Ad

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

கோவை: பெற்றோரைப் பராமரிக்காத மகள் - சொத்துப் பத்திரத்தை ரத்துசெய்த கோட்டாட்சியர்!

மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டம். இப்படி ஒரு சட்டம் இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாது. படிக்க வைத்து, வளர்த்து, ஆளாக்கிய பெற்றோரை முதியோர் இல்லங்களிலும், தெருக்களிலும் கைவிடும் கொடுமைகள் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அந்தக் கொடுமைகளை தடுப்பதற்காகவும், வயதான காலத்தில் முதியோர்களை கைவிடாமல் பாதுகாப்பதற்கான பல விஷயங்களையும் உள்ளடக்கியதுதான் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டம் சட்டம்.

கோட்டாட்சியர் உத்தரவு

Also Read: “கிராமங்கள் இப்போ முதியோர் இல்லங்கள்!”

இந்நிலையில், அந்தச் சட்டத்தின் மூலம் கோவை மாவட்டம், அன்னூர் அருகே, பெற்றோரைப் பராமரிக்காத மகளிடம் இருந்து சொத்துப் பத்திரம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் பெற்றோருக்கே வழங்கி வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம், அன்னூர் வெள்ளாணைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். அவரது மனைவி துளசிமணி. அவர்களுக்கு ஜெயலட்சுமி, மனோரஞ்சிதம் என்று இரண்டு மகள்கள் உள்ளனர். மில் வேலைக்கு சென்று நடராஜன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். அவருக்கு 11 சென்டில் இடம் இருந்துள்ளது. அதை தனது இரண்டு மகள்களுக்கும் தலா ஐந்தரை சென்ட் என்ற ரீதியில் எழுதிக் கொடுத்துள்ளார். அதில், மனோரஞ்சிதத்துக்கு கொடுத்த இடத்தில் வீடு இருந்துள்ளது. `அந்த வீட்டில் நீங்களே தங்கிக் கொள்ளுங்கள்’ என மனோரஞ்சிதம் கூறியுள்ளார்.

துளசிமணி
நடராஜன்

இதையடுத்து, நடராஜனும், துளசிமணியும் அந்த வீட்டில்தான் வசித்து வருகின்றனர். இதனிடைய, வயது முதிர்வு, உடல்நிலை சரியில்லாமல் போனது போன்ற காரணங்களால் நடராஜனால் பணிக்குச் செல்ல முடியவில்லை.

தொடர்ந்து அவர்கள் கஷ்டப்பட்டதால், மனோரஞ்சிதம் அந்த வீட்டை தனது பெற்றோர் பெயருக்கே மாற்றிவிட்டார். ஆனால், ஜெயலட்சுமி தனது பெற்றோருக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று புகார் எழுந்தது. சரி நிலத்தையாவது கொடுங்கள் என்று கேட்டால், அதற்கும் ஜெயலட்சுமி மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வந்த நடராஜன், துளசிமணி, தங்களது நிலத்தை மீட்டு கொடுக்க சொல்லி, கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கோட்டாட்சியர் விசாரணை

இதையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் இரண்டு தரப்பினரையும் அழைத்து விசாரித்துள்ளார். அதில், நடராஜன் தம்பதிக்கு, ஜெயலட்சுமி எந்த விதத்திலும் உதவவில்லை என்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து, நிலத்தின் பத்திரப்பதிவை ரத்து செய்து, அவற்றை மீண்டும் நடராஜன், துளசிமணி பெயரில் தாக்கல் செய்ய கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நடராஜன், துளசிமணி தம்பதியை சட்டரீதியாக வழிநடத்திய கோவை வழக்கறிஞர் லோகநாதன், ``மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டம் நிச்சயம் வரவேற்கத்தக்க ஒன்று. இந்தச் சட்டத்தின்படி, சொத்துகளே இல்லாவிடினும் பெற்றோரை பராமரிக்கத் தவறும் வாரிசுகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். அதுவே, அவர்களின் சொத்துகளை வாங்கிவிட்டு, பராமரிக்கவில்லை என்றால், அந்த சொத்து பத்திரத்தை ரத்து செய்யவும் முடியும். இதே விஷயத்துக்காக நீதிமன்றம் சென்றால் அது ஆண்டுக்கணக்கில் இழுத்துக் கொண்டிருக்கும்.

லோகநாதன்

ஆனால், இந்தச் சட்டத்துக்கு அப்படி இல்லை. அந்தந்த பகுதிகளுக்குட்பட்ட வருவாய் கோட்டங்களுக்குட்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தாலே, விசாரித்துவிட்டு அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, இந்தச் சட்டத்தை அனைவரும் சரியான விதத்தில் பயன்படுத்தி, முதியோர்களை கைவிடும் நிலையைத் தடுக்க வேண்டும்” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-rdo-order-in-parent-daughter-land-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக