Ad

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

புதுச்சேரி: `பஞ்சாலைக்கு நிரந்தர பூட்டு’ - கொதிக்கும் அனைத்துக் கட்சி தலைவர்கள்

8 மணி நேர வேலைக்கு வித்திட்ட தொழிற்சாலை:

போர்த்துக்கீசியர்களுக்கு அடுத்து 1618-ம் ஆண்டு புதுச்சேரிக்கு வந்த டச்சுக்காரர்கள் துணி ஏற்றுமதியில்தான் அதிக கவனம் செலுத்தினார்கள். அவர்களுக்குப் போட்டியாக புதுச்சேரியில் கால் பதித்த பிரெஞ்சுக்காரர்கள், சவானா மில்(சுதேசி காட்டன் மில்), கெப்ளே மில்(ஸ்ரீபாரதி மில் லிமிடெட்), ரோடியர் மில்(ஆங்கிலோ-பிரெஞ்ச் டெக்ஸ்டைல்ஸ்) என்ற மூன்று பிரதான தொழிற்சாலைகளை நிறுவினர். பிரெஞ்சிந்தியாவின் இந்த மூன்று தொழிற்சாலைகளிலும் 1902-ம் ஆண்டுவாக்கில் சுமார் 5,500 தொழிலாளர்கள் பணியாற்றினர். 1908-ம் ஆண்டு மே மாதம் ஊதிய உயர்வுக்காக ரோடியர் மில்லில் (தற்போது மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் தொழிற்சாலை) ஏற்பட்ட போராட்டம்தான் ஆசியாவில் 8 மணி நேர வேலைக்கு வழிவகுத்தது.

புதுச்சேரி அரசு

அதன்பிறகு நீண்டநாள் மூடப்பட்ட இந்த தொழிற்சாலை 1985-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியின் முயற்சியால், புதுச்சேரி நெசவாலை கழகத்தின் கீழ் ‘ஆங்கிலோ பிரெஞ்ச் டெக்ஸ்டைல்ஸ்’ என பெயர் மற்றம் செய்து இயக்கப்பட்டது. புதுச்சேரியில் வெவ்வேறு இடங்களில் 5 யூனிட்டுகளாக இயங்கிய இந்த தொழிற்சாலை சுமார் 18,000 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியது. இந்தியாவில் விளையும் பஞ்சை நூலாக்கி, துணியாக நெய்து, சாயமேற்றி ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சிறப்பாக செயல்பட்டடது இந்த தொழிற்சாலை. ஆனால் அங்கு நடைபெற்ற முறைகேடுகள், நிர்வாகச் சீர்கேடுகள், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தாதது, இயந்திரங்களை நவீனப்படுத்தாதது உள்ளிட்ட காரணங்களால் ரூ.800 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

ஆளும்கட்சி எம்.எல்.ஏ அதிருப்தி:

2011-ல் வீசிய தானே புயல் காரணமாக ’ஏ’ மற்றும் ’பி’ யூனிட்டுகள் முழுமையாக சேதமடைந்து முடங்கியது. அதனால் அங்கு வேலை செய்த பணியாளர்களுக்கு லே-ஆஃப் அடிப்படையில் பாதி சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில்தான் புதுச்சேரி அரசின் கொளை முடிவின் அடிப்படையில், தொழில் தகராறு சட்டம் 1947 பிரிவு 25 ‘O’-ன் படி ஆலையின் அனைத்து யூனிட்டுகளும் நிரந்தரமாக மூடப்படுகிறது’ என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் ஆலையின் மேலாண் இயக்குநர் பிரியதர்ஷினி. இந்த அறிவிப்புதான் தற்போது புதுச்சேரியில் புயலைக் கிளப்பியிருக்கிறது.

கிரண் பேடி - நாராயணசாமி

இந்த அறிவிப்பு நோட்டீஸை ’கொடுமை’ என்ற வாசகத்துடன் தனது முகநூலில் பதிவிட்டிருக்கும் முதல்வரின் நாடாளுமன்றச் செயலரும், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவுமான லட்சுமி நாராயணனிடம் பேசினோம். ``தேர்தல் அறிக்கையில் தொழிற்சாலையை லாபகரமாக இயக்குவோம் என்று கூறிவிட்டு தற்போது அதனை மூடியிருப்பது வேதனையான விஷயம். தொழிற்சாலையை மீண்டும் இயக்குவதற்காக அமைக்கப்பட்ட விஜயன் தனிநபர் கமிட்டியின் அறிக்கை அதனை மூட வேண்டும் என்று கூறியதை என்னவென்று சொல்வது ?

’தொழிற்சாலையை மூடுவதற்கா ஆட்சிக்கு வந்தோம் ?’

மூடுவதற்காகவா நாம் ஆட்சிக்கு வந்தோம் என்று அமைச்சரவையில் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து ‘ஏ’, ‘பி’ மற்றும் ’சி’ யூனிட்டுகளை மட்டும் தொடர்ந்து இயக்கலாம் என்று முடிவெடுத்து கோப்பு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் மகா நல்லவரான ஆளுநர் கிரண் பேடி, ‘நீங்கள் அமைத்த கமிட்டியே மூடவேண்டும் என்று கூறிவிட்டபோது ஏன் இயக்க வேண்டும்? மூடுங்கள்’ என்று கூறிவிட்டார். அதற்கும் ஒப்புக்கொண்ட அரசு, வி.ஆர்.எஸ் கொடுத்துவிட்டு மூடுகிறோம் என்றது. ஆனால் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் மூடியே ஆகவேண்டும் என்று அவர் முரண்டு பிடித்ததால், கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன்

கமிட்டியின் அறிக்கையை அமல்படுத்தும்படி கைவிரித்துவிட்டது மத்திய அரசு. மாநில அரசு அமைத்த அந்த கமிட்டியின் அறிக்கை இதுவரை பேரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்படவில்லை. ஆனால் அதனை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சாலை மூடப்பட்டுவிட்டது. மில்லின் மதிப்பு ரூ.1,000 கோடி என்கிறது கமிட்டியின் அறிக்கை.

இந்திய ராணுவத்துக்கு துணி சப்ளை:

ஆனால் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய அனைத்து சலுகைகளும் வெறும் ரூ.200 கோடிக்குள் தான் வருகிறது. அதனால் மில்லுக்கு சொந்தமான பிற பகுதிகளை விற்று அவர்களுக்கு செட்டில்மெண்ட் கொடுத்துவிட்டு, அதே இடத்தில் தனியாருடன் இணைந்து வணிக நிறுவனங்களை ஏற்படுத்தி 10,000 தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும்” என்கிறார் வேதனையுடன்.

எம்.எல்.ஏ சிவா (தி.மு.க)

இதுகுறித்து நம்மிடம் பேசிய கூட்டணிக் கட்சியான தி.மு.கவின் எம்.எல்.ஏ சிவா, ”புதுச்சேரி மண்ணின் வாழ்வாதாரத்துடன் இணைந்ததுதான் ஏ.எஃ.ப்.டி மில். அதனை மையப்படுத்திதான் புதுச்சேரியின் வளர்ச்சி இருந்தது. வெளிநாடுகள் மட்டுமல்லாமல் இந்திய இராணுவத்திற்கும், பாராசூட்டிற்கும் இங்கு தயாரிக்கப்படும் துணிகள் சப்ளை செய்யப்பட்டது.

’பஞ்சாலை குறித்த புரிதல் இல்லாத அதிகாரி’

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தொழிற்சாலையை மூடுவது குறித்து, கூட்டணிக் கட்சியான எங்களிடம் ஒரு வார்த்தை கூட கலந்தாலோசிக்காமல் அறிவிப்பு வெளியிட்டிருப்பதை தி.மு.க வன்மையாகக் கண்டிக்கிறது.

எம்.எல்.ஏ அன்பழகன் (அ.தி.மு.க)

30.04.2020 அன்றே மில் மூடப்பட்டுவிட்டதாக அதன் நிர்வாக இயக்குநர் 13.08.2020-ல் அறிக்கை வெளியிடுகிறார். இத்தனை மாதங்களாக அந்த விவகாரத்தை அரசு மூடி மறைத்தது ஏன்? முதல்வருக்கே தெரியாமல் இந்த அறிவிப்பு வெளியாவது எப்படி சாத்தியம்? வீட்டிற்கு ஒருவருக்கு வேலை கொடுப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்து அரசு சார்பு நிறுவனங்கள், ரேஷன் கடைகள் என அனைத்தையும் முடிவிட்டு, தற்போது ஏ.எஃ.ப்.டி மில்லை மூடியிருப்பது கண்டிக்கத்தக்கது” என்றார். நம்மிடம் பேசிய அ.தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன், “பஞ்சாலை சம்பந்தமாக குறைந்தபட்ச அடிப்படை விஷயம்கூட தெரியாத ஒரு அதிகாரியின் அறிக்கையை மையப்படுத்தி ஆளும் காங்கிரஸ் அரசு தொழிற்சாலையை நிரந்தரமாக மூடும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

’ஆளுநர் கிரண் பேடியின் முடிவு’

51 மாத கூட்டணி ஆட்சியில் புதிதாக ஒரு தொழிற்சாலையும் கொண்டுவராமல், 500 தொழிற்சாலைகள் இதோவருகிறது, அதோ வருகிறது என்ற பொய்யான தகவலைக் கூறி அரசு சார்பில் நடத்திவந்த அனைத்து நிறுவனங்களையும் காங்கிரஸ் அரசு மூடிவிட்டது. அரசால் அமைக்கப்படும் எந்த ஒரு கமிஷனாக இருந்தாலும் அதன் அறிக்கையை சட்டமன்றத்தில் வைத்து சாதக பாதகங்களை விவாதிப்பதுதான் அரசின் கடமை. ஆனால் இந்த விவகாரத்தில் ஜனநாயகம் மீறப்பட்டிருக்கிறது” என்றார்.

Also Read: `அமைச்சரவைக்கே தெரியாமல் அறிவிப்பு; குடியரசுத் தலைவர் ஆட்சி!' - கொதிக்கும் புதுச்சேரி மக்கள்

இதுகுறித்து விளக்கம் கேட்க முதல்வர் நாராயணாசாமியை தொடர்கொண்டபோது, “தொழிற்சாலையை மூடுவது குறித்த அந்த அறிவிப்பு ஆளுநர் கிரண்பேடியுடையது. அதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்” என்றார். ஆளுநர் கிரண் பேடியை தொடர்புகொண்டபோது, ‘இந்த விவகாரத்துக்கு பெரிய பின்னணி இருக்கிறது. ஆளுநரின் செயலர் பேசுவார்” என்று முடித்துக்கொண்டார். ஆளுநரின் செயலர் தேவநீதிதாசை தொடர்புகொண்டபோது, “மீட்டிங்கில் இருக்கிறேன்” என்று முடித்துக்கொண்டார்.



source https://www.vikatan.com/news/india/congress-party-has-decided-to-close-aft-ginning-factory-without-any-monitation-in-puducherry-2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக