Ad

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

மாரிதாஸ், மதன் ரவிச்சந்திரன், கிஷோர் கே ஸ்வாமி மீதான நடவடிக்கைகளுக்குப் பின்னால் இருப்பது தி.மு.கவா?

  • பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசிய நபர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது.

  • பெண் பத்திரிக்கையாளர்களை ஆபாசமாகப் பேசியதாக கிஷோர் கே ஸ்வாமி மீது வழக்கு.

  • மாரிதாஸ் மீது 1.50 கோடி நஷ்ட ஈடு கேட்டு News18 தமிழ்நாடு சேனலின் ஆசிரியர் குணசேகரன் வழக்கு... மாரிதாஸின் வீடியோக்களை நீக்க நீதிமன்றம் உத்தரவு..

  • மதன் ரவிச்சந்திரன் மீது, உதயநிதி ஸ்டாலின் அவதூறு வழக்கு.

  • பெண்களின் முகவரி, தொலைபேசி எண் கேட்ட கல்யாணராமன் மீது வழக்கு...

தி.மு.க தலைமையில் உருவாக்கப்பட்ட, ஒருங்கிணைந்த ஊடகக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் நிகழ்ந்த நடவடிக்கைகள் இவை என சமூக வலைதளங்களில் கடந்த இரு நாள்களாக மிக வேகமாக ஒரு செய்தி பரவி வருகிறது.

மேற்கண்ட நிகழ்வுகள் தொடர்ச்சியாக நிகழ்ந்ததும், அதே நேரத்தில் தி.மு.கவின் தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டதும் உண்மைதான். ஆனால், மேற்கண்ட நடவடிக்கைகள் இந்தக் குழுவால்தான் சாத்தியமானதா?

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

`ஊடகக் கண்காணிப்புக் குழு' எனும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்னணி மற்றும் செயல்பாடுகள் குறித்து, குழுவின் ஒருங்கிணைப்பாளரான, தி.மு.கவின் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்.

``கடந்த 27-ம் தேதி தி.மு.க தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், கருத்து சுதந்திரத்தை காக்கும் பொருட்டும் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் ஒருவர், உறுப்பினராகக் கொண்டு ஊடகக் கண்காணிப்புக் குழு உருவாக்கப்பட்டது. அதன்படி, காங்கிரஸில் இருந்து கோபண்ணா, கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து மகேந்திரன், கனகராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து ரவிக்குமார், ம.தி.மு.கவில் இருந்து மல்லை சத்யா என அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இந்தக் குழுவில் இருக்கிறார்கள். குழுவின் முதல் கலந்தாய்வுக்கூட்டம், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

* பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தனிநபர் தாக்குதலைத் தொடுக்கும் சமூக விரோதிகள் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார்களில் காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக, பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது மத்திய, மாநில ஆளுங்கட்சிகளின் பின்புலத்தோடு யாரேனும் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த பாரபட்சப் போக்கை கைவிட வேண்டும்.

* பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் பணிபுரியும் பெண்கள் மீதான தனிநபர் தாக்குதலும், தரம்கெட்ட, ஆபாசமான விமர்சனங்களையும் ஆளுங்கட்சிகளுக்கு வேண்டிய கூட்டம் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பதை காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்காமல், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* தமிழகத்தில் அரசியல்மயப்படாத ஆனால் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட இளைஞர்கள், சமூக ஊடகங்கள் வழியாக நியாயமான தங்கள் உரிமைக்கான குரலைப் பதிவிடும்போது, அவர்கள் தனிநபர் தாக்குதல்களுக்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக, இளம்பெண்கள் தரக்குறைவாக, ஆபாசமாக விமர்ச்சிக்கப்படுவதோடு மிரட்டலுக்கும் ஆளாகிறார்கள். இந்த மாதிரியான சமூகவிரோதிகளின் மீது புகார் கொடுத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இதைத் தவிர்த்து, துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பத்திரிகைகள், ஊடகங்கள், சமூக ஊடகங்களில் சமூக அக்கறையோடு செயல்படுகின்ற ஒவ்வொருவருக்கும் காவல்துறை பாதுகாப்பு அளித்திட வேண்டும் ஆகிய முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இது தொடர்பாக, தமிழக காவல்துறைத் தலைமை இயக்குநரை நேரில் சந்தித்து 03.08.2020 அன்று மனு கொடுப்பது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்

அதுமட்டுமில்லாமல், ஊடகங்களுக்கும் சில கோரிக்கைகளை முன்வைத்தோம். அதன்படி, பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வரும் செய்திகள் மற்றும் விவாதங்களில் நடுநிலைத்தன்மைக் கடைப்பிடிக்கப்படவேண்டும். குறிப்பாக செய்திகளில் எதிர்க்கட்சிகளின் செய்திகள் இருட்டடிப்பு செய்வது தவிர்க்கப் படவேண்டும். விவாதங்களில் சம அளவிலான பங்கேற்பாளர்களை இடம்பெறச் செய்யவேண்டும். அனைவருக்கும் சமமான அளவில் வாய்ப்புகள் வழங்கப்படல் வேண்டும் மற்றும் விவாத தலைப்புக்குச் சம்பந்தமில்லாதவர்களை தவிர்க்க வேண்டும்.

வலதுசாரி சிந்தனையாளர் என்று ஒரு பட்டியல் இருப்பது போன்று திராவிட (அல்லது) இடதுசாரி சிந்தனையாளர் என்று பங்கேற்பாளர்கள் பட்டியல் உருவாக்கி, சமத்துவத்தை நிலைநிறுத்திட வேண்டும் என்பதையெல்லாம் வலியுறுத்தி ஒவ்வொரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் தனித்தனியாக கடிதங்களை நேரில் சந்தித்து கொடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது'' என்றவரிடம் தற்போது மதன் ரவிச்சந்திரன் மீதான வழக்கு, கிஷோர் கே ஸ்வாமி மீதான வழக்கு ஆகியவற்றுக்குப் பின்னால் இருப்பது இந்தக் குழுதான் எனப் பரவும் செய்திகள் குறித்துக் கேட்க, ``இதுதான் காரணம் எனச் சொல்ல முடியாது. ஆனால், நாங்கள் குழு அமைத்ததின் தாக்கம் அரசின் நடவடிக்கைகளில் கண்டிப்பாகத் தெரிகிறது. 27-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டவுடன் நாங்கள் அடுத்தகட்டமாக என்ன செய்யப் போகிறோம் என்கிற நெருக்கடி அரசுக்கு இருந்திருக்கும்'' என்றார் அவர்.

கோபண்ணா

தொடர்ந்து, இந்தக் குழுவின் உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பொறுப்பாளருமான கோபண்ணா பேசும்போது,

``ஊடக விவாதங்களில், பா.ஜ.கவினர் தங்களின் வாதங்களை முன்வைப்பதிலும் எதிர்க்கட்சியினரின் வாதங்களை எதிர்கொள்வதிலும் தங்களை தயார்ப்படுத்திக்கொள்ளாத நிலையில், நெறியாளர்களின் மீது கோபப்படுவது, அவர்களுக்கு உள்நோக்கம் கற்பிப்பது; நிர்வாகத்தின் மீது குற்றம் சுமத்துவது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள். ஆட்சியில் இருக்கின்ற அதிகாரப் பின்னணியின் காரணமாக மிகுந்த ஆணவத்தோடு நடந்துகொள்கிறார்கள். அனைவரின் மீதும் கோபப்படுகிறார்கள். சமூக ஊடகங்களில் கூட எதிர்க்கருத்து முன்வைப்பவர்களை மிரட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள்'' என்றார்.

``ஊடகங்களின், ஊடகவியலாளர்களின் மீதான அச்சுறுத்தல், தாக்குதல்கள் என்பது இங்குள்ள பெரும்பாலான கட்சிகளால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல்தான், பா.ஜ.கவின் முன்னாள் தலைவர், தமிழிசை சௌந்தர்ராஜன், வானதி சீனிவாசன் போன்றோர் கூட சமூக ஊடகங்கங்களில் தரம்தாழ்ந்த விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்தநிலையில் குறிப்பிட்டு, பா.ஜ.கவை மட்டும் இந்த விஷயத்தில் குற்றம் சுமத்துவது சரியா?” எனக் கேட்டேன்.

``மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள்தான் அப்படி நடந்துகொள்கிறார்கள். எங்கள் கட்சியினர் அப்படி நடந்துகொண்டு, எங்கள் பார்வைக்கு வருமேயானால் நிச்சயமாக உடனடியாக நடவடிக்கை எடுப்போம். இனி வரும் காலங்களில் அதற்கான வாய்ப்பே உருவாகாத வண்ணம் பார்த்துக்கொள்வோம்'' என்றார் கோபண்ணா.

``இந்தக் குழு அமைக்கப்பட்ட பிறகுதான், அரசு வேகவேகமாக நடவடிக்கை எடுத்ததா?" என்ற விமர்சனத்தை அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வனிடம் வைத்தோம்.

``தமிழகத்தில் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் சுதந்திரமாகத்தான் செயல்படுகின்றன. தி.மு.க தலைமையில் ஊடகத்தைப் பாதுக்காக்க குழு அமைப்பது என்பது, `எங்க அப்பன் குதிருக்குள் இல்லை’ என்கிற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. தினகரன் அலுவலகத்தை எரித்து மூன்று பேர் உயிரிழக்கக் காரணமானவர்கள், கடந்த 2006-11 அவர்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் ஊடகத்துறை, திரைத்துறை என ஒரு துறையையும் விட்டு வைக்காமல், ஆக்டோபஸ் போல ஆதிக்கம் செலுத்தினார்கள். அவர்கள் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கக் கிளம்பியிருப்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. அவதூறு பரப்பியவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்ததே தவிர இவர்கள் குழு அமைத்தற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.'' என்றவரிடம், பா.ஜ.கவினரால் தமிழக அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கு அச்சுறுத்துதல்கள் இருப்பதாகச் சொல்லப்படுவது பற்றிக் கேட்க, ``தமிழகத்தைப் பொறுத்தவரை அப்படியொரு நிலை இல்லை. ஊடகங்கள் சுதந்திரமாகத்தான் இருக்கின்றன. அரசு அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கிறது'' என்றார் அவர்.

வைகைச்செல்வன்

பா.ஜ.க திட்டமிட்டு ஊடகவியலாளர்கலையும், சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராக கருத்துத் தெரிவிப்பவர்களையும் அச்சுறுத்துகிறதா?

பா.ஜ.கவின் மாநிலத் துணைத்தலைவர், வானதி சீனிவாசனிடம் பேசினோம்,

``ஊடகங்களில் வரும் கட்சிகள் மீதான விமர்சனங்களுக்கு கடுமையான எதிர்வினையாற்றுவது தொடர்ச்சியாக தமிழகத்தில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. எமெர்ஜென்சி காலத்தில் இருந்தே இது போன்ற சவால்கள் ஊடங்களுக்கு இருக்கின்றன. தி.மு.க தலைமையில் ஊடகக் கண்காணிப்பு குழு அமைக்கப்படட்டும். அது தவறில்லை. ஆனால், அவர்கள் அமைத்த குழுக்களில் அங்கம் வகிக்கும் கட்சியைச் சேர்ந்தவர்களே, எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களையும், பிரதமர் அவர்களையும் தரம் தாழ்ந்து விமர்சிக்கும் போக்கு இருக்கிறது. அதுகுறித்தும் அந்தக் குழுவில் விவாதிக்கப்படவேண்டும்.

பா.ஜ.க நிர்வாகிகள் ஊடகங்களை மிரட்டும் நிலை இங்கு இருந்தால், பா.ஜ.கவுக்கு ஆதரவாகத்தானே அனைத்து ஊடகங்களும் பேசவேண்டும். ஆனால், இங்கு அப்படியொரு சூழல் இல்லையே. மத்திய அரசையும், பிரதமரையும் கடுமையாக விமர்சிக்கும் ஊடகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதேவேளை, தனிப்பட்ட ஒரு நபருக்கோ, ஒரு நிர்வாகத்துக்கோ யாரிடமிருந்தும் ஒரு அச்சுறுத்தல் வந்தால் கண்டிப்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கலாம், வழக்குத் தொடுக்கலாம். சட்டத்தின் துணையும் பாதுகாப்பும் இருக்கும்போது யாரும் பயப்படத் தேவையில்லை'' என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

``ஊடகத்தில் இருப்பவர்களைக் குற்றம் சுமத்துவது, அவர்களின் பணிக்கு உள்நோக்கம் கற்பிப்பது, நெருக்கடி கொடுப்பது சரியா?''

``ஒரு விவாதத்தை நடத்துபவர்கள், அவருக்கென்று இருக்கின்ற கருத்துகளை அவரின் சமூக வலைதளத்தில் ஒரு சார்போடு பதிவிடுகிறார்கள். அப்படி இருக்கும்போது அவர்கள் எப்படி நடுநிலையோடு நடந்துகொள்வார்கள் என்கிற சந்தேகம் மக்களுக்கு எழுகிறது.''

வானதி சீனிவாசன்

``எனில், ஊடகங்களில் இருப்பவர்களுக்கு தனிப்பட்ட கருத்து என்று எதுவும் இருக்கக்கூடாது என்கிறீர்களா?''

``ஒரு நீதிபதி நீதிமன்றத்தில் சரியாக இருப்பேன், தனிப்பட்ட முறையில் எப்படி வேணாலும் இருப்பேன் எனச் சொல்ல முடியாது. அதுபோலத்தான் இதுவும். அரசு வேலையில் இருப்பவர்கள் அரசியல் கட்சிகளில் இருக்கக்கூடாது என விதிமுறை இருக்கிறது. அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கூடத்தான் இருக்கிறது. அதேபோல்தான், ஊடகத்தில் இருப்பவர்களுக்கு தனிப்பட்ட கருத்துகள் இருக்கலாம், ஆனால் அதை வெளிப்படுத்தும்போது, அது அவர்களின் நடுநிலைத்தன்மையோடு ஒப்பிட்டு பார்க்கப்படும்.''

Also Read: ``பா.ஜ.க-வின் `புராஜெக்ட் தமிழ்நாடு' திட்டத்தின் ஓர் அங்கம் ஊடகத் தாக்குதல்!'' - பத்திரிகையாளர் ஆர்.கே

``நீங்கள் இதுவரை பல தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறீர்கள், ஒருபக்க சார்போடு ஊடகவியலாளர்கள் யாரும் நடந்துகொண்டதாக நீங்கள் உணர்கிறீர்களா?''

``சில சமயங்களில் நெறியாளர்கள் கேட்கும் கேள்விகள் எதன் அடிப்படையில் வெளிப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். நான் வெளிப்படையாக யார் என்று சொல்ல விரும்பவில்லை. ஆனால், அவர்கள் கேட்கும் கேள்விகளிலிருந்தே அவர்களின் சிந்தனை வெளிப்பட்டுவிடும். நான் அதை நேரடியாகக் கேட்டுவிடுவேன். ஆனாலும், நான் அவர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதில் சொல்லத்தான் பெரும்பாலும் முயற்சி செய்வேன்.''

ராதாகிருஷ்ணன்

இறுதியாக, இப்படியொரு குழுவின் தேவை குறித்து, பத்திரிகையாளர், ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்,

``அதற்கான தேவை இருப்பது உண்மைதான். ஆனால், யார் செய்கிறார்கள் என்பதில் கவனமாக இருக்கவேண்டும். நடுநிலையான ஒரு அமைப்பு ஆரம்பித்திருந்தால் வலுவாக இருந்திருக்கும். எதிர்க்கட்சியின் தலைமையில் ஆரம்பிப்பது என்பது, பா.ஜ.க, அ.தி.மு.க இதுவரை ஊடகவியலாளர்கள் மீது சுமத்தி வருகிற குற்றச்சாட்டுகள் உண்மை என்றாகிவிடும். அரசியல் சாயம் பூசப்படும். பா.ஜ.கவின் அழுத்தம் ஊடகங்களுக்கு இருக்கிறது என்றால் எதிர்க்கட்சிகள் அதை அரசியல் தளத்தில்தான் எதிர்க்கவேண்டும்'' என்றார் அவர்.



source https://www.vikatan.com/government-and-politics/news/is-it-true-that-dmk-is-behind-the-actions-taken-against-maridhas-and-kishore-k-swamy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக