Ad

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

பிரேசில்: `அமேசானின் நிலை மிகவும் கவலையளிக்கிறது!’ - அதிகரிக்கும் தீயால் ஆர்வலர்கள் வேதனை

உலகின் மிகப்பெரிய காடான அமேசான் சுமார் 5.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. பொலிவியா, பிரேசில், கொலம்பியா, ஈகுவேடார், கயானா, பெரு, சுரிநேம், வெனிசூலா உட்பட சுமார் ஒன்பது நாடுகளில் அமேசான் காடு படர்ந்து விரிந்து காணப்படுகிறது. பூமியின் நுரையீரலாகக் கருதப்படும் இந்த அமேசான் காட்டில் இருந்துதான், உலகின் மொத்த ஆக்சிஜன் உற்பத்தியில் சுமார் 20 சதவிகிதத்துக்கும் அதிகமான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. அதிகளவில் நன்னீரையும் இந்தக் காடுகள்தான் அளித்து வருகின்றன. பல்வேறு மொழிகளைப் பேசும் பழங்குடி மக்கள் இங்கே வாழ்ந்து வருகின்றனர். மருத்துவ குணம் கொண்ட அரிய வகை மூலிகைகள் மற்றும் அரிய வகை உயிரினங்களும் இங்கு காணப்படுகின்றன. பிரம்மாண்டமான பிரம்மிப்புக்கு உரிய ஒன்றாக இருக்கும் அமேசான் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகிறது.

அமேசான்

அமேசான் காடுகள் பிரேசிலில்தான் அதிகளவில் பரந்து காணப்படுகிறது. பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஐ.என்.பி.இ, கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2019-ம் ஆண்டு ஜூலை வரையிலான காலகட்டத்தில் சுமார் 10,129 சதுர கி.மீ அளவு காடு அழிக்கப்பட்டுள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு தகவல் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து அங்கு காடுகள் அழிப்பும் அதிகமாகி வருகிறது. இந்த நிலையில், பிரேசிலியப் பகுதியில் உள்ள அமேசானில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தீ பாதிப்பு இருந்ததைவிட இந்த ஆண்டு ஜூலை மாதம் சுமார் 28% அதிக தீ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சுற்றுசூழல் ஆர்வலர்கள் உட்பட பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: `10,000 சதுர கி.மீ மழைக்காடுகள் அழிப்பு; தொடரும் சட்டவிரோத நடவடிக்கைகள்!’ - ஆபத்தில் அமேசான்

பிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த ஜூலை மாதம் அமேசான் மழைக்காடுகளில் 6,803 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகப் பதிவு செய்துள்ளது. இது கடந்த 2019-ம் ஆண்டில் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகம் எனவும் தெரிவித்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5,318 தீ விபத்துகள் பதிவாகி இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதுதொடர்பான தங்களது கவலையைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். ஏனெனில், ஆகஸ்ட் மாதம் என்பது அப்பகுதியில் தீ பரவல் காலத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுமார் 30,900 தீ விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. எனவே, தற்போது ஏற்பட்டுள்ள தீ கடந்த ஆண்டைவிட இன்னும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் எனத் தங்களது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

அமேசான்

அதிபர் பொல்சனாரோ, பிரேசிலில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதன் பேரில் அமேசான் நிலங்களை அழிக்க பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில் தீ அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. இதையடுத்து அமேசானில் சுற்றுசூழல் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக சில உத்தரவுகளையும் அதிபர் பொல்சனாரோ பிறப்பித்தார். எனினும், மக்கள் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியே நிலவி வருகிறது.

சாவோ பவுலோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் கேர்லோஸ் நோப்ரே, ``தீ மற்றும் காடுகள் அழிப்பு ஆகியவற்றை குறைக்க அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் குறைவாக உள்ளது" என்றார். அதேபோல கேர்லோஸ் ரிட்டில் என்ற ஆராய்ச்சியாளர், ``அமேசானின் நிலை மிகவும் கவலையளிக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டைவிட மிகவும் வறண்ட ஆண்டாக இருப்பதால் இந்த ஆண்டு தீ எளிதாகப் பரவ வாய்ப்பு உள்ளது” என்று தனது கவலையைப் பதிவு செய்துள்ளார். உலகின் மிகவும் முக்கியமான காடாகக் கருதப்படும் அமேசானுக்கு ஏற்பட்டிருக்கும் இத்தகைய நிலை தற்போது சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அமேசான் காட்டிற்குள் புகுந்த கொரோனா வைரஸ்... ஆபத்தில் பழங்குடிகள்!



source https://www.vikatan.com/social-affairs/environment/fire-increasing-in-brazil-amazon-forest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக