கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டிமுடி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி இரவு ஏற்பட்ட நிலச்சரிவில், சிக்கி 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆகஸ்ட் 7ம் தேதி முதல், இன்று வரை, மண்ணில் புதையுண்ட நபர்களின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழு, கேரள காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை, தன்னார்வ மீட்புக் குழுவினர்கள் என தொடர்ந்து 13 -வது நாளாக சம்பவ இடத்தில் உடல்களை தேடி வருகிறார்கள்.
Also Read: மூணாறு நிலச்சரிவு: `நீரோடையில் 12 உடல்கள்...’ - கைவிடப்படுகிறதா தேடுதல் பணி?
நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தின் அருகே ஓடக்கூடிய நீரோடையில், உடல்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஓடையில் கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட தேடும் பணியில், சிறுமி ஒருவரின் உடல் உட்பட சிலரது உடல்கள் மீட்கப்பட்டது. தொடர்ந்து நீரோடையில் தேடும் பணிகள் நடந்துவந்தாலும், நிலச்சரிவு ஏற்பட்டு, வீடுகள் மண்ணில் புதைந்துபோன இடத்திலும் அதிநவீன ஆய்வுக் கருவிகள் கொண்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருந்து ரேடார் கருவி ஒன்று நேற்று கொண்டுவரப்பட்டது. இந்த ரேடார் கருவியானது, 6 மீட்டர் ஆழத்தில் இருக்கும் உடல்களைக் கூட கண்டுபிடிக்கக் கூடிய திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம், சிறுவன் உடல் உட்பட மூவரின் உடல்கள் மீட்கப்பட்டது. இதன் மூலம் இதுவரை 61 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், 9 நபர்களின் உடல்கள் தேடும் பணி நடக்கிறது. நேற்று மீட்கப்பட்ட உடல்களில் இருவரது உடல்கள் அடையாளம் காணப்பட்டாலும், ஒரு நபரின் உடல் மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததால், டி.என்.ஏ சோதனைக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சம்பவம் நடந்து 13 நாட்கள் ஆன நிலையில், இனி மீட்கப்படும் உடல்கள் அனைத்தும் சிதைந்த நிலையிலேயே இருக்கக் கூடும் என கூறுகின்றனர் மீட்புக் குழுவினர்.
Also Read: மூணாறு நிலச்சரிவு: காணாமல் போன 15 பேரின் உடல்கள்! - நீரோடையில் தேடும் பணியில் 500 பேர்
நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தின் அருகே உள்ள ராஜமலை இரவிக்குளம் தேசியப் பூங்கா, 7 மாதங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்படுகிறது. வரையாடுகளுக்கு புகழ் பெற்ற இரவிக்குளம் தேசியப் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளை, மூணாறில் இருந்து பேருந்து மூலம் அழைத்துவரவுள்ளது பூங்கா நிர்வாகம். மிக குறுகிய ஒருவழி மலைப்பாதையாக இருப்பதால், சுற்றுலாப்பயணிகள் பேருந்தும், மீட்புக் குழுவினர்களின் வாகனமும் மலைப்பாதையில் சிக்கிக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. துயரச் சம்பவம் ஒன்று நடந்துள்ள பகுதியில், இன்னும் பலரது உடல்களின் நிலை என்னவென்று தெரியாத சூழலில், பூங்காவை திறப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/india/decomposed-bodiesdecided-to-do-a-dna-test-in-munnar-landslide
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக