெண் ஊழியருக்கு ஏன் மீண்டும் பணி வழங்கப்பட்டது? இந்தக் கேள்வியை எழுப்புவதால், நீதிமன்றத்தை அவமதித்துவிட்டதாக என்மீது குற்றம்சாட்ட முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணனிடம் பேசியபோது, ``உச்ச நீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதியின் மாண்பில் மக்கள் நம்பிக்கை இழக்குமாறு ஒருவர் பேசினாலோ, எழுதினாலோ, அத்தகைய செயல் நீதிமன்ற அவமதிப்பு என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. ஒரு நீதிபதியின் தீர்ப்பைத் தவறென்று சொல்ல அனைவருக்கும் உரிமை உள்ளது.

எஸ்.ஏ.பாப்டே

நீதிபதியின் செயல்பாடுகளுக்கு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்நோக்கம் கற்பிக்காதவரை அவரைக் குற்றவாளியென்று சொல்வது எப்படிச் சரியாகும்? பூஷணின் விளக்கத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருந்தால், உச்ச நீதிமன்றத்தின் மாண்பு உயர்ந்திருக்கும். தீர்ப்புகளையும், நீதிபதிகளின் செயல்பாடுகளையும் விமர்சிக்கும் உரிமை மக்களின் அடிப்படை உரிமை. இந்த உரிமையைக் காக்கும் கடமை உச்ச நீதிமன்றத்தைச் சார்ந்தது“ என்றார்.

வழக்கறிஞர் கண்ணதாசனிடம் பேசியபோது, ``வழக்கில் ஒருவரைக் குற்றவாளி என்று தீர்மானிப்பது வேறு; அவருக்கு தண்டனை வழங்குவது என்பது வேறு. அவருக்கு அபராதம் விதிக்கப்படலாம். `காலை முதல் மாலை வரை இருந்துவிட்டுச் செல்லுங்கள்’ என்று சொல்லலாம். அல்லது ஒரு மாதமோ, இரண்டு மாதங்களோ சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். ஒரு சிரமம் என்னவென்றால், குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டதால் அவரை பார் கவுன்சிலிலிருந்து நீக்கிவிடுவார்கள்.

உச்ச நீதிமன்றம்

Also Read: நித்தியானந்தா சொன்ன `கரன்சி' கதை... கைலாசா கனவுக்குக் கரீபியனில் திட்டம்!

இது ஒரு ஜனநாயக நாடு. கருத்து சுதந்திரம் உள்ளது. நீதியை விமர்சிக்கலாம். நீதிபதியை விமர்சிக்கக் கூடாது. விளக்கம் சொல்வதற்கெல்லாம் தண்டனை வழங்குவது என்பதை நீதிமன்றம் மாற்றிக்கொள்ள வேண்டும். தண்டனை கொடுப்பதென்பது `யாரும் என்னைப் பற்றி எதுவும் சொல்லக் கூடாது’ என்று கழுத்தை நெரிப்பதுபோலத்தான் இருக்கிறது. எனவே, நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/is-it-right-that-supreme-court-holds-prashant-bhushan-guilty-of-contempt

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக