சென்னை கீழ்ப்பாக்கம் பர்னபி சாலை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் கடலோயா (49). இவர் மாதவரத்தில் கெமிக்கல், பிளாஸ்டிக் பிசினஸ் செய்து வருகிறார். இவர், கடந்த 30.7.2020-ல் வேப்பேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ``எங்கள் குடும்பமும் சென்னை வேப்பேரியில் வசித்து வரும் சங்கீதா மற்றும் அவருடைய மகன் திலீப் ஆகியோரிடமும் நண்பர்களாகப் பழகிவந்தோம். திலீப், என்னிடம் ஏதாவது தொழில் செய்யலாம் அதில் வரும் லாபத்தினை பிரித்துக் கொள்ளலாம் என அடிக்கடி கூறுவார். கடந்த 19.1.2020-ம் தேதி என்னை திலீப் தொடர்பு கொண்டு ஐ போன் மற்றும் விலை உயர்ந்த செல்போன்கள் ஒரு லாட் வந்திருப்பதாகவும் அதனை 5,00,000 ரூபாய் கொடுத்து வாங்கினால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறினார்.
பின்னர், எனது பங்கிற்கு 2,50,000 ரூபாய் கொண்டு வரும்படி திலீப் கூறினார். நான் அவரது வார்த்தையை நம்பி 20.1.2020-ம் தேதி மதியம் 2 மணியளவில் சூளை, ஐயப்பா கிரவுண்ட் சென்று திலீப்பிடம் 2.50,000 ரூபாய் கொடுத்தேன். மேலும், செலவிற்குப் பணம் தேவைப்படும் என்று கேட்டதால் மேலும் 25,000 ரூபாய் சேர்த்த 2,75,000 ரூபாய் கொடுத்தேன். அதன்பிறகு என்னிடம் சரியாக திலீப் போனில் பேசுவது கிடையாது. அவரது வீட்டிற்கு சென்று கேட்டபோது அவர் எங்கு உள்ளார் என தெரியவில்லை என்று அவரது அம்மா சங்கீதா தெரிவித்தார். நான் விசாரித்தபோது திலீப், நிறையபேர்களை ஏமாற்றிப் பணம் வாங்கியுள்ளார் என்பதும் சிறைக்கு சென்று வந்தவர் என்பதும் தெரியவந்தது. எனவே, என்னிடம் ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்து பணம் ரூ.2,75,000 ரூபாயை பெற்று சென்ற திலீப் என்பவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், ஐபிசி 406, 420 ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். விசாரணையில் திலீப், பிரவீனிடம் பணத்தை வாங்கி ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து திலீப்பை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திலீப்பிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து வேப்பேரி போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``திலீப், பிசினஸ் செய்து வருகிறார். இவர், தன்னுடைய ஃபேஸ்புக் மூலம் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண்களின் ஃபேஸ்புக் கணக்கிற்கு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுப்பார். அதை ஏற்கும் பெண்களிடம் திலீப், முதலில் நட்பாகப் பழகுவார். பின்னர் தன்னுடைய குடும்ப விவரங்களை பகிர்ந்துகொள்வார். இதையடுத்து, தன்னையும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொள்வார். பிசினஸ்மேன் என்ற அடையாளத்தோடு ஃபேஸ்புக்கில் நட்பாகப் பழகிய வடமாநில பெண்களின் வீட்டுக்குச் செல்வார். குறுகிய காலத்தில் குடும்பத்தில் ஒருவராகிவிடுவார். பின்னர், நாம் சேர்ந்து பிசினஸ் செய்து கிடைக்கும் லாபத்தை சமமாகப் பிரித்துக் கொள்வோம் என்ற ஆசை வார்த்தையைக் கூறுவார். அதை உண்மையென நம்புபவர்களிடம் பணத்தை ஏமாற்றுவதை திலீப் வழக்கமாக வைத்துள்ளார்.
பிரவீன் மனைவி ராக்கியும் திலீப்பும் ஃபேஸ்புக் மூலம் நண்பர்களாகியுள்ளனர். பின்னர், பிரவீன் வீட்டுக்கு திலீப் அடிக்கடி சென்று குடும்ப நண்பராகியுள்ளார். இந்தச் சமயத்தில்தான் சுங்கத்துறையில் பறிமுதல் செய்யப்பட்ட ஐபோன்கள், விலை உயர்ந்த செல்போன்கள் இருப்பதாகக் கூறி 5,00,000 ரூபாயை திலீப் வாங்கி ஏமாற்றியுள்ளார். திருவல்லிக்கேணியில் குடியிருக்கும் ரவீந்திரன் என்பவர் ராயப்பேட்டையில் துணி வியாபாரம் செய்துவருகிறார். இவரின் உறவினர் பெண்ணிடம் ஃபேஸ்புக் மூலம் திலீப் பழகியுள்ளார். குடும்ப நண்பரான திலீப், கடந்த 2017-ம் ஆண்டு ரவீந்திரனின் உறவினர் பெண்ணின் வீட்டுக்கு திலீப் சென்றதாகவும், அங்கிருந்து 30 சவரன் தங்க நகைகளை அவர் திருடியதாக ரவீந்திரன் தரப்பில் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் நிலுவையில் உள்ளது.
இதைத் தொடர்ந்து விமான பணிப்பெண் கோர்ஸ் படிக்கும் மாணவிகளிடம் ஃபேஸ்புக் மூலம் பழகிய திலீப், அவர்களிடம் வேலை வாங்கி தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றியுள்ளார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த விமான பணிப்பெண் படிக்கும் மாணவி பிரியாவிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2,50,000 ரூபாயை ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து பிரியா, 2019-ம் ஆண்டு அமைந்தகரை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். விமான பணிப் பெண் படிப்பைப் பயிலும் பிரியாவைப் போல இன்னும் சிலரையும் திலீப் ஏமாற்றியதாகக் குற்றச்சாட்டு உள்ளது. இதற்காக அவர், தி.நகரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் படித்துள்ளார். அப்போது, அங்கு படித்த பெண்களிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலி ஆவணங்கள் கொடுத்து லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றியுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் மாதவரம் காவல் நிலையத்தில் திலீப் மீது புகாரளிக்கப்பட்டது. அந்தப் புகாரின்பேரில் திலீப்பை மாதவரம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Also Read: சென்னை: கொள்ளையடிக்கப்பட்ட 100 சவரன் கவரிங் நகைகள் - தப்பிய 15 சவரன் தங்க நகைகள்!
திலீப் மீது மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை போலீஸ் காவலில் எடுக்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.
இதற்கிடையில் திலீப் கைது செய்யப்பட்ட தகவல் வெளியானதும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர். திலீப்பின் ஃபேஸ்புக் கணக்கை போலீஸார் ஆய்வு செய்தபோது, அதில் ஏராளமான பெண்கள் நட்பில் உள்ளனர். அவர்களில் எத்தனை பேரை திலீப் ஏமாற்றினார் என்ற தகவலை போலீஸார் சேகரித்துவருகின்றனர்.
சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகம் கிடைப்பவர்களிடம் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்கின்றனர் போலீஸார்.
source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-youth-over-cheating-charges
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக