ராம் மந்திர்கான அடிக்கல்நாட்டு விழாவிற்காக இன்று அயோத்தி வருகிறார் பிரதமர் மோடி. ராம் ஜன்ம பூமிக்குச் செல்வதற்கு முன்பாக பகல் 11.30 மணியிலிருந்து 12 மணிக்குள்ளாக அவர் ஹனுமான்கர்கி ஆலயம் செல்ல இருக்கிறார். இந்த ஆலயம் 10 நூற்றாண்டைச் சேர்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இலங்கை சென்று ராவணனை வென்று ஶ்ரீராமன் அயோத்தி திரும்பியபின்பு ஹனுமான் இந்த இடத்தில்தான் இருந்து அயோத்தியைக் காவல் செய்தார் என்பது ஐதிகம். எனவே ராமர் கோயிலுக்குச் சென்று வழிபடுவதற்கு முன்பாக இங்கு வந்து ஹனுமனை வழிபட்டுச் செல்வது இங்கு வழக்கம். 76 படிக்கட்டுகள் கொண்ட இந்த ஆலயத்தில் ஹனுமன் சிறுகுழந்தையாக அன்னை அஞ்சனையின் இடுப்பில் அமர்ந்திருப்பதுபோன்ற தோற்றத்தில் காட்சியருள்கிறார்.
ராம் ஜன்ம பூமிக்கு அருகில் இருக்கும் இந்தக் கோயிலை 1855-ம் ஆண்டு இடிக்க முயற்சிகள் நடைபெற்றபோது ஆவாத் நவாப் தடுத்து நிறுத்தினார் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
இன்று பிரதமர் மோடி 11.40 மணிக்கு ஹனுமான்கர்கி கோயிலுக்கு விஜயம் செய்து 10 நிமிடங்கள் வழிபாடுகள் செய்கிறார். இந்த ஹனுமனுக்கு ஶ்ரீராம் என்று பொறிக்கப்பட்டுள்ள வெள்ளி கிரீடம் ஒன்றையும் மோடி சமர்ப்பணம் செய்ய இருக்கிறார்.
இங்கிருக்கும் 350 கி.லோ எடை கொண்ட பிரமாண்ட மணியை ஒலிக்கச் செய்து வேண்டிக்கொண்டு பின்பு ராமஜன்மபூமியை நோக்கிப் புறப்படுவார் என்கின்றனர் ஹனுமன் கோயில் நிர்வாகிகள். பிரதமரின் வருகையை ஒட்டி ஆலய வளாகம் சானிடைஸ் செய்யப்பட்டுத் தூய்மைப்படுத்தபபட்டது.
source https://www.vikatan.com/spiritual/temples/significance-of-hanuman-temple-ayodhya
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக