Ad

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

`38 வருஷப் பழக்கம்; கொரோனாவுக்காக விடமுடியுமா?’- தஞ்சையில் குவிந்த மக்கள்

காவிரி பாயும் தஞ்சையில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா களைகட்டுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் களையிழந்து காணப்பட்டது. ஆடிப் பெருக்கு விழா விமர்சையாக கொண்டாடப்படக்கூடிய, மிகவும் முக்கியமான ஆறு, குளங்களில் நேற்று ஆள் நடமாட்டம் கூட இல்லை. ஆனால், ஒரு சில பகுதிகளில் கொரோனா ஊரடங்குக்கான அறிகுறிகளே இல்லாத அளவுக்கு ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் களைகட்டியது.

ஆடிப்பெருக்கு

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக, இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் ஆடிப்பெருக்கு கொண்டாட தடை விதிக்கப்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் இப்பகுதிகளுக்கு வரவேண்டாமென மாவட்ட நிர்வாக சார்பாக முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால், தஞ்சை மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடக்கூடிய திருவையாறு, தஞ்சாவூர் நகரப்பகுதியில் ஓடக்கூடிய வடவாறு, பெரிய கோயில் அருகே உள்ள புதாறு ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் காவல்துறையினர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதனால், இப்பகுதிகள் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. இது ஒருபுறமிருந்தாலும், தஞ்சாவூர் சினிவாசபுரம் முருகன் நகர் அருகில் பாயக்கூடிய, புதாறு என அழைக்கப்படும் கல்லணை கால்வாயின் படித்துறை, நேற்று காலையிலிருந்தே விழாக் கோலத்தில் காட்சி அளித்தது.

பெண்கள், இளைஞர்கள், புதுமண தம்பதிகள் என பல தரப்பினரும் இங்கு வந்த வண்ணம் இருந்தனர். காதோடு கருகமணி, மஞ்சள் கயிறு, காப்பரிசி, பழங்களோடு ஆடிப்பெருக்கை கொண்டாடினர். கொரோனாவை பற்றியோ, அரசு அறிவித்துள்ள ஊரடங்கை பற்றியோ இவர்கள் கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. சமூக இடைவெளி, முககவசம் எதுவும் இல்லை. நூற்றுக்கணக்கானவர்கள் உற்சாகத்தோடு குவிந்தார்கள். மகிழ்ச்சி ஆராவாரம் கரைப்புரண்டு ஓடியது.

ஆடிப்பெருக்கு

இங்கு வந்திருந்த பெண்மணி ஒருவரிடம் நாம் பேசியபோது, ``நல்ல நாள் அதுவுமா, கொரோனாவுக்கு பயந்து வீட்டுக்குள்ள முடங்கிக் கிடக்க முடியுமா. எனக்கு கல்யாணம் ஆகி 38 வருசமாகுது. இதுவரைக்கும் ஆடிப்பெருக்குக்கு ஆத்துக்கு வராமல் இருந்ததே இல்லை. 20 வருசத்துக்கு முன்னாடி ஆடிப்பெருக்குக்கு அன்னைக்கு எனக்கு பயங்கர மான ஜூரம். உடம்பு முடியாமல் கிடந்தேன். ஆனால், அப்பவும் கூட நான் விடலை. பெரியகோயில் பக்கத்துல உள்ள புதாறுக்கு போயி, கொண்டாடிட்டுதான் வந்தேன். `இந்த வருசம் கொரோனா ஊரடங்கால், போலீஸ் கெடுபுடி அதிகமாக இருக்கு. வீட்லயே குழாயடியில கொண்டாடலாம்’னு என்னோட கணவர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். நான் விடவே இல்லை. எங்காயவது ஆறு, குளத்துல போலீஸ் இல்லாத படித்துறை இருந்தால் பார்த்துட்டு வாங்கனு என் கணவரை அனுப்பி வச்சேன். அவர் பல இடங்களுக்கு அலைஞ்சிப்பார்த்துட்டு, இந்த புதாறு படித்துறையை கண்டுப்புடிச்சி சொன்னாரு. குடும்பத்தோடு கிளம்பி வந்துட்டேன். நல்ல வேளை இதுவரைக்கும் இங்க போலீஸ் வரலை. நிம்மதியா சாமி கும்பிட்டு முடிச்சிட்டோம்” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/people-gathered-in-big-numbers-in-tanjore-river-for-aadiperukku-despite-corona-full-lock-down

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக