தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை, கடந்த இரண்டாண்டுகள் தென்மேற்கு பருவமழை சிறப்பாகவே இருந்தது. ஆனால், நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை பெரிய அளவுக்கு கைக்கொடுக்காமல் இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக கோவை மாவட்டம் முழுவதும் நன்கு மழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது.
Also Read: `மழை ஸ்டேட்டஸ்...!’ - மகள் சொல்லிக் கொடுத்த வாழ்க்கைப் பாடம் #MyVikatan
தொடர் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒருபக்கம் மகிழ்ச்சியடைந்தாலும், மறுபக்கம் அந்தத் தண்ணீரை சேமிப்பதற்கு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர். முக்கியமாக, கோவையில் பல இடங்களில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து, நுரை பறந்த அவலத்தைப் பார்க்க முடிந்தது.
செல்வபுரம், புட்டுவிக்கி, சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ப்ளீச்சிங் ஆலைகள் இயங்கி வருகின்றன. பொதுவாகவே, அந்த ஆலைகள் நொய்யல் வழித்தடத்தில்தான் கழிவுகளை விடுவார்கள். அது அப்படியே தேங்கி நிற்கும். இந்நிலையில், மழைநீர் வெள்ளம் போல அடித்துவர அதனுடன் கழிவுநீர் கலந்து நுரைகளாக பறக்கின்றன. இதனால், அந்த நீரைப் பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது.
மறுபக்கம் அந்தக் கழிவு நுரை பறப்பதால், அந்தப் பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளும் ஏற்படுகின்றன. நொய்யல், தன் பயணத்தைத் தொடங்கிய கொஞ்ச தூரத்திலேயே பிரச்னையும் தொடங்கிவிடுகிறது. காலம்காலமாக தொடரும் இந்தப் பிரச்னைக்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் புகார் சொல்லப்படுகிறது.
Also Read: `சோப்பு நுரை’ டு `குத்தாட்டம்’ வரை - அமைச்சர் கருப்பணனின் ஆல் டைம் மாஸ் சம்பவங்கள்..!
சமீபத்தில் நொய்யல் ஆற்றை புனரமைக்க ரூ.230 கோடி ஒதுக்கப்பட்டு, பணிகளும் தொடங்கப்பட்டன. அதன்படி, தடுப்பணைகளைப் பலப்படுத்துவது போன்ற பணிகளில் கடந்த சில வாரங்களாக ஈடுபட்டுவந்தனர். ஆனால், பருவமழை காலகட்டத்தில் பணி தொடங்கியது தவறு. இந்த காலகட்டத்தில் பணி செய்வதே வீண் என்று இயற்கை ஆர்வலர்கள் கூறிவந்தனர். அதை உறுதிப்படுத்தும் வகையில், தடுப்பணைகளைப் பலப்படுத்த கட்டப்பட்ட கான்கிரீட் கட்டுமானங்கள், மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
“இதன்மூலம், அதற்கு செலவிட்ட நிதி, உழைப்பு அனைத்தும் வீணாகிவிட்டது. அதேபோல, இந்தப் பணிகளை செய்யும் கான்ட்ரக்டர்களுக்கு சௌகரியமாக இருப்பதற்காக, நொய்யலில் இருந்து குளங்களுக்கு செல்லும் மதகுகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றன.
கோவைக்கு அதிக மழை கிடைப்பதே இந்த காலத்தில்தான். அந்த நீரையும் சேமிக்க விடாமல் செய்தால், எப்படி?” என்று அந்தப் பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக, பொதுப்பணித்துறை கோவை செயற்பொறியாளர் ராஜேந்திரன் கூறுகையில், “தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என்று தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மழை சீஸன்தான். எனவே, பணிகளை தொடர்வதில் சில இடர்பாடுகள் இருக்கும். ஆனால், அதையெல்லாம் கடந்துதான் பணிகளை முடிக்க வேண்டும். பணிகளை செய்யும்போது, மதகுகளை மூடி வைத்திருந்தோம்.
தற்போது, மழை பெய்து மக்கள் கேட்டதால், மதகுகளை திறந்துவிட்டோம். நீர்நிலைகளில் கழிவு நீர் கலப்பதைத் தடுப்பதற்கும் தனியாக ஒரு திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்” என்றார். மழைநீர் உயிர்நீர் என்று விளம்பரப்படுத்துவதுடன் அரசின் பணி முடிந்துவிடாது. அந்த மழைநீரை சேமிக்க உரிய நடவடிக்கை எடுப்பதும் அரசின் கடமை.
source https://www.vikatan.com/news/tamilnadu/ground-report-about-coimbatore-noyyal-river-after-rain
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக