Ad

சனி, 1 ஆகஸ்ட், 2020

கடலூர்: `கொலை... வன்முறை..!’ தேர்தல் முன்விரோதத்தால் பற்றி எரிந்த மீனவ கிராமம்

கடலூர் மாவட்டம், தாழங்குடா மீனவ கிராமத்தில், குண்டு உப்பலவாடி பகுதியின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மாசிலாமணி தரப்பினருக்கும், தற்போதைய ஊராட்சி மன்றத் தலைவரான சாந்தியின் கணவர் மதியழகன் தரப்பினருக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் மாசிலாமணியின் மனைவி பிரவீனாவும், மதியழகனின் மனைவி சாந்தியும் போட்டியிட்டனர். இதில் சாந்தி வெற்றிபெற்றுவிட, பிரவீனா தோல்வியடைந்தார். அதிலிருந்து இரு தரப்பினருக்கும் அடிக்கடி மோதல் நிலவி வந்தது.

தீ வைக்கப்பட்ட படகு

இந்நிலையில்தான் நேற்று மாசிலாமணியின் தம்பி மதிவாணன்(வயது 36) என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அதில், ஆத்திரமடைந்த மதிவாணன் தரப்பினர் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை தீ வைத்து எரித்தனர். இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் மோதல் அதிகரித்த நிலையில், அப்பகுதியில் இருந்த வீடுகள் சூறையாடப்பட்டு, கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் உடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதி முழுவதும் போர்க்களமாகக் காட்சியளித்தது.

உடனே, அப்பகுதியில் ஏற்பட்ட பதற்றத்தைக் குறைக்க கடலூர் மாவட்ட எஸ்.பி அபிநவ் உத்தரவின் பேரில் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டும் கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீயணைப்புத் துறையினரும் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதுதொடர்பாக கடலூர் தேவனம்பட்டினம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கொலை மற்றும் கலவரம் தொடர்பாக சுமார் 40-க்கும் மேற்பட்டோரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தீயில் கருகிய இருசக்கர வாகனங்கள்

இதுகுறித்து நம்மிடம் பேசிய கடலூர் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சாந்தி,``சம்பவத்தில் தொடர்புடைய மாசிலாமணி மற்றும் மதியழகன் இரு தரப்பினருக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் இருந்துள்ளது. ஊரடங்கு தொடங்குவதற்கு முன்புகூட இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரைச் சேர்ந்த 30 பேர்கள் மீது 307 பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தோம். தொடர்ந்து அவர்களுக்குள் அமைதிப் பேச்சுவார்த்தையையும் நடத்தினோம்.

Also Read: `தெரியாமல் எரித்துவிட்டோம்!’- காணாமல் போன கஞ்சா பாக்கெட்டுகள்; கடலூர் போலீஸ் சர்ச்சை

சில நாள்களுக்கு முன்பு அப்பகுதியில் தற்போதைய ஊராட்சித் தலைவர் சாந்தி புதிதாக சாலை அமைக்கும் பணியைச் செய்திருக்கிறார். அப்போது அந்த சாலை சரியில்லை என்று முன்னாள் ஊராட்சித் தலைவர் மாசிலாமணி தகராறு செய்திருக்கிறார். இதற்கிடையில், மாசிலாமணியின் தம்பி மதிவாணன் என்பவர் அடிக்கடி மதுபோதையில் மதியழகன் தரப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்திருக்கிறார். அதன்காரணமாக மதியழகன் தரப்பினர் மதிவாணனை நேற்று கொலை செய்திருக்கின்றனர்.

Also Read: சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்ததால் 4 படகுகளுக்கு தீ! கடலூர் மீனவ கிராமத்தில் பரபரப்பு

கொலை வழக்கில் தொடர்புடைய 7 நபர்களில், 5 பேர்‌ கைது செய்திருக்கிறோம். மற்ற இருவரையும் தனிப்படை அமைத்துத் தேடி வருகிறோம். அதேபோல கலவரத்தின் போது படகுகள், வீடுகள் மற்றும் மீன்பிடி வலைகளை தீ வைத்தது, வாகனங்களைச் சேதப்படுத்தியது தொடர்பாக 20 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறோம்” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/one-person-killed-in-a-clash-between-two-sides-in-cuddalore-fishermen-village

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக