Ad

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

இலங்கையில் எம்.பி-க்கள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்?

கொரோனாவால் இரண்டு முறை தள்ளிவைக்கப்பட இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஒட்டுமொத்தமாக 2.17 கோடி மக்கள் தொகையைக் கொண்ட அந்த நாட்டில்,1.62 கோடிப்பேர் வாக்களிக்கத் தகுதியடையவர்களாக இருக்கிறார்கள். அதிகமான வாக்காளர்களை, (17,85,964) ஹம்பகா தேர்தல் மாவட்டம் கொண்டுள்ளது . மிகக் குறைந்த வாக்காளர்களை, (2,87,024) வன்னி தேர்தல் மாவட்டம் கொண்டுள்ளது.

நாடு முழுவதும்,12,984 வாக்களிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் சார்பில் 3,652 பேரும் சுயேட்சை குழுக்கள் சார்பில் 3,800 பேரும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். 75,000 போலீஸார் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு அங்கு குறைவுதான் என்றாலும், மக்கள் சமூக இடைவெளியுடன் வாக்களிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்களிப்பு மையங்களை அதிகரிப்பட்டுள்ளன. வாக்களிக்கும் நேரமும் ஒருமணிநேரம் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றம்

இலங்கை பாராளுமன்றத்துக்கு ஒட்டுமொத்தமாக 225 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களில், 196 பேர் வாக்களிப்பின் மூலமாகவும், 29 பேர் தேசியப் பட்டியல் மூலமாகவும் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தியாவைப் போல, அதிக வாக்குகள் பெற்றவர் வெற்றி, குறைந்த வாக்குகள் பெற்றவர் தோல்வி என்கிற நடைமுறை இலங்கையில் இல்லை. விகிதாச்சாரப் பிரதிநிதித்துவப் படியே உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்படுகின்றனர். அதன்படி, ஒரு கட்சி அல்லது சுயேச்சைக் குழுக்கள் ஒட்டுமொத்தமாகப் பெற்ற வாக்குகளின் அடிப்படையில், அந்தக் கட்சிக்கு உறுப்பினர் இடம் ஒதுக்கப்படும். இலங்கையில் 1978-ம் ஆண்டில் புதிய அரசியல் சாசனம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அதன் ஒரு பகுதியாக தேர்தல் நடைமுறைகளும் இப்படி மாறிவிட்டன.

தெற்காசியாவிலேயே ஜனநாயகமான மிகச்சிறந்த தேர்தல் முறையாக இலங்கையில் பின்பற்றப்படும் தேர்தல்முறை கருதப்படுகிறது. அதுகுறித்து, விரிவாகப் பார்ப்போம்.

இலங்கையில் ஒட்டுமொத்தமாக, 9 மாகாணங்களும், 25 மாவட்டங்களும் உள்ளன. ஆனால், தேர்தலுக்காக இவை, 22 மாவட்டங்களாகப் பிரிக்கப்படும். இப்படிப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக 160 தேர்தல் தொகுதிகள் இருக்கும். அதோடு ஒரு மாகாணத்துக்கு கூடுதலாக, 4 உறுப்பினர் என்கிற வகையில் மொத்தமுள்ள ஒன்பது மாகாணங்களுக்கு 36 பேர் என ஒட்டுமொத்தமாக 196 பேர் தேர்வு செய்யப்படுவர். ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களில் இருந்தும், மக்கள் தொகைக்கேற்ப உறுப்பினர் இடங்கள் இருக்கும். குறைந்தபட்சமாக திரிகோணமலை மாவட்டத்தில் இருந்து நான்கு உறுப்பினர்களும் அதிகட்சமாக கொழும்பு மாவட்டத்தில் இருந்து 19 உறுப்பினர்களும் தேர்தெடுக்கப்படுகின்றனர்.

தேர்தல் மாவட்டங்கள்

நம் நாட்டைப் போல, ஒரு தொகுதியில் ஒரு கட்சியின் சார்பாக ஒருவர்தான் போட்டியிட முடியும் என்கிற நடைமுறையும் அங்கு இல்லை. உதாரணமாக, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து, 7 உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்படுகின்றனர். ஆனல், இந்த மாவட்டத்தில் ஒரு கட்சியில் இருந்தே 10 பேர் போட்டியிடலாம். பத்துக்கும் குறைவாக உள்ள உறுப்பினர் எண்ணிக்கையைக் கொண்ட மாவட்டங்களில், 3 பேர் கூடுதல் வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். பத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் மாவட்டங்களில், ஆறு பேர் கூடுதல் வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். உதாரணமாக, திரிகோணமலை மாவட்டத்தில், ஏழு வேட்பாளர்களையும், கொழும்பு மாவட்டத்தில் 22 வேட்பாளர்களையும் ஒவ்வொரு கட்சி/சுயேச்சை குழுக்கள் சார்பில் நிறுத்தவேண்டும்.

 தேர்தல் நடைமுறை:

ஒரு வாக்குச் சீட்டில் மேலே கட்சிகளின் பெயர்கள் வரிசையாக இடம் பெற்றிருக்கும். அதில் நமக்கு விருப்பத்துக்குரிய கட்சிக்கு வாக்களிக்கலாம். அடுத்ததாக, அதே வாக்குச் சீட்டின் கீழ்ப்பகுதியில், தாம் ஆதரித்த கட்சியின் சார்பில் அந்தத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் தாம் விரும்பும் மூன்று பேருக்கு விருப்பு வாக்கையும் அளிக்க முடியும். ஆனால், இது கட்டாயமல்ல. அதாவது, தான் விரும்பும் கட்சிக்கு மட்டுமல்லாது, அந்தக் கட்சிக்குள்ளும் யாரை உறுப்பினராகக் கொண்டு வரவேண்டும் என்பதையும் மக்களே தேர்வு செய்யும் ஜனநாயகமும் இலங்கை தேர்தல் நடைமுறையில் உண்டு.

கீழே உள்ள வாக்குச்சீட்டு யாழ் தேர்தல் மாவட்டத்துக்கானது. ஏழு உறுப்பினர்களைக் கொண்ட இந்த மாவட்டத்தில் ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் பத்துபேர் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒன்று முதல் பத்து வரை ஒரு எண் வழங்கப்படும். வேட்பாளர்கள் `நான் இந்தக் கட்சி, என் எண் இது’ என்று சொல்லித்தான் வாக்கு சேகரிப்பார்கள்.

வாக்களிக்கும்போது, அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கும் ஒருவர், கீழே உள்ள பத்து இலக்கங்களில் அகில இந்தியக் காங்கிரஸில் தங்களின் விருப்பத்துக்குரிய 3 வேட்பாளர்ளை டிக் செய்து தேர்வு செய்ய முடியும்.

யாழ்ப்பாண தொகுதி வாக்குச் சீட்டு

தேர்தல் முடிந்தவுடன் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். வாக்கு எண்ணிக்கை கணக்கீடுகள் எல்லாம் ஒரு தேர்தல் மாவட்டம் என்கிற அளவில்தான் நடைபெறும். ஒரு மாவட்டத்தில், முதலில், அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகள் எண்ணப்படும். பிறகு சுயேட்சைக் குழுக்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். பின்னர் பதிவான வாக்குகளில் ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள்/சுயேச்சைக் குழுக்கள் போட்டியிலிருந்து விலக்கப்படுவார்கள். அந்த வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டு மீதமுள்ள வாக்குகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அடுத்ததாக, ஒரு மாவட்டத்தில் எந்தக் கட்சி/சுயேச்சை அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறார்களோ, அவர்களுக்கு ஒரு இடம் முதலில் வழங்கப்பட்டுவிடும்.

உதாரணமாக, ஆறு உறுப்பினர்களைத் தேர்வு செய்யவேண்டிய ஒரு தேர்தல் மாவட்டத்தில் 1 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். 5 சதவிகிதத்துக்கும் குறைவான வாக்குகளாக, கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெற்ற 10,000 வாக்குகள் என வைத்துக்கொண்டால் அந்த வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கபப்டும்.

மீதமுள்ள 90,000 வாக்குகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதில், கட்சி (அ) 17,000 வாக்குகள், கட்சி (ஆ) 38,000 வாக்குகள், கட்சி (இ) 15,000, கட்சி (ஈ) 20,000 வாக்குகள் பெறுகிறார்கள் என வைத்துக்கொண்டால் முதலில், 38 ஆயிரம் வாக்குகள் பெற்ற கட்சி (ஆ) வுக்கு ஒரு உறுப்பினர் வழங்கப்பட்டுவிடும்.

மீதமுள்ள, 5 இடங்களை ஒட்டுமொத்த வாக்குகளான 90 ஆயிரத்தை வகுக்க, 18,000 வரும். இதுதான் ஒரு உறுப்பினரைத் தேர்தெடுக்கத் தேவையான வாக்குகள். அதன்படி, முதல் சுற்றில் கட்சி (அ) வுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. கட்சி (ஆ) வுக்கு இரண்டு இடங்கள் கிடைக்கும் (மீதம் 2000), கட்சி (இ) வுக்கும் ஒரு இடம் கூட கிடைக்காது. கட்சி (ஈ) வுக்கு ஒரு இடம் கிடைக்கும் (மீதம் 2000). ஒட்டுமொத்தமாக உள்ள 5 இடங்களில் மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டன. இப்போது மீதமிருக்கும் 2 இடங்களுக்கான தேர்வு.

யாழ்ப்பாணம் 2015 தேர்தல் முடிவுகள்

இப்போது, கட்சி (அ) 17,000 வாக்குகளுடனும், கட்சி (ஆ) 2,000 வாக்குகளுடனும், கட்சி (இ) 15,000 வாக்குகளுடனும் கட்சி (ஈ) 2,000 வாக்குகளுடனும் இருப்பார்கள். இதில் அதிகமான வாக்குகளை வைத்திருக்கும் கட்சிகளுக்கு அந்த இடம் ஒதுக்கப்படும். அதன்படி கட்சி (அ) வுக்கும், கட்சி (இ) வுக்கும் ஒவ்வொரு இடங்கள் கிடைக்கும்.

இறுதியாக ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் என்று முடிவான பிறகு, அந்தக் கட்சிகளின் சார்பில் விருப்ப வாக்குகள் எந்த வேட்பாளருக்கு என்று பார்க்கப்படும். அந்தப் பட்டியலின் அடிப்படையில், அந்தக் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் கிடைத்துள்ளனவோ அதற்கேற்ற வகையில் மேலிருந்து கூடுதலாக வாக்குகள் பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அதேபோல 29 தேசிய இடங்கள் தேர்வு செய்யும் முறையைப் பார்ப்போம். இலங்கையில் ஒட்டுமொத்தமாக, 1.62 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். அதில், 1.5 கோடிப்பேர் ஒட்டுமொத்தமாக வாக்குச் செலுத்தியிருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அது அப்படியே 29 ஆல் வகுக்கப்பட்டால், 5,17,241 வாக்குகள் வரும். ஒவ்வொரு கட்சி அல்லது சுயேச்சைக் குழுக்கள் பெற்ற மொத்த வாக்குகளில் இதை வகுக்க எவ்வளவு வருகிறதோ அவ்வளவு இடங்கள் ஒவ்வொரு கட்சி/சுயேச்சைக் குழுக்களுக்கு ஒதுக்கப்படும். அதற்குப் பிறகும் இடங்கள் மீதமிருந்தால், மேலே குறிப்பிட்டதைப் போல, அதிக வாக்குகளைப் பெற்றவர்களுக்கு மேலிருந்து கீழ் வரிசையில் ஒதுக்கப்பட்டு அனைத்து இடங்களும் நிரப்பப்படும்.

இன்று மாலையில் இருந்தே வாக்கு எண்ணிக்கைகள் தொடங்கிவிடும். வாக்குகளை எண்ண, 71 வாக்கு எண்ணும் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழர் பகுதிகளான வடக்கு கிழக்கில், ஒட்டுமொத்தமாக 29 உறுப்பினர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள். பெரும்பான்மையான இடங்கள் சிங்களப் பகுதிகளில் இருந்தே தேந்தெடுக்கப்படுவதால், சிங்களக் கட்சிகளுக்கிடையேதான் பிரதான போட்டி இருக்கும். இதுவரை ராஜபக்சேவின் அணிக்குத்தான் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. பிரதான எதிர்க்கட்சியான, ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவுற்றிருக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்த, சஜித் பிரேமதேசா, ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் தனி அணியாகி, சிறுபான்மை முஸ்லிம் மற்றும் தமிழ்க் கட்சிகளை இணைத்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கி தேர்தலைச் சந்திக்கிறார். சிங்களக் கட்சிகள் மட்டுமல்ல, தமிழ்க் கட்சிகளும் பல பிரிவுகளாக நின்றே தேர்தலைச் சந்திக்கின்றன. தமிழ்த்தேசிய கொள்கையுடைய கட்சிகளே, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என மூன்று அணிகளாகப் பிரிந்து தேர்தலைச் சந்திக்கின்றன.

சண் மாஸ்டர்

இந்தத் தேர்தல் குறித்து, சென்னையில் வசிக்கும் ஈழத்தை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் பேசும்போது, ``இராஜபச்சே குடும்பத்தைப் பாதுகாத்து இன்று கோத்தபாய இலங்கையின் அதிபராக வருவதற்கான சூழ்நிலையை சம்பந்தர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உருவாக்கிய சூழலில் இந்தத் தேர்தல் எம் மக்கள் முன் வந்துள்ளது. இனப்படுகொலைக்கு நீதியைப் பெறவும், பொதுவாக்கெடுப்பின் வழி அரசியல் தீர்வு காண வேண்டும் என்று தமது தேர்தல் அறிக்கையில் முன்வைத்துள்ளவர்களைத்தான் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ்மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்ய வேண்டும். அதுவே இலங்கை தீவில் தமிழர்களின் இருப்புக்கும் வாழ்வுக்கும் உதவும்'' என்றார் அவர்.

Also Read: ``தமிழகத் தொழிலதிபர்கள் எங்கள் பகுதிகளில் முதலீடுகள் செய்ய வேண்டும்'' - விக்னேஸ்வரன் கோரிக்கை

தொடர்ந்து, ஜெனிவாவிலிருந்து, மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ பேசும்போது,

``கடந்தகாலத் தேர்தல்களில் தமிழர்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்ற தமிழ் அரசியல்வாதிகள் இணக்க அரசியல் என்ற பெயரில் தமிழர்களின் நலன்களைப் பலி கொடுத்து, தமிழின அழிப்பை பன்னாட்டு சமூகத்துக்கு எடுத்துச் சொல்லத் தவறிவிட்டனர். இனி வரும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களாவது தமிழர் நலன் கருதி தமிழ் உணர்வுடன் செயல்பட வேண்டும். தமிழ்த் தேசியத்துக்கு எதிர்த்திசையில் நின்று தமிழ் மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும், நீதிக்கான செயற்பாடுகளையும் கடந்தகாலங்களில் இருந்து இன்றுவரை கொன்றழித்தவர்களையும், சிங்களப் பேரினவாத கட்சிகளையும் அவர்களின் அடிவருடிகளான ஒட்டுக் குழுக்களையும் இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும்.

அடுத்ததாக, தமிழின அழிப்பு குறித்து தமிழ்நாடு சட்டசபையிலும், இலங்கை வடக்கு மாகாண சபையிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் பன்னாட்டுப் பாராளுமன்றங்கள் மத்தியில் நாம் கொண்டு சேர்க்க வேண்டும். தமிழின அழிப்பு, மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் புரிந்த பேரினவாத இலங்கை அரசும் அதன் அரசியல் தலைவர்களும், இராணுவத் தலைவர்களும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்'' என்கிறார் அவர்.

பொஸ்கோ

பொதுவாக இலங்கையில் அதிபர் தேர்தலோ, பிரதமர் தேர்தலோ, தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களக் கட்சிகளுக்குக்கான சிங்களர் ஒருவரை அதிபராகவோ, பிரதமராகவோ தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலாகத்தான் இருக்கும். மாகாண சபைத் தேர்தல்கள் மட்டுமே தமிழருக்கான குறைந்தபட்ச அதிகாரத்துக்கான தேர்தலாக இருக்கும். ஆனால், இந்தத் தேர்தலில் பெரும்பான்மை என்பதைத்தாண்டி, மூன்றில் இரண்டு பங்கு இடங்களைப் பெற்றுவிட வேண்டும் என்பதே ராஜபக்சே சகோதரர்களின் எதிர்பார்ப்பு. அப்போதுதான், ஜனாதிபதிக்கு இருந்த அளவு கடந்த அதிகாரத்தைக் குறைக்க, மைத்திரிபால சிரிசேனா ஆட்சியில் செய்யப்பட்ட 19-வது சட்டத்திருத்தத்தை மாற்ற முடியும்.

அதற்காகவே கொரோனாவை இராணுவத்தின் துணைகொண்டு ஒழித்த கையோடு தேர்தலையும் நடத்திவிடத் துடித்தார்கள்... அவர்கள் விருப்பப்படி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களைப் பெறுகிறார்களா, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத் தமிழ் மக்களின் ஆதர்ச அரசியல் அமைப்பாக இருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக களமிறங்கியிருக்கும் அணியினரை தமிழ் மக்கள் தேர்தெடுத்திருக்கிறார்களா என்பது நாளை அல்லது நாளை மறுநாள் தெரிந்துவிடும்." என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/international/a-detailed-explainer-for-sri-lankas-parliamentary-electoral-process

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக