Ad

புதன், 19 ஆகஸ்ட், 2020

தஞ்சாவூர்: `படமெடுத்து நின்ற பாம்பு; பதறிய தொண்டர்கள்!’ - சசிகலா பிறந்தநாள் நிகழ்ச்சி சென்டிமென்ட்

சசிகலாவின் பிறந்தநாள் நிகழ்ச்சி தஞ்சாவூர் விளாரில் உள்ள அவரது கணவர் ம.நடராசன் சமாதியில் நேற்று நடைப்பெற்றது. அப்போது அப்பகுதிக்கு நல்ல பாம்பு ஒன்று வந்து படமெடுத்து நின்றதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சசிகலா

தஞ்சாவூர் அருகே விளார் பகுதியில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு அருகே சசிகலா கணவர் நடராசன் சமாதி இருக்கிறது. நேற்று சசிகலாகவின் பிறந்த நாளை ஒட்டி சசிகலா பேரவையில் இணைந்துள்ள உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடராசன் சமாதியில் நடைபெற்றது. இதற்காக சசிகலா பேரவையைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள், அந்த இடத்தில் கூடியிருந்தனர்.

அப்போது சமாதிக்கு எதிரே சற்று தொலைவில் உள்ள சிறிய மரத்திலிருந்து நல்ல பாம்பு ஒன்று கிழே இறங்கியது. இதைக் கவனித்த தொண்டர்கள் பலர், பாம்பு எனக் கத்தியதால் அந்த இடம் பரபரப்படைந்தது. அங்கிருந்த சிலர் அந்தப் பாம்பை அடிக்க முயன்றனர். அரை மணி நேரத்திற்கு மேலாக அந்த பாம்பு, படமெடுத்து நின்றதுடன் அங்கு இங்கும் ஓடிக் கொண்டிருந்தது. இதையடுத்து, சிலர் பாம்பை அடித்து வீசினர். சசிகலா பிறந்தநாள் நிகழ்ச்சியின்போது பாம்பு வந்ததை சிலர் அபசகுணமாகக் கருதி வருத்தப்பட்டனர்.

பாம்பு

Also Read: `இதற்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டோம்?' - சசிகலா போடும் சிறைக் கணக்கு; விவரிக்கும் உறவுகள்

என்ன நடந்தது என விசாரித்தோம். ``மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் 66-வது பிறந்த நாள் நேற்று தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் கொண்டாடப்பட்டது. இதற்காகப் பல பகுதிகளில் வருங்கால முதல்வரே, ராஜமாதவே, இரும்புப் பெண்மணிக்கு பாதுகாவலராக இருந்தவரே, தியாகமே போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கும் முயற்சியில் பலர் சசிகலாவை வாழ்த்தி பதிவிட்டிருந்தனர்.

மேலும், பல கோயில்களில் சிறப்புப் பூஜைகள் செய்யப் பட்டதுடன், மரக்கன்று, மாஸ்க், புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இந்நிலையில், சசிகலா பெயரில் பேரவை தொடங்கியுள்ள நிர்வாகிகள், அதற்கான உறுப்பினர்களைச் சேர்த்து வருகின்றனர்.

சசிகலா பிறந்தநாள் நலதிட்ட உதவிகள்

பேரவையில் சேர்ந்துள்ள உறுப்பினர்களுக்கு சசிகலாவின் பிறந்தநாளில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடராசன் சமாதியில் நடைபெற்றது. சசிகலா பேரவையின் நிர்வாகிகள், நடராசன் சமாதி மேடையில் அடையாள அட்டைகளை வைத்து எடுத்ததுடன், அதனை உறுப்பினர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தனர்.

Also Read: `சசிகலா ரீ-என்ட்ரி’, தினகரனுக்கு பா.ஜ.க-வின் `ஸ்கெட்ச்..!’ - டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்

இதனால், அந்த இடத்தில் ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த மரத்திலிருந்து நல்ல பாம்பு ஒன்று இறங்கியது. இதனால், அந்த இடமே பரபரப்படைந்தது. சிலர், அந்த பாம்பை அடிக்க முயற்சி செய்தனர். அப்போது தொண்டர் ஒருவர், `இன்னைக்கு சின்னம்மா பிறந்த நாள். பாம்பை அடிக்காதீங்க’ எனக் கத்தினார்.

பாம்பு

இதையடுத்து படமெடுத்தபடி நின்ற பாம்பு, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவில் ஏறியது. பின்னர், இருசக்கர வாகனம் ஒன்றில் ஏறியதுடன், ஹெட்லைட் உள்ள பகுதிக்கு சென்றது.நீண்ட போராட்டத்திற்கு பிறகு, அதிலிருந்து வெளியே வந்த பாம்பை, அங்கிருந்த ஒருவர் வாலில் அடிக்க, பதறிய மற்றொருவர், `அடிக்காதீங்க விட்டுவிடுங்க’ என்றார்.

`பாம்பை அடித்து விட்டு பாதியில் விடக்கூடாது’ எனக் கூறிய அவர் மேலும் அடித்து வீசினார். சசிகலா பிறந்தநாள் நிகழ்ச்சியைக் கொண்டாடியவர்கள் இதனை சென்டிமென்டாகக் கருதியதால் விரைவாக நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சென்றனர். சிலர், `இன்னைக்குப் போய் பாம்பு வந்து விட்டதே’ என அபசகுணமாகக் கருதி வருத்தப்பட்டு புலம்பிச் சென்றனர். இதனால், அரை மணி நேரத்திற்கு மேலாக அந்த படமே பரபரப்புடன் காணப்பட்டது’’ என்றனர்.

Also Read: `அ.தி.மு.க-வின் எதிர்காலம் சசிகலா கையிலா?' - கொதிக்கும் அமைச்சர்கள்; மௌனம் காக்கும் சீனியர்கள்

சசிகலா பேரவையைச் சேர்ந்தவர்கள் தரப்பில் பேசினோம். ``சமாதிக்கு சற்று தொலைவில்தான் பாம்பு வந்தது. இதனால், நிகழ்ச்சி தடைபடவில்லை. அந்த வழியாக வந்த சிலர், பாம்பை அடித்தனர். நாங்கள் இதனைப் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது’’ என்றனர்.



source https://www.vikatan.com/news/politics/cadres-organised-sasikala-birthday-function-in-tanjore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக