ஐ.ஏ.எஸ் தேர்வில் ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளார் நாகர்கோவில் புன்னை நகரில் வசிக்கும் கணேஷ்குமார். முதல் முறை தேர்வு எழுதி தோல்வியடைந்த கணேஷ் குமார், இரண்டாவது முறை தீவிரமாகப் படித்துத் தேர்வு எழுதி, இந்திய அளவில் ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர், கணேஷ் குமாருக்கு இனிப்பு ஊட்டி, உச்சி முகர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தனது படிப்பு, லட்சியம் ஆகியவை குறித்து நம்மிடம் பேசினார் கணேஷ் குமார். கணேஷ்குமார் கூறுகையில், ``கான்பூர் ஐ.ஐ.டி-யில் பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சேன். அகமதாபாத்தில் எம்.பி.ஏ படிச்சேன். அப்புறம் ரெண்டு வருஷம் பெங்களூரில ஒரு தனியார் கம்பெனியில வேலை பார்த்தேன். அங்க வேலை பார்த்துகிட்டே 2018-ம் வருஷம் முதன் முதலா சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன். ஆனா, எக்ஸாம் கிளியர் பண்ணல. அதனால, போனவருஷம் பிப்ரவரி மாசம் வேலையை ரிசைன் பன்னிட்டு முழு நேரமா தேர்வுக்குப் படிச்சேன். ஆன்லைன்ல அதிகமாப் படிச்சேன்.
ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதிச்சவங்க, அப்புறம் சீனியர் ஐ.ஏ.எஸ் ஆகியோர் தங்கள் பிளாக்கில் எழுதின விஷயங்களை தேடித்தேடி படிச்சேன். ஆன்லைன்ல எக்கச்சக்கமா தகவல்கள் கொட்டிக்கிடக்குது. அப்புறம் என்னோட காலேஜ் சீனியர்ஸ் ரெண்டுபேரு சர்வீஸ்ல இருக்காங்க, அவங்களும் வழிகாட்டுனாங்க. ஐ.ஏ.எஸ் எக்ஸாம்ல நூறாவது ரேங்குக்குள்ள வருவேன்னு நினைச்சேன். ஆனா, ஏழாவது இடத்த நான் எதிர்பார்க்கல.
Also Read: மதுரை: `பெற்றோர் அளித்த ஊக்கம்!’ - சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த பார்வை மாற்றுத்திறன் மாணவி
எங்களுக்கு சொந்த ஊர் மதுரை. அப்பா எஸ்.பி.பாஸ்கர். நாகர்கோவில்ல மத்திய அரசுப் பணியில இருக்கிறார். அதனாலதான், இங்க வந்தோம். அம்மா லீலாவதி, தங்கை இன்ஜினியரிங் படிச்சுகிட்டிருக்காங்க. நான் எம்.பி.ஏ படிச்சுகிட்டிருக்கும்போது அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். அப்பத்தான் சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுதி ஃபாரின் சர்வீஸ் வேலைக்கு போகணும்னு முடிவெடுத்தேன்.
என் அப்பா மூணு வருஷம் எம்பசியில வேலை பார்த்தாங்க. அதனால, எனக்கு ஃபாரின் சர்வீஸ் மேல ஆசை வந்துச்சு. இப்போது என் கனவு நனவாகிடுச்சு. ஃபாரின் சர்வீஸ் துறையில் எந்தப் பதவி வழங்கினாலும் மகிழ்ச்சிதான். உலக அரங்கில் இந்தியாவின் பிரதிநிதித்துவத்தை பறைசாற்றும் வகையில சேவையாற்றுவேன்" என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/son-of-government-employee-secures-7th-place-in-ias-exams
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக