Ad

புதன், 19 ஆகஸ்ட், 2020

``உயிரைக் காப்பாற்ற மருத்துவராக மட்டுமே இருக்கவேண்டியதில்லை!" கொரோனா அனுபவம் பகிரும் மருத்துவர்

`தானத்தில் சிறந்தது ரத்ததானம்' என்பது நாமறிந்ததே. கொரோனா பெருந்தொற்று பரவிவரும் இந்தச் சூழலில் பிளாஸ்மா தானமும் சிறந்த தானமாகியிருக்கிறது. பொதுவாக, ஒருவரிடமிருந்து பெறும் ரத்ததானம் மூன்று உயிர்களைக் காப்பாற்ற உதவும். கொரோனா காலத்தில் செய்யும் பிளாஸ்மா தானம் நான்கு பேரின் உயிரைக் காப்பாற்ற உதவும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற பல்வேறு சிகிச்சைகள் நடைமுறையில் இருக்கின்றன. அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களிடமிருந்து பெறப்படும் பிளாஸ்மா தானத்தின் மூலமும் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க முடியும்.

அதாவது காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்கள் மட்டுமே பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும். காரணம், அறிகுறிகளுடன் தொற்று ஏற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புப்பொருள் (ஆன்டிபாடி) உடலில் உருவாகியிருக்கும். அவர்களின் பிளாஸ்மாவை தானம்பெற்று நோயாளிகளுக்குச் செலுத்தும்போது நோயிலிருந்து விரைவில் மீள முடியும்.

இதற்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் தன் நோயாளிகளுக்கு பிளாஸ்மா தேவைப்பட்டபோது தானமளித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பன, தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்து வருகிறார். இவர் அண்மையில் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்திருக்கிறார்.

``கொரோனா நோயாளிகளுக்கு ஒன்றரை மாதங்களாகத் தொடர்ச்சியாகச் சிகிச்சையளித்துக்கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் எனக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சிகிச்சையளித்ததால் தொற்று பாதிக்காமல்தான் இருந்தது. எங்கள் வீட்டுக்கு வந்த நண்பர் ஒருவரிடமிருந்துதான் எனக்குத் தொற்று பரவியது.

என் மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த நண்பர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு காய்ச்சல் இருந்திருக்கிறது. அதை அவர் எங்களிடம் சொல்லவில்லை. வீட்டுக்கு வந்து பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டுப் போய்விட்டார்.

அவர் வந்து சென்ற மறுநாளே எனக்கு காய்ச்சல் ஏற்பட்டது. என்னைத் தொடர்ந்து என் மனைவிக்கும் காய்ச்சல் வந்தது. பரிசோதித்துப் பார்த்ததில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. லேசான பாதிப்பு என்பதால் வீட்டிலேயே என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டேன்.

Dr.Ashwin Karupan

ஒருநாள் மட்டுமே காய்ச்சல் இருந்தது. ஆனால், அதிக சோர்வு இருந்தது. நெஞ்சுப் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்தபோது பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. அடுத்த சில நாள்களில் இருமல் இருந்தது. அதன்பிறகு மீண்டும் பரிசோதனை செய்து பார்த்தபோது நுரையீரலில் லேசான தொற்று காணப்பட்டது. வீட்டிலிருந்தே தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டதால் நோய்த் தாக்கத்திலிருந்து குணமடைந்தேன்.

14 நாள்கள் க்வாரன்டீனுக்குப் பிறகு மருத்துவமனைக்குப் பணிக்குச் சென்றுவிட்டேன். மீண்டும் கோவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கவே சென்றேன்" கொரோனாவிலிருந்து மீண்ட தருணத்தைப் பகிர்ந்தார்.

பிளாஸ்மா தானம் கொடுக்க வேண்டும் என்று எப்படித் தோன்றியது என்று கேட்டோம்.

``விதிகளின்படி தொற்று ஏற்பட்ட நான்கு வாரங்களுக்குப் பிறகு ஒருவர் பிளாஸ்மா தானம் கொடுக்கலாம். நான் கொரோனா வார்டில் சிகிச்சையளித்துக் கொண்டிருந்தபோது சிலர் தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கு பிளாஸ்மா தேவைப்பட்டது.

அப்போது பிளாஸ்மா தானமளிப்பவர்கள் யாரும் கிடைக்கவில்லை என்பதால் பிளாஸ்மா சிகிச்சை தாமதமாகியது. இனியும் தாமதப்படுத்தக்கூடாது என்பதற்காக நானே தானம் கொடுப்பதற்குத் தீர்மானித்தேன். என் மனைவியையும் தானம் கொடுக்குமாறு அழைத்தேன். மனைவி எடை குறைவாக இருந்ததால் அவரிடமிருந்து தானம் பெற முடியவில்லை.

plasma donation

இதையடுத்து நான் மட்டுமே பிளாஸ்மா தானம் அளித்தேன். 400 மில்லி ரத்தம் தானம் பெறப்பட்டு, அதிலிருக்கும் பிளாஸ்மா பிரிக்கப்பட்டு நான்கு கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. பிளாஸ்மா சிகிச்சை பெற்ற நால்வரும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள். நோயாளிகளுக்கு நான்தான் தானம் கொடுத்தேன் என்பது தெரியாது.

அதில் ஒருவர் மட்டும் எங்கள் ஊழியரின் உறவினர் என்பதால் அவருக்கு விஷயம் தெரிந்துவிட்டது. `நான் இன்று உயிர் பிழைத்திருக்கிறேன் என்றால், அது உங்களுடைய சிகிச்சையினால் மட்டுமல்ல... உங்கள் பிளாஸ்மா தானத்தினாலும்தான்' என்று நெகிழ்ச்சியுடன் பேசிவிட்டுச் சென்றார்.

ஒரு நோயாளியைக் காப்பாற்றுவதற்கு மருத்துவராகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சாதாரண மனிதனாக பிளாஸ்மா தானத்தின் மூலம் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதை உணர்ந்த தருணம் அது. ஒரு நோயாளியாகவும், ஒரு மருத்துவராகவும், பிளாஸ்மா தானமளித்தவனாகவும் அனைத்துச் சூழல்களையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

treatment

Also Read: கொரோனா: பிளாஸ்மா தானம்; அரசு வேலையில் முன்னுரிமை! - அஸ்ஸாம் அரசின் அதிரடி அறிவிப்பு

நான் தானம் கொடுத்ததை அறிந்த என்னுடைய நோயாளிகள் 15 பேர் அவர்களாகவே முன்வந்து பிளாஸ்மா தானம் கொடுத்தனர். மருத்துவரே தானமளிக்கிறார் என்றால் பிளாஸ்மா தானம் பாதுகாப்பானதுதான் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டு அவர்களும் தானமளித்துச் சென்றனர். அவர்கள் தானத்தின் மூலம் 60 கொரோனா நோயாளிகள் காப்பாற்றப்பட்டனர். வாயால் சொல்வதைவிட ஒரு நல்ல விஷயத்தை நாம் செய்து காட்டும்போது அதைப் பலரும் பின்பற்றுவார்கள் என்ற நம்பிக்கையும் பிறந்தது" என மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார் மருத்துவர்.



source https://www.vikatan.com/health/healthy/doctor-shares-his-covid-19-recovery-experience-and-importance-of-plasma-donation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக