Ad

புதன், 5 ஆகஸ்ட், 2020

அண்ணா யுனிவர்சிட்டி முன்னாள் இயக்குநர் கொலை! -தடயத்தை விட்டுச்சென்ற ரத்த உறவு

திருப்பத்தூரை அடுத்த பேராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (82), அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை இயக்குநராகப் பணியாற்றி 24 ஆண்டுகளுக்கு முன்னரே ஓய்வுபெற்றவர். இவருக்கு 2 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர். இரண்டாவது மகன் சேதுராமனைத் தவிர மற்ற அனைவரும் வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் செட்டில் ஆகிவிட்டார்கள். இரண்டாவது மகன் சேதுராமன் தந்தை வீடு உள்ள பகுதியிலிருந்து இரண்டுத் தெரு தள்ளி வசிக்கிறார்.

சடலமாகக் கிடந்த பாலகிருஷ்ணன்

பாலகிருஷ்ணன் தன் மனைவி ராஜேஸ்வரியுடன் வசித்துவந்தார். இவருக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மனைவி ராஜேஸ்வரி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட நொடிந்துபோனார் பாலகிருஷ்ணன். இருந்தபோதும், பிள்ளைகளுடன் இருக்காமல் சொத்துகளைப் பராமரித்துக் கொண்டு தனியாகவே வசித்துள்ளார். இரண்டுத் தெரு தள்ளி வசிக்கும் மகன் சேதுராமன் அடிக்கடி வந்து தந்தையை பார்த்துவிட்டுச் சென்றுள்ளார்.

Also Read: `கெட் அப் மாற்றம்; விஷம் கொடுத்து கொலை?’ - இலங்கை தாதா அங்கொட லொக்கா மரண வழக்கு மர்மம்

இந்நிலையில், நேற்று மாலை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பாலகிருஷ்ணனைச் சந்திக்கச் சென்றுள்ளனர். அப்போது, அவர் வெட்டி கொலைச் செய்யப்பட்ட நிலையில் வீட்டுக்குள் சடலமாகக் கிடந்தார். இதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். வீடு முழுவதும் ரத்தக்கறை படிந்திருந்தது. தடயங்களை அழிப்பதற்காக மிளகாய்ப் பொடியும் நீண்ட தூரத்துக்குத் தூவப்பட்டிருந்தது. இதுகுறித்து, உடனடியாக திருப்பத்தூர் தாலுகா போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

விசாரணை நடத்திய எஸ்.பி விஜயகுமார்

எஸ்.பி விஜயகுமார் தலைமையிலான போலீஸார் சம்பவப் பகுதிக்கு விரைந்துச் சென்று பார்வையிட்டனர். பின்னர், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ``கோடீஸ்வரரான பாலகிருஷ்ணன் தனியாக வசிப்பதை அறிந்து பணத்துக்காக கொலை நிகழ்த்தப்பட்டிருக்கலாம் அல்லது சொத்துத் தகராறில் கொலை நடந்திருக்கலாம்’’ என்ற முடிவுக்கு போலீஸார் வந்தனர்.

இதே கோணத்தில், விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில் பாலகிருஷ்ணன் கொலைக்கான முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ரத்த உறவால்தான் கொலை நடைபெற்றுள்ளதும் ஊர்ஜிதமாகியிருக்கிறது. பாலகிருஷ்ணன் மகன் சேதுராமன் மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை விழுந்துள்ளது. அவரைப் பிடித்து தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.

விசாரணை நடத்திய எஸ்.பி விஜயகுமார்

இதுதொடர்பாக திருப்பத்தூர் எஸ்.பி விஜயகுமாரிடம் கேட்டதற்கு, ``பாலகிருஷ்ணனின் கொலையில் முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளன. அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. குற்றவாளியை நெருங்கிவிட்டோம். இன்னும் 24 மணி நேரத்துக்குள் குற்றவாளி இவர்தான் என்று உறுதி செய்த பிறகு முழுத் தகவல்களையும் ஊடகங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்’’ என்றார்.



source https://www.vikatan.com/news/crime/anna-university-former-education-director-murdered-tiruppattur-shock

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக