Ad

புதன், 19 ஆகஸ்ட், 2020

திருவள்ளூர்: `ஆட்சியர், எஸ்.பி முன்னிலை!’ - தேசியக் கொடியேற்றினார் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தம். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். இவரைக் கடந்த சுதந்திர தினத்தன்று தொடக்கப் பள்ளியில் கொடியேற்ற அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அழைப்பு விடுத்துள்ளார். அதன்பேரில் சென்ற அவரை கொடியை ஏற்ற விடாமல் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதேபோல, குடியரசு தின விழாவிலும் அவரை கொடியேற்ற விடமால் செய்ததாக எழுந்த புகாரும் வெளிச்சத்துக்கு வந்தது.

அமிர்தம்

மேலும் அமிர்தம், பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஊராட்சி மன்றத் தலைவர் இருக்கையில் அமரக் கூடாது, ஊராட்சி கணக்கு வழக்குகளை பார்க்கக் கூடாது உள்ளிட்ட பல இன்னல்களை சந்தித்து வந்துள்ளார். `சில நேரங்களில் சில காசோலைகளில் மட்டுமே ஊராட்சி மன்றத் தலைவராக என்னிடம் கையெழுத்து வாங்கிச் செல்வார்கள்’ என தனது வேதனைகளை வெளிப்படுத்தியுள்ளார் அமிர்தம்.

பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், அமிர்தம் தடுக்கப்பட்டதாக வந்த செய்திகளின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கையும் கேட்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த விவகாரம் அரசியல் கவனம் பெற்றது. பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்த விவகாரத்தில் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

அலுவலகத்தில் அமிர்தம்

இதனிடையே நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் ஆத்துப்பாக்கம் ஊராட்சி செயலர் சசிகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்ட ஊராட்சி தலைவர் அமிர்தம், திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி, எஸ்.பி.அரவிந்தன் முன்னிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றினார். மேலும், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தனது இருக்கையில் அமர்ந்து பணிகளைச் செய்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, `பஞ்சாயத்து தலைவர் அமிர்தத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது’ என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/panchayat-president-amritham-hoisted-the-national-flag

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக