பரமக்குடி நகர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்ற வாலிபர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read: ஃபேஸ்புக்கில் 4 போலிக் கணக்குகள்; மார்ஃபிங்;பணம் பறிப்பு!-அதிர்ச்சி கொடுத்த பரமக்குடி கல்லூரி மாணவர்
பரமக்குடி படேல் தெருவை சேர்ந்த துரைராஜ் என்பவருக்கும் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பால்கரசு என்பவருக்கும் இடையே இடப் பிரச்சினை இருந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் 9 வருடங்களாக நடைபெற்ற வந்த நிலையில், கடந்த 9 மாதத்திற்கு முன்பு துரைராஜுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்தது. இதனை எதிர்த்து பால்கரசு அப்பீல் செய்துள்ளார்.
இதனிடையே தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்யும் பணியில் துரைராஜ் மற்றும் அவரது மகன் கூடலிங்கம் (26) ஈடுபட்டு வந்தனர். இதனால், ஆத்திரமடைந்த பால்கரசு, துரைராஜுடன் தகராறில் ஈடுபட்டார். இந்த தகராறில் பால்கரசின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் கம்பு மற்றும் இரும்பு கம்பியால் துரைராஜைத் தாக்கி உள்ளனர். இதனைத் தடுக்க வந்த துரைராஜின் மகன் கூடலிங்கத்தையும் தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கூடலிங்கத்தின் நண்பர்கள் பால்கரசு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதற்காக கூடலிங்கத்தை அழைத்து சென்றுள்ளனர்.
பரமக்குடி நகர் காவல்நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளிக்கச் சென்ற கூடலிங்கம், திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக அருகிலிருந்த போலீஸார், லிங்கத்தின் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கத்தை நீக்க முயற்சி செய்தனர்.
அதன் பின்னரும் கூடலிங்கம் கண்விழிக்காததால் அவரை உடனடியாக பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கூடலிங்கத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள், கூடலிங்கம் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால், கூடலிங்கத்தின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர்.
Also Read: கொரோனா: `111 பேரில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வும் ஒருவர்!' - பதறும் பரமக்குடி
கூடலிங்கம் மீது தாக்குதல் நடத்திய பால்கரசு மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். இதனைத்தொடர்ந்து கூட லிங்கத்தின் தந்தை துரைராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த போலீஸார், சம்பந்தப்பட்டவர்களைத் தேடி வருகின்றனர்.
source https://www.vikatan.com/news/crime/ramnad-youth-died-after-attacked-by-opposite-side-men
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக