34 ஆண்டுகளுக்குப் பிறகு, உருவாக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கையை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது. அடுத்தப் பத்தாண்டுகளில் படிப்படியாக இந்தக் கொள்கை செயலாக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தக் கல்விக்கொள்கையை பாராட்டியும் எதிர்த்தும் நாடெங்கும் பெரும் விவாதங்கள் நடந்து வருகின்றன. ’புதிய மறுமலர்ச்சிக்கு வித்திடும்’ என்று ஒரு தரப்பு கொண்டாட, ‘மாநிலங்களின் தனித்துவத்தை பறித்து பின்னோக்கித் தள்ளும்’ என்று ஒரு தரப்பு விமர்சிக்கிறது. கல்விக்கொள்கையை களத்தில் கையாளப் போகும் ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்...?
’’புதிய கல்விக்கொள்கை, முழுக்க நகரங்களை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே நம் கல்விமுறையில் பெரிய பாகுபாடு இருக்கிறது. புதிய கல்விக்கொள்கை, இந்தப் பாகுபாடுகளைக் களைந்து அனைவருக்கும் சமவாய்ப்பு அளிப்பதாக இருக்கும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், இது மேலும் பாகுபாட்டை அதிகப்படுத்துகிறது. நான் கிராமப்புறத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் 25 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். இங்கு படிக்கும் பெரும்பாலானோர், முதல் தலைமுறைப் பிள்ளைகள். வழக்கமாக எட்டாம் வகுப்போ, பத்தாம் வகுப்போ பெயிலானால் பெண்கள் பேன்ஸி ஸ்டோருக்கும், பையன்கள், அப்பா நடத்துகிற தொழிலுக்கும் சென்று விடுகிறார்கள். இந்தக் கொள்கை, தொழிற்கல்வி என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாகவே அந்த நிலையை உறுதிப்படுத்திவிடும் என்பதுதான் என் கவலை. இந்தக் கொள்கையை வடிவமைத்தவர்களுக்கு இந்தியாவின் எதார்த்த நிலை புரியவில்லை. நான் குடியிருக்கும் கிராமத்தில், இன்டர்நெட் இணைப்பைக்கூட போராடித்தான் வாங்கவேண்டியிருக்கிறது. இங்கு நான் பயன்படுத்துகிற இன்டர்நெட்டுக்கும் சென்னையில் ஒருவர் பயன்படுத்தும் இன்டர்நெட்டுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அந்த அளவுக்கு கிராமத்துக்கும் நகரத்துக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. அதை சரிசெய்யாமல் இந்தியா முழுமைக்கும் பொத்தம் பொதுவாக ஒரு கொள்கையை எப்படி வகுக்கமுடியும்..? எங்கள் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் 63 மாணவர்களில் 54 மாணவர்களின் குடும்பத்தில் ஸ்மார்ட்போனே இல்லை. இப்படித்தான் இந்தியாவின் பெரும்பாலான கிராமங்கள் இருக்கின்றன. இவர்களை மனதில் வைத்துத்தான் கல்விக்கொள்கைகள் வகுக்கப்படவேண்டும்...”
- து.விஜயலெட்சுமி, அரசுப்பள்ளி ஆசிரியர், திருவண்ணாமலை மாவட்டம்
’’இந்தக் கல்விக்கொள்கையில் பேசப்படவேண்டிய பல விஷயங்கள் பேசப்படவில்லை என்பது என் கருத்து. தவிர, இப்போதிருக்கும் பல நல்ல விஷயங்கள் இல்லாமல் போய்விடும் என்ற அச்சமும் ஏற்படுகிறது. ஏற்கெனவே நம் கல்விமுறையில் அங்கன்வாடி இருக்கிறது. அதில் குழந்தைகளின் இயல்புக்கேற்றவாறு ஒரு பராமரிப்புத் திட்டம் இருக்கிறது. இந்தக் கல்விக்கொள்கையில், அதை வகுப்பறை வரையறைக்குள் கொண்டு வருகிறார்கள். இறுக்கமான வகுப்பறையாக அது மாறி குழந்தைகளின் இயல்பை பாதித்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. பதினைந்து ஆண்டு பள்ளிப்படிப்பு என்பது சலிப்பை ஏற்படுத்திவிடக்கூடாது என்பது என் கவலை. மூன்றாம் வகுப்பிலேயே, அவர்களின் கற்றல் திறனைச் சோதிக்கும் திறனறித்தேர்வு என்பது மிரட்சியாக இருக்கிறது. பெரும்பாலும் பெற்றோர் நடத்தும் தொழிலில் பகுதிநேரமாக மாணவர்களும் ஈடுபடுவது இயல்புதான். புதிய கல்விக்கொள்கைப்படி எந்தெந்த தொழில்களில் மாணவர்களை ஈடுபடுத்துவார்கள், அதை யார் தீர்மானிப்பார்கள் என்பது குழப்பமாக இருக்கிறது. மாணவர்கள் பள்ளியில் 8 மணி நேரம்தான் இருக்கிறார்கள். மற்ற நேரங்களில் அவர்கள் ஏதோ ஒரு தொழிலில் இருப்பார்கள், அல்லது சமூகத்தைக் கற்றுக்கொள்கிறார்கள். பள்ளியில் தொழிலைக் கற்றுக்கொடுப்பது அவர்களை வெளியேற்றும் செயலாக மாறிவிடும். இப்போதிருக்கும் முறையில் மாணவர்கள் தொழிற்கல்வி படிக்க விரும்பினால் பத்தாம் வகுப்புக்குப் பிறகு, ஐ.டி.ஐக்கோ, பாலிடெக்னிக்குக்கோ செல்லலாம். எட்டாம் வகுப்பிலேயே அவர்களுக்கு தொழிற்கல்வியைத் திணிப்பது நல்லதல்ல. 9ம் வகுப்பிலேயே விருப்பப் பாடங்களைத் தேர்வு செய்து படிக்கலாம் என்று கொண்டு வருகிறார்கள். இதனால், குறிப்பிட்ட பாடங்களைத் தவிர, அடிப்படையான பொது விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை மாணவர்கள் இழப்பார்கள்...”
- செ.மணிமாறன், அரசுப்பள்ளி ஆசிரியர், திருவாரூர் மாவட்டம்
Also Read: புதிய கல்விக்கொள்கை: சாதகம், பாதகம், சந்தேகம்!
’’15 ஆண்டுகளுக்கும் கல்வி உரிமைச் சட்டத்தை நீட்டித்திருப்பது நல்ல விஷயம். தாய்மொழி வழிக்கல்வி பற்றிச் சொல்வதையும் வரவேற்கலாம். ஆனால், எல்லா இடங்களிலும், ’வாய்ப்பிருப்பின்’ என்றொரு வார்த்தையை போட்டிருக்கிறார்கள். அதுதான் நெருடலாக இருக்கிறது. இன்னொரு நல்ல விஷயம், கல்வியில் இருக்கிற ஒட்டுமொத்த பிரச்னைகளையும் இந்தக் கல்விக்கொள்கை நன்கு ஆய்வு செய்திருக்கிறது. ஆனால், பிரச்னைகளுக்குத் தீர்வாக வைக்கும் விஷயங்கள்தான் குழப்பத்தை உருவாக்குகின்றன. குழந்தைப்பருவத்தில் பலமொழிகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது நடைமுறைக்குப் பொருந்தாது. ஒரு ஆசிரியையாக இதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். பேச்சுமொழியாக எது இருக்கிறதோ அதை மட்டுமே குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். வகுப்பறையில் மொழியை கற்றுக்கொடுப்பது எளிதல்ல. குழந்தைக்கு அது பெரும் சுமையாகவே இருக்கும். ஆசிரியர் நியமனத்தில் இப்போதிருக்கும் 30:1 என்ற நிலையே தொடரும் என்கிறார்கள்.
இப்போது தமிழகத்தில் ஏராளமான ஈராசிரியர்கள் பள்ளிகள் இருக்கின்றன. இங்கு பணியாற்றும் ஆசிரியர், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கில மீடியங்களில் உள்ள 26 பாடப்புத்தகங்களை நடத்தவேண்டியிருக்கிறது. நாள் முழுவதும் பள்ளியிலேயே கிடந்து நடத்தினாலும் இந்தப் பாடங்களை நடத்தி முடிக்கமுடியாது. அதனால் தொடக்கக்கல்வியில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பள்ளி வளாகங்கள் பற்றிப் பேசுவதும் குழப்பமாக இருக்கிறது. அடிப்படை வசதியற்ற பள்ளிகளில் வசதிகளை மேம்படுத்துவதுதான் தீர்வு. ஆனால், ’அருகிலிருக்கும் இன்னொரு பள்ளிக்குப் போய் கற்றுக்கொள்ளச் சொல்லுங்கள்’ என்கிறார்கள். மாணவர்கள், எங்கு வசதிகள் இருக்கிறதோ அங்கு போய் விட்டால், அடிப்படை வசதியற்ற பள்ளிகளின் நிலை என்னாகும் என்ற கேள்வி வருகிறது. ஏற்கெனவே தனியார் பள்ளிகளுக்கும் அரசுப்பள்ளிகளுக்கும் சமச்சீரற்ற நிலை இருக்கிறது. இனி, அரசுப்பள்ளிகளுக்குள்ளேயே சமச்சீரற்ற நிலை வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. மலைவாழ் மக்களின் பிள்ளைகளுக்கு ஆசிரம சாலாக்கள் அமைக்கப்படும் என்கிறார்கள். ஆசிரமசாலாக்கள் என்றால் என்ன என்ற கேள்வி வருகிறது. குருகுலக்கல்வியில் இருந்து, பண்பட்டு, சீர்பட்டு ஜனநாயகமான குழந்தைகளை பிரதானப்படுத்திய வகுப்பறைக் கல்விக்கு நாம் வளர்ந்து வந்துவிட்டோம். இதை மீண்டும் பின்னோக்கிக் கொண்டுசெல்லக்கூடாது என்ற கவலை ஏற்படுகிறது.’’
-சுடரொளி, அரசுப்பள்ளி ஆசிரியர், திருவள்ளூர் மாவட்டம்
’’மூன்று வயதில் குழந்தைகளுக்கு வரையறுக்கப்பட்ட கல்வி என்பது நல்லதல்ல. குழந்தைகளின் இயல்பை பெரிதும் பாதிக்கும். கல்வியை, குழந்தைகளின் இயல்பைச் சிதைக்காமல், அவர்கள் போக்கில் வழங்கவேண்டும். இப்போதிருக்கும் தேர்வு முறைகளையே மாற்றியமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், புதிய கல்விக்கொள்கை, மேலும் மேலும் தேர்வுகளைத் திணிக்கிறது. திறனைப் பரிசோதிக்கலாம். ஆனால் குழந்தைகளை எந்திரங்களாக்கிவிடக்கூடாது. கல்வியென்பது பள்ளியில் வழங்கப்படுவது மட்டுமல்ல... சமூகத்திலும் பொதுவெளியிலும் குழந்தைகள் நிறையக் கற்றுக்கொள்கிறார்கள். அதையும் கருத்தில் கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளி, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு பொதுக்கல்வி பொருந்தாது. குறிப்பாக மூளைவளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கு தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்வது, தனி மனிதர்களாக வாழ பயிற்சி தருவது, நடக்க, ஆடை மாற்ற பயிற்சி தருவதுதான் கல்வி. அதுபற்றி புதிய கல்விக்கொள்கையில் தெளிவான விஷயங்கள் எதுவுமில்லை...’’
- பா.ராதாகிருஷ்ணன், சிறப்பாசிரியர், சென்னை மாவட்டம்
’’கல்விக்கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல இலக்குகளை ஏற்கெனவே தமிழகம் தொட்டுவிட்டது. ஆயினும், இன்னும் நம்மை மேம்படுத்திக்கொள்ள இந்தக் கல்விக்கொள்கையில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அங்கன்வாடியை வகுப்பறைக் கல்வியாக மாற்றுவது நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். 3 வயதில் குழந்தைகள் எதையும் வேகமாகக் கற்றுக்கொள்வார்கள். அவர்களின் இயல்புக்கேற்றவாறு பாடத்திட்டமும் உருவாக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் மதிய உணவோடு சத்தான காலை உணவும் தரப்படும் என்கிறார்கள். இதனால் தேசம் முழுவதும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகள் பாதிக்கப்படுவது குறையும். ஆசிரியர் நியமனத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்களின் பணிச்சுமை குறையும். கலை, விளையாட்டுகளையும் கல்வியோடு சேர்த்திருக்கிறார்கள். இதனால் மாணவர்கள் தனித்திறன்களை வளர்த்துக்கொள்ள முடியும். 5ம் வகுப்பு வரை தாய்மொழி வழிக்கல்வி என்பதும் வரவேற்கத்தகுந்தது. இதை பத்தாம் வகுப்பு வரை மாற்றவேண்டும். தொழில்கல்வி வழங்குவதால் மாணவர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ள முடியும். ஏற்கெனவே நம் பள்ளிகளில் கைத்தொழில் வகுப்புகள் உண்டு. இப்போது அதை முறைப்படுத்தியிருக்கிறார்கள். இதுவும் வரவேற்கத்தகுந்த விஷயம்...”
ஸதி, நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர், கோவை மாவட்டம்
"இந்தக் கல்விக்கொள்கையை மேலோட்டமாக வாசித்தால், மொத்தமாக எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என்றுதான் தோன்றுகிறது. ஆழமாகப் பார்த்தால் கிராமப்புற, அடித்தட்டு, முதல் தலைமுறை மாணவர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாகவே இது அமைந்திருக்கிறது. 3, 5, 8ம் வகுப்புகளுக்கு தேசிய அளவிலான கற்றல் திறன் வெளிப்பாடு அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படும் என்கிறார்கள். தேர்ச்சிபெறாத குழந்தைகளை என்ன செய்வது என்ற விளக்கம் இல்லை.
20 சதவிகிதம் குழந்தைகள் ஏதோவொரு கற்றல் குறைபாட்டோடு இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன. அந்த குழந்தைகள், வரையறுக்கப்பட்ட தரத்துக்கு கீழேதான் இருப்பார்கள். இந்தக் குழந்தைகளை அடையாளம் கண்டு மேம்படுத்துவது குறித்து கல்விக்கொள்கையில் விளக்கம் இல்லை, 9ம் வகுப்புமுதல் 12 வரை 8 பருவத் தேர்வுகள் என்பது பெரிய அழுத்தத்தை மாணவர்களுக்கும் பெற்றோருககும் உருவாக்கும். தரம்... தரம்... தரம் என்று கொள்கையின் பல இடங்களில் பேசப்படுகிறது. குழந்தைகளை ஒரே தரத்தில் அடைப்பது என்பதே சரியான அணுகுமுறை இல்லை. எல்லோருக்கும் ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு என்பதும் சரியல்ல. நகர்ப்புறத்தில் வசதியான குடும்பத்தில் இருக்கும் ஒரு குழந்தையையும் ஒரு பழங்குடி சமூகக் குழந்தையையும் ஒரே தராசில் வைப்பது என்ன நியாயம்? ஏற்கெனவே நீட் தேர்வு ஏற்படுத்திய விளைவுகளை கண்முன்னால் கண்டுவருகிறோம். உயர்கல்வி எதுவாக இருந்தாலும் தேசிய அளவில் நுழைவுத்தேர்வு என்பது மாணவர்களை பாகுபடுத்தி பின்னிழுக்கும் முயற்சிதான்...”
- பிரியசகி, ஆசிரியர், சென்னை
புதிய கல்விக்கொள்கையை, மிக முக்கியமான, தொலைநோக்குடன்கூடிய ஆவணமாகப் பார்க்கிறேன். இந்தியா மாதிரி பல்வேறு பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கொண்ட நாட்டுக்கு இதுமாதிரியான ஒரு கல்விக்கொள்கை தேவை. மனிதவளக் குறியீட்டுப் பட்டியலில் நாம் 130வது இடத்தில் இருக்கிறோம். கொரியா, சீனா நாடுகளையும் விட மிகப் பின்தங்கியிருக்கிறோம். புதிய கண்டுபிடிப்புகள் இருந்தால்தான் நாடு முன்னேற முடியும். ’குளோபல் இன்னோவேஷன் இன்டெக்ஸ்’ என்ற குறியீட்டுப் பட்டியலிலும் நாம் ரொம்பவே பின்தங்கியிருக்கிறோம். இதையெல்லாம் சரிசெய்யும் வகையில்தான் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. ஐநா சபையின் ’வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள் ஒப்பந்தம்’, 2030க்குள் 100 சதவிகிதம் குழந்தைகளையும் பள்ளிக்குக் கொண்டு வருவதை இலக்காகக் கொண்டிருக்கிறது. அதில் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. அதைத்தான் இந்தக் கல்விக்கொள்கையும் இலக்காகக் கொண்டிருக்கிறது. ஐ.நா சபை, உலக பொருளாதார மன்றம் போன்ற அமைப்புகள் 21ம் நூற்றாண்டில் இளைஞர்களுக்கு கிரியேட்டிவிட்டி, கிரிட்டிக்கல் திங்கிங் ஆகிய இரண்டு திறன்களும் அவசியம் என்று வலியுறுத்துகின்றன. ஆனால், இப்போதிருக்கும் நம் கல்விமுறை, மாணவர்களுக்கு இந்த இரண்டு திறன்களையும் வளர்க்கும் விதத்தில் இல்லை. அதனால்தான் நாம் கண்டுபிடிப்புகளில் பின்தங்கியிருக்கிறோம். இந்தக் கல்விக்கொள்கை அந்தத்திறன்களை வளர்க்கும் விதத்தில் பல திட்டங்களை வைத்திருக்கிறது. அறம், நெறி சார்ந்த விஷயங்களை பள்ளிக்கல்வியில் முறைப்படி கற்றுக்கொடுக்காததன் விளைவே இன்று ஊழல்களும் முறைகேடுகளும் அதிகரிப்பதற்கான காரணம். அதையும் இந்தக் கல்விக்கொள்கை கவனத்தில் கொண்டிருக்கிறது. குழந்தைப் பருவத்திலேயே பராமரிப்பை அரசு ஏற்றுக்கொள்கிறது. சிறந்த சத்துணவு வழங்கப்படவிருக்கிறது. மனப்பாடம் செய்யும் கல்விமுறையை மாற்றி சிந்தித்துப் புரியவைக்கும் வகையில் வகுப்பறைகள் மாறவிருக்கின்றன. கல்வி உரிமைச் சட்டத்தை 15 ஆண்டுகளுக்கும் நீட்டித்திருப்பதும் முக்கியமான அம்சம்.
இன்னும் 15 ஆண்டுகளில் பல்கலைக்கழக இணைப்பு என்பதே இருக்காது. சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் 900 கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 700 கல்லூரிகளும் இருக்கின்றன. இந்தக் கல்லூரிகளைக் கண்காணிப்பது, ஆய்வு செய்வதென்றே பல்கலைக்கழக பேராசிரியர்களின் நேரம் போகிறது. ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடவேமுடியவில்லை. அதனால் உலக ரேங்கிங் பட்டியலில் நம் பல்கலைக்கழகங்கள் ஏதும் வரமுடியவில்லை. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் தவிர வேறெங்கும் இந்த இணைப்பு முறையே கிடையாது. இந்தியாவின் பழைமையான சென்னைப் பல்கலைக்கழகத்தால் உலக ரேங்கிங் பட்டியலில் 500 இடங்களுக்குள்கூட வரமுடியவில்லை. தவிர, நிறைய முறைகேடுகளுக்கும் இந்த இணைப்பு வழிசெய்கிறது. அதனால், இந்தக் கல்விக்கொள்கை, கல்லூரிகளை தன்னாட்சி பெற்ற நிறுவனங்களாக மாற்றிவிட்டு பல்கலைக்கழகங்களை முழுமையாக ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுத்துகிறது.
அதேபோல், கல்லூரிப் படிப்பில் ’எப்போதும் வெளியே போகலாம்’, ’எப்போதும் இணையலாம்’ என்கிற வகையில் மாற்றம் கொண்டு வருகிறார்கள். இந்தியாவில் இதுவரை செய்யப்படாத நல்ல மாற்றம் இது. இதனால் எல்லாத் தரப்பு மாணவர்களும் பட்டப்படிப்பை நிறைவுசெய்ய முடியும். மேலும் ஆராய்ச்சிகளை அதிகப்படுத்துவதற்கான திட்டங்களும் இந்தக் கல்விக்கொள்கையில் நிறைவாக இருக்கின்றன. இப்போது ஜி.டி.பி.யில் 3 சதவிகிதம் மட்டுமே கல்விக்கு ஒதுக்கப்படுகிறது. இதை 6 சதவிகிதமாக மாற்றியிருக்கிறார்கள். ஆராய்ச்சித் திட்டங்களுக்கு .9 சதவிகிதம்தான் ஒதுக்கப்பட்டது. இனி 2 சதவிகிதம் ஒதுக்கப்படவுள்ளது. இதுவும் முற்போக்கான விஷயம். மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு எதிர்ப்பது துரதிஷ்டம். உலகமே, சிறு கிராமமாக சுருங்கிவிட்ட காலத்தில்பல மொழிகளைக் கற்றுக்கொள்வது மிகவும் நல்லது. இந்தக் கல்விக்கொள்கையை செயல்படுத்த விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈ.பாலகுருசாமி, முன்னாள் துணை வேந்தர், அண்ணா பல்கலைக்கழகம்
புதிய கல்விக்கொள்கையை இரண்டாகப் பிரிக்கலாம். தரம், அதில் குறிப்பிடப்படும் எண்ணிக்கை. எண்ணிக்கையைப் பொறுத்தவரை, மாணவர் சேர்க்கை உள்பட நிறைய விஷயங்களை நாம் எட்டிவிட்டோம். தரத்தைப் பொறுத்தவரை நாம் நிறைய மாறவேண்டியிருக்கிறது. குறிப்பாக, புரிந்து படிக்கும் தன்மை நம் கல்விமுறையில் இல்லை. அதனால்தான் தொழிற்கல்வியைக் கொண்டு வருகிறார்கள். இதை நான் வரவேற்பேன். காரணம், எனக்கே இதில் நிறைய அனுபவங்கள் உண்டு. பள்ளி விடுமுறை நாள்களில் என் தந்தை எலெக்ட்ரானிக்ஸ் ஷாப், மெக்கானிக் ஷாப்புகளில் கொண்டுபோய் விடுவார். அங்கு கிடைத்த அனுபவங்கள்தான் பின் என் கெரியரைத் தேர்வுசெய்ய துணை செய்தன. இந்த தொழிற்கல்வியால் கொஞ்சம் மாணவர்கள் கல்வியிலிருந்து இடைநிற்க வாய்ப்பு இருக்கவே செய்கிறது. அதை எப்படி சரி செய்வது என்றுதான் பார்க்கவேண்டுமே ஒழிய, மொத்தமாக மறுக்கக்கூடாது.
9ம் வகுப்பில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடங்களைத் தேர்வு செய்வதும் நல்ல விஷயம். ஆனால், அந்த வயதில் விருப்பப் பாடங்களைத் தேர்வுசெய்யும் வகையில் தகுதிப்படுத்த வேண்டும். இது மிகவும் சவாலான விஷயம்தான். பிளஸ்டூவுக்குப் பிறகு உயர்கல்விக்கு பொது நுழைவுத்தேர்வு என்பதை நான் எதிர்ப்பேன். எல்லோருக்கும் சமமான கல்வியை எப்போது கொடுக்கிறோமோ அப்போதுதான் அதுகுறித்து சிந்திக்கவேண்டும். அதேபோல மும்மொழி பாடத்திட்டத்திலும் நான் முரண்படுகிறேன். உயர்கல்வியில், கிரெடிட் சிஸ்டம் கொண்டு வந்திருப்பது நல்ல முடிவு. நம் வசதிக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் பட்டப்படிப்பை முடிக்கலாம். அதேபோல உயர்கல்வியிலும் விரும்பும் பாடங்களை எடுத்துப் படிக்கலாம் என்பதும் நல்ல விஷயம். மாணவர்களின் சுமையைக் குறைத்து விருப்பத்தோடு படிக்க உதவும். ஆராய்ச்சியை ஊக்கப்படுத்த 4 ஆண்டு பட்டப்படிப்புகளை கொண்டு வருவதும் முக்கியமானது. ஆவணமாக இதில் நிறைய நல்ல விஷயங்களைப் பார்க்கிறேன். இதை எப்படி செயல்படுத்தப்போகிறோம் என்பதில்தான் மாற்றம் அடங்கியிருக்கிறது.
- பிரேம்ஆனந்த் சேதுராஜன், கல்வியாளர்
source https://www.vikatan.com/social-affairs/education/government-school-teachers-and-educational-activists-opinion-regarding-the-new-education-policy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக