Ad

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

கரூர்: `எம்.ஆர்.விஜயபாஸ்கர், செந்தில் பாலாஜிக்கு கொரோனா!' - கேன்சலாகும் முதல்வர் நிகழ்ச்சி?

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும், தி.மு.க அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், கரூர் மாவட்ட மக்கள் பீதியடைந்துள்ளனர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Also Read: கரூர்: `கலங்காதே, நான் பார்த்துக்கிறேன்!' - இறந்த ஆசிரியரின் குடும்பத்தை நெகிழ வைத்த ஆட்சியர்

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், பத்திரிகையாளர்கள் என்று பலரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், கரூர் மாவட்ட அ.தி.மு.கவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அவரது மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட, மூன்றுபேரும் சென்னையில் அப்போலோவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராமர் (குளித்தலை எம்.எல்.ஏ)

அதேபோல், தி.மு.கவின் அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட, அவர் திருச்சி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். ஏற்கனவே, ஒரு மாதத்துக்கு முன்பு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தம்பி எம்.ஆர்.சேகருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அப்போது, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் டெஸ்ட் எடுக்கப்பட்டது. ஆனால், அப்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை. ஆனால், தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மட்டுமின்றி, அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

அதேபோல், ஒரு வாரத்துக்கு முன்பு குளித்தலை சட்டமன்றத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ ராமருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். இந்தநிலையில்தான், செந்தில் பாலாஜிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர் திருச்சியில் சிகிச்சையில் இருக்கிறார். இந்தநிலையில், 'எம்.ஆர்.விஜயபாஸ்கரும், செந்தில் பாலாஜியும் போட்டிபோட்டுக்கொண்டு மாற்றுக்கட்சியினரை தங்கள் கட்சிகளுக்கு இழுத்தல், தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுதல் என்று செயல்பட்டாங்க.

செந்தில் பாலாஜி

இதனால், எங்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருக்குமோ?' என்று அ.தி.மு.க, தி.மு.க கட்சியினர் அச்சப்படுகின்றனர். அதேபோல், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வரும் 21 - ம் தேதி கரூருக்கு வருகைதர இருக்கிறார். கொரோனா தடுப்புபணிகள் மற்றும் நலத்திட்டங்கள் சம்பந்தமாக கரூர் ஆட்சியர் அரங்கில் நடைபெற இருக்கும் ஆய்வுக்கூட்டத்தில்தான் கலந்துகொள்ள இருக்கிறார். ஆனால், 'இதற்கிடையில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், முதல்வரின் கரூர் விசிட் கேன்சலாகும் வாய்ப்புள்ளது' என்று கரூர் மாவட்ட அ.தி.மு.கவினர் சொல்கின்றனர். அனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை!



source https://www.vikatan.com/news/general-news/mrvijayabaskar-and-senthil-balaji-test-corona-positive

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக