செப்டம்பரில் தியேட்டர்களைத் திறக்க மத்திய, மாநில அரசுகளின் அனுமதி கிடைக்கலாம் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். அரசுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்குமான பேச்சுவார்த்தைகள் சரியான திசையில் சென்று கொண்டிருப்பதால் தியேட்டர்களைப் புதுப்பிக்கும் வேலைகளும் ஆரம்பித்திருக்கின்றன. தியேட்டர் திறப்பு தொடர்பாக சினிமா வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம்.
''செப்டம்பரில் இருந்து படிப்படியாக திரையரங்குக்குள் அனுமதிக்கப்படும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தலாம், முதல்கட்டமாக 30 சதவிகித இருக்கைகளை மட்டும் நிரப்பலாம்'' என அரசுத்தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், 30 சதவிகிதம் என்பது மிகவும் குறைவு என திரையரங்க உரிமையாளர்கள் சொல்ல, இப்போது 40 சதவிகிதம் பார்வையாளர்களை அனுமதிப்பதற்கான கோரிக்கை பரிசீலனையில் இருக்கிறது. முன்பெல்லாம் தமிழகத் திரையரங்குகளில் மூன்று காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி. பகல்காட்சி அப்போது கிடையாது. எம்.ஜி.ஆர் ஆட்சியில்தான் அதாவது 1981-ல்தான் நான்கு காட்சிகளுக்கான அனுமதி கிடைத்திருக்கிறது. இப்போது கொரோனா சூழலால் மீண்டும் மூன்று காட்சிகள் என்கிற நடைமுறை அமலுக்கு வர இருக்கிறது.
ஒரு காட்சிக்கும், இன்னொரு காட்சிக்கும் இடையே குறைந்தது 1.30 மணி நேர இடைவெளி இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல் காட்சியில் சமூக இடைவெளியைப் பின்பற்றி காலியாக விடப்படும் இருக்கைகளில், அடுத்த காட்சியில் பார்வையாளர்கள் மாற்றி உட்காரவைக்கப்படவேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு காட்சி முடிந்ததும் கிருமிநாசினிகள் கொண்டு திரையரங்கை முழுமையாக சுத்தம் செய்யவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இருக்கைகளில் உட்காரவைக்க விமானங்களில் பயன்படுத்தப்படும் முறை பயன்படுத்தப்படவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது வரிசை வாரியாக பார்வையாளர்களை உள்ளே நுழைய அனுமதிக்கவேண்டும். அதேப்போல் வெளியேவரும்போதும் ஏ வரிசை, பி வரிசை என ஒவ்வொரு வரிசையாகத்தான் வெளியேவரவேண்டும். கழிவறைகளில் ஒரே நேரத்தில் எல்லோரும் உள்ளே நுழைய அனுமதிக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். பைகள் கொண்டுவருவதை பார்வையாளர்கள் தவிர்க்கவேண்டும் என்றும் சொல்லப்பட இருக்கிறது.
டிக்கெட் முறையைப் பொருத்தவரை கூடுமானவரை அச்சடிக்கபட்ட டிக்கெட்டுகளை நிறுத்தவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க இ-டிக்கெட்டுகள் மூலமே பார்வையாளர்கள் அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மாஸ்க்குகள் கட்டாயம். மாஸ்க் இல்லாதவர்களுக்கு திரையரங்க நுழைவாயிலிலேயே மாஸ்குகள் விற்பனை செய்யப்படுமாம்.
திரையரங்குக்குள் நுழையும் முன் ஒவ்வொருவரின் வெப்பநிலையும் சோதனை செய்யப்படும். 99 டிகிரி ஃபாரன்ஹீட் அல்லது 37.3 டிகிரி செல்சியஸுக்கு மேல் உடலின் வெப்பநிலை இருந்தால் தியேட்டருக்குள் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்படும்.
மல்ட்டிப்ளெக்ஸ்களைப் பொருத்தவரை கணவன்- மனைவி, ஒரே குடும்பத்தினர், நண்பர்கள் என குழுவாக வருவோர் அருகருகே உட்கார அனுமதிக்கப்படுவர். ஆனால், அவர்களின் இருபக்கத்திலும் உள்ள இருக்கைகள் காலியாக விடப்படும் என்று சொல்கிறார்கள்.
ஆனால், இவ்வளவு பாதுகாப்பு அம்சங்களையும் செய்து தியேட்டருக்குள் 40 சதவிகித பார்வையாளர்களை மட்டுமே கொண்டு தியேட்டரை நடத்தினால் எந்த லாபமும் பார்க்கமுடியாது என்கிற பேச்சையும் கேட்கமுடிகிறது. அதேப்போல் இப்போது ஓடிடி-யில் ரிலீஸான 'பெண்குயின்', 'காக்டெய்ல்', 'டேனி' போன்ற படங்கள் தியேட்டரில் ரிலீஸானால் அந்த 40 சதவிகிதம் கூட கூட்டம் வராது என்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். 'மாஸ்டர்', 'சூரரைப் போற்று' என இரண்டு படங்களையும் தீபாவளிக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். ஆனால், விஜய்யும், சூர்யாவும் கொரோனா சூழல் சரியானதும்தான் படங்களை ரிலீஸ் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். விஜய் பொங்கலுக்கு 'மாஸ்டர்' படத்தை ரிலீஸ் செய்வதற்காக வேலைகளைத் தொடங்கும்படி சொல்லியிருக்கிறார்.
தியேட்டர்கள் திறந்தபின், பார்வையாளர்கள் தரும் ஆதரவைப்பொறுத்தே பெரிய படங்களின் ரிலீஸ் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
source https://cinema.vikatan.com/tamil-cinema/how-the-theatres-are-going-to-function-from-next-month
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக