Ad

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

கரூர்: `விவசாயிகளுக்குப் பாதுகாவலனா இருப்பேன்!' - ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த அபிநயா

``எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளின்போதும் தோல்வியே கிட்டினாலும், மனம்தளராமல் தொடர்ச்சியான ஆர்வம், விடாமுயற்சியோடு முயன்றால், ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிக்கனியை எளிதாகப் பறிக்கலாம். ஐந்தாவது முயற்சியில், வெற்றியை ருசித்திருக்கும் நானே அதற்கு ஆகச்சிறந்த உதாரணம். எனது, பணிக்காலத்தில் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, மேம்படுத்த பாடுபடுவேன்" என்று மகிழ்ச்சி கம் உறுதியுடன் பேசுகிறார் அபிநயா.

அபிநயா

நேற்று வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில், இந்திய அளவில் 559 -வது இடம் பிடித்து, தேர்வாகி அசத்தியிருக்கிறார் அபிநயா. கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள முன்னூர் ஊராட்சியில் இருக்கும் ஆதியப்பக்கவுண்டனூரைச் சேர்ந்தவர் அபிநயா.

Also Read: கரூர்: `110 கிலோமீட்டர் பயணம்; இலவசப் புத்தகம்' - வீட்டின் அருகே பாடம் நடத்திய ஆசிரியர்

எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், தனது தொடர்ச்சியான ஆர்வம் மற்றும் விடாமுயற்சியால் இந்த உச்சத்தை உச்சிமுகர்ந்திருக்கிறார். தற்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பிளாக்கின் வேளாண்மை அலுவலராக பணியாற்றிவருகிறார். 'வாழ்த்துகள்' சொல்லி, அவரிடம் பேசினோம்.

அபிநயா

``அப்பா சதாசிவம் ஒரு விவசாயி. அம்மா சிவகாமி வீட்டைப் பார்த்துக்கொள்கிறார். அண்ணன் விவேகானந்தன். எளிய விவசாயக் குடும்பம் என்னுடையது. பத்தாவது வரைக்கும், க.பரமத்தி அரசுப் பள்ளியில்தான் படித்தேன். அதன்பிறகு, தனியார் பள்ளியில் பதினோறாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளை முடித்து, கோயமுத்தூரில் பி.எஸ்.ஸி அக்ரி படித்துமுடித்தேன். இதற்கிடையில் கடந்த ஐந்து வருடங்களாகவே, ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு முயற்சிபண்ணிக்கிட்டு இருந்தேன். முதல்ல, சென்னையில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ் அகடமியில் கோச்சிங் எடுத்துக்கிட்டேன். நான்கு முறை ஐ.ஏ.எஸ் தேர்வை சந்தித்தேன். தோல்விதான். மனம் தளரலை. இதற்கிடையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் கலந்துகொண்டு தேர்வாகி, கடந்த 2019 - ம் வருடம் பரமக்குடி பிளாக் வேளாண்மை அதிகாரியாகப் பணியில் சேர்ந்தேன்.

Also Read: `ஏழாவது இடத்த நான் எதிர்பார்க்கல!’ - ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த கணேஷ்குமார்

இருந்தாலும், விடாமுயற்சியோடு தயாராகி, ஐந்தாவது முறையாக ஐ.ஏ.எஸ் தேர்வை எழுதினேன். இந்தமுறை, எனக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இந்திய அளவில் 559- வது இடம் கிடைத்திருக்கிறது. இந்த வெற்றியை, எனது முந்தைய நான்கு தோல்விகளுக்கும், விவசாயம் குடும்பம் என்றாலும், 'நீ கண்டிப்பாக ஐ.ஏ.எஸ் ஆகவேண்டும்' என்று தொடர்ந்து உற்சாகப்படுத்திய என் குடும்பத்தினருக்கும் சமர்ப்பிக்கிறேன். நான் ஆங்கிலத்தில்தான் தேர்வை சந்தித்தேன். ஆப்ஷனா பொலிடிகல் சயின்ஸை தேர்ந்தெடுத்தேன்.

`தொடர்ச்சியான ஆர்வமும், விடாமுயற்சியும் இருந்தால், கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் இளைஞன்கூட ஐ.ஏ.எஸ் தேர்வில் வெல்லலாம். அதற்கு, 'ஆங்கில மீடியப் பள்ளிகளில் படித்திருக்க வேண்டும், ஐ.ஐ.டியில் படித்திருக்க வேண்டும் என்று நினைப்பதெல்லாம், நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் வேலிகள். அந்த தாழ்வுமனப்பான்மை வேலியை உடைத்துக்கொண்டு, தன்னம்பிக்கையோடு முயன்றால், யாவருக்கும் ஐ.ஏ.எஸ் ஆவது சாத்தியம்தான்.

அபிநயா

'ஐ.ஏ.எஸ் என்பது ஏதோ வானத்தில் இருக்கும் நட்சத்திரமல்ல' என்பதை உணரனும். என் அப்பா விவசாயத்தை உயிர்மூச்சாக செய்துவருகிறார். 'எந்த உயரத்துக்குப் போனாலும், விவசாயத்தை மறக்காதே' என்று அடிக்கடி சொல்வார். அதன்காரணமாகதான், நான் பி.எஸ்.ஸி அக்ரி படித்தேன். இப்போதும் வேளாண்மைத்துறை அதிகாரியாகதான் இருக்கிறேன். அதேபோல், சிவில் சர்வீஸ் பணிமூலம், பணியில் இருக்கப்போகும் கடைசி நொடிவரைக்கும் விவசாயிகளையும், விவசாயிகளையும் மேம்படுத்தவே முயல்வேன். விவசாயிகளுக்கு நான் பாதுகாவலனாக இருப்பேன்" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/karur-abinaya-clears-civil-service-exams-and-get-599th-rank

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக