தஞ்சாவூர் அருகே விபத்து ஒன்றில் ஒற்றை காலை இழந்த ஒருவர், தன்னம்பிக்கையோடு உழைத்து குடும்பத்தை நடத்தி வந்த நிலையில் கொரோனா லாக்டெளனால் வேலையை இழந்து தவித்து வருகிறார். இதற்கிடையே விபத்திற்குறிய இழப்பீடு கேட்டு அதற்கான ஆவணங்களை வக்கீலிடம் கொடுப்பதற்காக சைக்கிலேயே மதுரை சென்றவரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
தஞ்சாவூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (40). விபத்து ஒன்றில், தனது இடது காலை இழந்தவர். இவரது மனைவி தேவி (35) இவர்களுக்கு இரண்டு ஆண்,1 பெண் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். ராஜா, தனியார் பிரிண்டிங் பிரஸ் ஒன்றில் கோயிலுக்கு வீபூதி பாக்கெட் ஒட்டி கொடுக்கும் வேலையை வீட்டிலிருந்தபடியே செய்து வருகிறார்.
இந்நிலையில், கொரோனா பரவுதலைத் தடுப்பதற்காக கோயில்கள் அனைத்தும் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருக்கின்றன. இதனால், வேலையை இழந்த ராஜா, வருமானம் ஏதுமின்றி குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருகிறார்.
இதற்கிடையே, விபத்தில் கால் இழந்த தனக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை என அதனை பெறுவதற்காக வக்கீல்கள் உதவியுடன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்து போராடிக் கொண்டிருக்கிறார். இந்த வழக்கிற்காக விபத்து குறித்த, தன்னுடைய ஆவணங்களை தனது வக்கீலிடம் ஒப்படைப்பதற்காக தன்னம்பிக்கையோடு தஞ்சாவூரிலிருந்து மதுரைக்கு சைக்கிலேயே சென்ற ராஜாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து ராஜாவிடம் பேசினோம். ``என் சின்ன வயசிலேயே என்னுடைய பெற்றோர் என்னை விட்டுட்டு சென்று விட்டனர் அதன் பிறகு பாட்டிதான் என்னை வளர்த்து ஆளாக்கினார். 14 வயசுல டீக்கடை ஒன்றில் வேலைபார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது வேன் மூலம் மதுரைக்கு சுற்றுலா சென்றபோது மேலூர் அருகே வேன் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், எனது இடது காலை இழக்கும் நிலை ஏற்பட்டது எப்போதும் துறுதுறுவென இருந்து வேலைசெய்து கொண்டே பிழைத்து வந்த என்னுடைய வாழ்கையை அந்த விபத்து தலைகீழாக மாற்றியதுடன், ஒரே இடத்தில் என்னை முடக்கிவிட்டது. அதன் பிறகு என்னுடைய தன்னம்பிக்கையால் கொஞ்சம்கொஞ்சமாக அதிலிருந்து வெளியே வரத் தொடங்கியதுடன், கோயில்களுக்கு விபூதி கொடுக்கும் பாக்கெட் மடித்துக் கொடுக்கும் வேலையை செய்யத் தொடங்கினேன்.
ஒரு காலை இழந்தாலும் யாருக்கும் பாரமாக இருக்கவில்லை என்னுடைய தன்னம்பிக்கை பார்த்த தேவி, அந்த நிலையிலும் என்னைத் திருமணம் செய்து கொண்டாள். அதன்பிறகு எனக்கு என குடும்பம் ஒருவானது. இதற்கிடையே விபத்து வழக்கில் எனக்கு சரியான இழப்பீடு கிடைக்கவில்லை. பின்னர், தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டேன்.
அங்கே எனக்கு கருணையின் அடிப்படையில் ரூ.1,17,000 இழப்பீடு கொடுக்க உத்தரவிட்டனர். இப்படியே ஆண்டுகள் பல ஓடி விட்டன. இப்போது எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக கோயில்கள் மூடப்பட்டதில், நான் விபூதி பாக்கெட் மடித்து கொடுக்கும் வேலையை இழந்து விட்டேன். அதனால் வருமானம் ஏதுமின்றி தவிக்கிறேன். அவ்வப்போது என் நிலைய உணர்ந்த நண்பர்கள் சிலர் அரிசி, மளிகை உள்ளிட்ட பொருள்களைக் கொடுத்து உதவுகின்றனர்.
சிறு வயதிலிருந்தே நான் கடும் சிரமங்கள் பட்டிருக்கிறேன். அந்த வலியை நன்கு உணர்ந்தவன் என்பதால் என் கண் முன்னாலேயே என் பிள்ளைகள் கஷ்டப்படுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்களின் எதிர்காலம் என் கண் முன்னே வந்து நிற்கிறது. அவர்களுக்கு ஒரு நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுக்க வேண்டிய பொறுப்பு, ஒரு தந்தையாக எனக்கு இருக்கிறது.
Also Read: `உறவுகள் உதாசீனப்படுத்துறதுதான் வாழணுங்கிற ஆசையைத் தூண்டுது’ - தன்னம்பிக்கை மனிதர் லோகநாதன்!
விபத்து வழக்கில் எனக்கு உரிய இழப்பீடு கிடைக்காததை அறிந்த மதுரை இலவச சட்டமையத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள், உதவி செய்து என்னை மீண்டும் இழப்பீடு கேட்டு மனுதாக்கல் செய்ய வைத்தனர். அதற்கான ஆவணங்களை வக்கீலிடம் கொடுப்பதற்காக ஒற்றை காலில் சைக்கிளில் மதுரைக்கு செல்ல முடிவெடுத்தேன்.
என் மனைவி, `கொரோனா தொடங்கிய பிறகு நம்மால் தினமும் மூன்று வேளை சாப்பாடு வயிறு நிரம்ப சாப்பிட முடியலை அதனால் உடலில் தெம்பிருக்காது சைக்கிளில் போக வேண்டாம்’ எனச் சொல்ல, `உடலில்தான் சக்தி இல்லை. மனதில் நிறைய இருக்கிறது’ எனக் கூறிவிட்டு நேற்று காலை 7 மணிக்கு தஞ்சாவூரிலிருந்து புறப்பட்ட நான் மாலை 5 மணிக்கு மதுரை வந்து சேர்ந்தேன்.
கிட்டதட்ட 170 கிலோ மீட்டரை பத்து மணி நேரத்தில் சென்றடைந்துள்ளேன். இடையில் சாப்பிடுவதற்காக இரண்டு இடத்தில் நிறுத்தினேன். 8 மணி நேரத்தில் சென்று விட முடியும் என நினைத்து பயணத்தைத் தொடங்கிய எனக்கு லேசான மழை, எதிர்க்ப் காற்று வீசியது உள்ளிட்ட பல காரணங்களால் 2 மணி நேரம் தாமதமானது. ஒற்றைக் காலிலேயே இவ்வளவு சீக்கிரம் வந்ததாகக் கூறி வக்கீல்கள் பலரும் என்னோட தன்னமிக்கையை பாராட்டி வாழ்த்தினார்கள்.
Also Read: `காலதாமதமான இந்தியாவின் முதல் தனியார் ரயில்!' - ரூ.1.62 லட்சம் இழப்பீடு வழங்கும் ஐ.ஆர்.சி.டி.சி
விபத்து ஏற்பட்டு 27 வருடங்கள் ஆகிவிட்டது. இதில் ஒரு காலை இழந்ததில் பல மகிழ்ச்சியான சம்பவங்களை தொலைத்திருக்கிறேன். இருந்தாலும் தன்னம்பிக்கையோடு உழைத்து குடும்பத்தை நடத்தி வந்தேன். கொரோனா லாக்டெளன் பொருளாதார ரீதியாக, எனக்கு பெரும் தேக்கத்தை ஏற்படுத்தியதுடன், பல துயரங்களை சந்திக்க வைத்து விட்டது. இந்தநிலையில், எனது மனுவை ஏற்று உரிய இழப்பீடு தொகை கிடைப்பதற்கு நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/tanjore-man-travels-170-km-to-madurai-in-bicycle
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக