Ad

சனி, 1 ஆகஸ்ட், 2020

புதிய கல்விக் கொள்கை: சாதக பாதகங்கள் என்ன? - ஓர் அலசல்!

முதன்முதலில் 1968-ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தின் 42-வது திருத்தத்தின்படி, 1976-ம் ஆண்டு பொதுப்பட்டியலில் கல்வி சேர்க்கப்பட்டது. பின்னர், 1986-ம் ஆண்டிலும், 1992-ம் ஆண்டிலும் கல்விக் கொள்கைத் திருத்தப்பட்டது. 2016-ம் ஆண்டு டி.எஸ்.ஆர் சுப்பிரமணியன் குழுவானது கல்விக் கொள்கையில் சில திருத்தங்களைச் செய்தது. பிறகு, 2017-ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு ஏற்படுத்தப்பட்டது. அந்தக் குழுவால் தயாரிக்கப்பட்ட ‘புதிய கல்விக் கொள்கை 2019’ வரைவு அறிக்கை கடந்த ஆண்டு வெளியிட்டது.

தேசிய கல்விக்கொள்கை வரைவு

'மும்மொழிக் கொள்கை' உள்பட புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்ற பல அம்சங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. கல்வியாளர்களும் அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ‘அங்கன்வாடி மையங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் வளர்ச்சி மையம் என்று இருக்கும் அங்கன்வாடிகளை, ஒருங்கிணைந்த பள்ளிகளாக மாற்றுவதற்கான முயற்சி ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தியாவில் 50 சதவிகிதக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. அதைச் சரிசெய்வது தொடர்பாக இந்தக் கொள்கையில் தெளிவான செயல்திட்டம் இல்லை’ என்று கல்வியாளர்கள் விமர்சித்தனர்.

மேலும், ‘1994-ம் ஆண்டு இந்திய அரசால் கையெழுத்திடப்பட்ட காட் ஒப்பந்தத்தின் நீட்சியே இந்தப் புதிய கல்விக் கொள்கை. அரசு வழங்குகிற சேவைகளில் தடையற்ற பன்னாட்டு வர்த்தகத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான், காட்ஸ் ஒப்பந்தத்தின் அடிப்படை. அதைப்போல, கல்வியை சர்வதேச சந்தைக்குத் திறந்து விடுவதற்கான ஓர் ஒப்புதல் ஆவணம்தான் புதியக் கல்விக் கொள்கை. பள்ளி மற்றும் உயர் கல்வியை பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் சந்தைக்காக திறந்துவிடுவதற்கான ஏற்பாடுதான் இது’ என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

புதிய கல்விக் கொள்கை கருத்தரங்கம்

இப்படி, காரசாரமாக விவாதிக்கப்பட்டுவந்த தேசிய கல்விக் கொள்கை தற்போது இறுதிவடிவம் பெற்றுள்ளது. தேசிய கல்விக் கொள்கைக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவிகிதம் கல்விக்கு ஒதுக்குவது. நெகிழ்வான பாடத்திட்டங்கள், ஒருங்கிணைந்த தொழிற்கல்வி, ஆய்வுகளுக்காக அதிக நிதி ஒதுக்கீடு, 5-ம் வகுப்புவரை தாய்மொழிக் கல்வி, மும்மொழிக்கொள்கை எனப் பல அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

நம் அடுத்த தலைமுறையை எப்படி உருவாக்க வேண்டும், நம் தேசத்தின் கல்வி சார்ந்த கொள்கைகள் என்ன என்பதை 60 பக்கங்களைக் கொண்ட இந்த ஆவணம் பட்டியலிட்டுள்ளது. பள்ளிக்கல்வி முதல் உயர் கல்வி வரை கல்வி தொடர்பாக ஏராளமான விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. தேர்வுமுறையை எளிதாக்குவது, புத்தகச் சுமையைக் குறைப்பது, கல்விக்கு இதுவரை வாய்ப்பு இல்லாத மாணவர்களுக்கு கல்வியைக் கொண்டுசேர்ப்பது உள்பட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. உயர் கல்வியில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

வகுப்பறை
இந்த தேசியக் கொள்கை மீது ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமலும், மாநிலங்களுடன் கலந்துபேசாமலும் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய தவறு என்பது மிக முக்கியமான விமர்சனம்.

அப்படியென்றால், நாடாளுமன்ற ஜனநாயகம் என்பதற்கு என்ன அர்த்தம், மாநில உரிமைகளுக்கு என்ன மரியாதை என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ், “கொரோனா வைரஸ் பரவலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில், கல்வித்துறையை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போடுகிற அளவுக்கான மாற்றங்களைக் கொண்டுவரக்கூடிய கொள்கையை ஏன் இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற வேண்டும்? கடந்த நான்கு மாதங்களாக மூடிக்கிடக்கும் பள்ளிகளும் கல்லூரிகளும் அடுத்து எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத நிலையில், தேசிய கல்விக்கொள்கையை அவசர அவசரமாகக் கொண்டுவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்கிறார்.

“கிராமப்புற மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உயர் கல்விக்கு வருவது சவால்கள் நிறைந்ததாக இருக்கிறது. இந்த நிலையில்தான், மருத்துவப் படிப்புக்கு நீட் கொண்டுவரப்பட்டது. அதனால், என்னென்ன பிரச்னைகள் வந்துள்ளன என்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்தச் சூழலில், பட்டப்படிப்புகளுக்கு நீட் தேர்வு போல அகில இந்திய அளவில் தேர்வு நடத்துவோம் என்று சொல்வது என்ன நியாயம்? இது கூலித்தொழிலாளர்கள், அனைத்து வசதிகளையும் கொண்டவர்கள் என இரண்டு விதமான வகுப்பினரை உருவாக்கக்கூடியதாக இந்தக் கொள்கை இருக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கை இருக்கும்போது, மும்மொழிக்கொள்கையைக் கொண்டுவரப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. மொத்தத்தில், இது ஓர் அரைவேக்காட்டுத்தனமான ஆவணமாக இருக்கிறது” என்று விமர்சிக்கிறார் பீட்டர் அல்போன்ஸ்.

வகுப்பறை

பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதிலும், புதிய கல்விக்கொள்கையின் பல அம்சங்கள் வரவேற்கப்படுகின்றன. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், “மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை அனைத்து மட்டங்களிலும் உலகளாவிய அணுமுறையை உறுதி செய்வதை தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்ட சுமார் இரண்டு கோடி குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தாய்மொழி கல்வி 5-ம் வகுப்பு வரை கட்டாயம் என்று கொண்டுவரப்படுவதை வரவேற்கிறேன். 'அன்னை மொழியைக் காப்போம், அனைத்து மொழிகளையும் கற்போம்' என்ற தே.மு.தி.க-வின் கொள்கையின்படி, மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையில் தாய் வழிக்கல்வி திட்டத்தை 8-ம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Also Read: நினைவகமாக மாறும் போயஸ் கார்டன் இல்லம்... சசிகலாவின் உடமைகள் என்ன ஆனது?

இந்தித் திணிப்பு என்பது உள்பட தேசிய கல்விக்கொள்கை மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களை பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி மறுக்கிறார். “மும்மொழிக்கொள்கை என்பது புதிதாகக் கொண்டுவரப்படுவது அல்ல. இது, மத்திய அரசின் கல்வித்திட்டத்தில் தொடர்ந்து இருந்துவருகிறது. தமிழகத்தில் இருமொழிக்கொள்கை சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு ஒப்புக்கொண்டால் ஒழிய, தமிழகத்தில் மும்மொழிக்கொள்கை அமல்படுத்தப்படாது. தமிழகத்தில் இந்தி திணிக்கப்படவில்லை. எனவே, இந்தி திணிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு தவறானது. தேசிய கல்விக்கொள்கை மாநில உரிமைகளைப் பறிக்கவில்லை. ஏனென்றால், எதைக் கற்பிக்க வேண்டும் என்று சொல்லாமல், எப்படிக் கற்பிக்க வேண்டும் என்றுதான் இது சொல்கிறது” என்கிறார்.

வகுப்பறை

கல்வி உரிமைச் சட்டத்தின்படி 8-ம் வகுப்புவரை தடையில்லா தேர்ச்சி என்பது உள்ளது. அதாவது, 8-ம் வகுப்புவரை ஒரு மாணவரைக்கூட ஃபெயில் ஆக்கக்கூடாது. அப்படியிருக்கும்போது, 3-ம் வகுப்புக்கும், 5-ம் வகுப்புக்கும், 8-ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு என்பது சரியா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

இது குறித்து கல்வியாளர் ராமசுப்பிரமணியனிடம் கேட்டபோது, “இது சரியான ஓர் அணுகுமுறைதான். ஒவ்வொரு மாணவரின் கல்வித் தரத்தையும் அளவீடு செய்வதற்கு ஓர் ஏற்பாடு வேண்டும். அதற்காகத்தான், 3-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு ஆகியவற்றுக்கு பொதுத் தேர்வு கொண்டுவருகிறார்கள். ஒருவேளை, 3-ம் வகுப்பில் ஒரு மாணவன் சரியாகப் படிக்கவில்லையென்றால், அந்தப் பள்ளியில் சரியாகப் பாடம் நடத்தவில்லை என்பதைத் தெரிந்துகொண்டு, அதை சரிசெய்வதற்கான நடவடிக்கையை எடுக்க முடியும்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/education/story-about-merits-and-demerits-of-new-education-policy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக