இதன் மூலம் மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை ஏரி, குளம், கண்மாய், ஏந்தல் எனப் பலவற்றை வெட்டி அதில் தேக்கி வைத்தனர். இதனால் கோயில்களும் வழிபாடுகளும், காடுகளும் நீர்ப்பாசனமும் இயற்கை சார்ந்ததாகவும், அதைப் பாதுகாப்பதாகவும் இருந்தன. மருத்துவக் குணமுள்ள பல மூலிகைத் தாவரங்களைப் பெருக்கவும், இயற்கைச் சூழலைப் பாதுகாக்கவும் தமிழர்கள் பழங்காலக் கோயில்களைச் சுற்றி காடுகளை உருவாக்கினர். இத்தகைய காடுகள் `காப்புக் காடுகள்' எனப்படுகின்றன. அடர்ந்த காட்டுப்பகுதியில் மரங்களின் கீழ் உருவாக்கப்பட்ட தமிழர்களின் ஆதி ஆலயங்கள், பின் மண் தளிகளாகவும், செங்கல் தளிகளாகவும், குடைவரை கோயில்களாகவும், கற்றளிகளாகவும் காலத்துக்கு ஏற்ப உருமாற்றம் பெற்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்க்கப்பட்ட இந்த காப்புக்காடுகள் குறித்து தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழக தொல்லியல்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ராஜகுரு, ``தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில் காடுகள் அவ்வூர்களின் இயற்கையைப் பாதுகாக்கும் சூழலியல் மண்டலங்களாகவே உருவாக்கப்பட்டன. இக்காடுகள் பருவமழையை வரவழைத்தல், மருத்துவ மூலிகைகள் தருதல், பறவைகள், விலங்குகளின் வாழ்விடம் எனப் பலவித பயன்பாடுகளை நமக்கு வழங்குகின்றன.
இக்கோயில் காடுகளில் உள்ள மரங்களை மக்கள் புனிதமாகக் கருதுவதால், அவற்றை கோயில் பணிகளுக்காகக் கூட வெட்டுவதில்லை. பல இடங்களில் இதை ஊர்க் கட்டுப்பாடாகவே பின்பற்றுகிறார்கள். கோயிலில் பொங்கல் வைக்க, தானாக உடைந்து விழும் குச்சிகளையே பயன்படுத்துகின்றனர். இவை இயற்கையைப் பாதுகாக்க நம் முன்னோர்கள் உருவாக்கிய வழிமுறைகள் ஆகும்.
ஐயனார், காளி ஆகிய தெய்வங்களுக்குரிய கோயில்கள், மரங்கள் சூழ்ந்த காப்புக் காடுகள் கொண்டதாகவே இன்றும் இருக்கின்றன. மேலும் பெரிய கோயில்களில் `நந்தவனம்' என்ற பெயரிலும் மரங்கள் நிறைந்த காடுகள் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக பெருங்கோயில்களில் தல விருட்சமாக மரங்கள் வளர்க்கும் வழக்கமும் வந்திருக்கிறது. கேரளாவில் பல சாஸ்தா மற்றும் காளி கோயில்கள் காப்புக் காடுகளால் உருவாகியுள்ளன. இத்தகைய கோயில்கள் காவு எனப்படுகின்றன. கா, காவு என்ற சொல்லுக்கு சோலை என்பது பொருள். காவுக்கோயில் அமைந்த பகுதிகளில் உருவான ஊர்களும் கோயில் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. இப்போதும் அங்கு பழைமை மாறாமல் இக்காடுகளும், அவற்றின் மூலிகைகளும் பாதுகாக்கப்படுகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல கிராமக்கோயில்கள், முக்கியமாக ஐயனார், காளி கோயில்கள், உகாய், ஆதண்டை, ஆத்தி, மணிபூவந்தி, தாழை, நாட்டுவீழி, சங்கஞ்செடி உள்ளிட்ட பல மூலிகைத் தாவரங்கள் சூழ்ந்து காணப்படுகின்றன. சில ஐயனார் கோயில்களில் உள்ள மூலிகைகள் மருந்தாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
பார்த்திபனூர் அருகில் கீழ்ப்பெருங்கரை ஐயனார் கோயில், நரிப்பையூர் செவக்காட்டு ஐயனார் கோயில், போகலூர் முல்லைக்கோட்டை முனீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் 20-க்கும் மேற்பட்ட மிஸ்வாக் எனப்படும் உகாய் மரங்கள் கோயிலைச் சுற்றி காவல் நிற்கின்றன. ராமநாதபுரம் மாவட்டம் வறட்சியான மாவட்டம் என அழைக்கப்பட்டாலும் பல அரியவகை மரங்கள் இங்கு செழித்து வளர்ந்து வருவதை இன்றும் பல கிராமக் கோயில்களில் காணமுடிகிறது. இவற்றை பாதுகாப்பதன் மூலம் நிறைவான மழை பெறலாம்'' என்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் காடுகளுடன் திகழும் ஆலயங்களை `கொம்படி ஆலயங்கள்' என அழைப்பதாகக் கூறும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக தொல்லறிவியல்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் மணிகண்டன், ``கந்தர்வக்கோட்டை ஒன்றியம் மங்கனூர், நத்தமாடிப்பட்டி கிராம எல்லையில் உள்ள வீசிக்காடு, கீழவாண்டான்விடுதி சிவனார் திடல், குன்றாண்டார்கோயில் ஒன்றியம் பெரம்பூர் வாட்டாருடையார் கோயில், வளத்தாரப்பன் கோயில் சிட்டை, அன்னவாசல் ஒன்றியத்திலுள்ள வெள்ளாஞ்சாறு புலிக்குத்தி அய்யனார் கோயில் காடு, திருமயம் ஒன்றியத்திலுள்ள மலையடிப்பட்டி கிராமத்திலுள்ள குருந்தடி அய்யனார் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, மல்லாங்குடி பிடாரி அய்யனார் கோயில் காடு, திருவரங்குளம் ஒன்றியம் நெமக்கோட்டை கோயில் காடு என இம்மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான கோயில் காடுகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
Also Read: காடு அழிப்புக்கும் வைரஸ் பரவலுக்கும் என்ன தொடர்பு?
இங்கு குருந்தமரம், வெப்பாலை, உசிலை, வீரமரம், நெய்க்கொட்டான், வெள்வேலம், காட்டத்தி, கிளுவை உள்ளிட்ட பல்வேறு மர வகைகள் இக்காடுகள் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன'' என்கிறார்.
தமிழகத்தில் மட்டுமல்ல இலங்கையிலும் இதுபோன்ற காப்புக்காடுகள் உள்ளது குறித்து விளக்கும் இலங்கை வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ்.திருச்செல்வம், ``கதிர்காமம் முருகன் கோயில் அருகிலுள்ள யாளக்காட்டில் ஆயிரக்கணக்கான உகாய் மரங்கள் உள்ளன.
Also Read: காலநிலை மாற்றத்துக்கு மரம் வளர்ப்பதுதான் தீர்வா? ஓர் அலசல்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாமங்க ஈஸ்வரம், மண்டூர் கந்தசுவாமி கோயில், செட்டிபாளையம் கண்ணகி அம்மன் கோயில், களுதாவளை பிள்ளையார் கோயில், கோராவெளி அம்மன் கோயில் ஆகியவையும், அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு திரௌபதி அம்மன் கோயில், மடத்தடி மீனாட்சி அம்மன் கோயில், உகந்தை முருகன் கோயில், தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோயில் ஆகியவையும், திருகோணமலை மாவட்டத்தில் சேனையூர் நாகதம்பிரான் கோயில், கட்டைபறிச்சான் அம்மச்சி அம்மன் கோயில், பறையான்குளம் எல்லைக்காளி அம்மன் கோயில் ஆகியவையும் வடமாகாணத்தில் நகுலேஸ்வரம், செல்வச் சந்நிதி முருகன் கோயில் ஆகியவையும், கேகாலை மாவட்டத்தில் அம்பன்பிட்டிய கந்தசுவாமி கோயில் ஆகியவையும் சோலைகளின் மத்தியில் அமைந்துள்ள முக்கியக் கோயில்களாகும். இங்கு மருதமரம், மாமரம், தென்னைமரம், வேப்பமரம், பனைமரம் ஆகிய மரங்கள் வளர்ந்து நிறைந்துள்ளன'' என்கிறார்.
source https://www.vikatan.com/news/environment/how-ancient-tamils-grown-mini-forest-around-temples-and-preserved-nature
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக