-
11-ம் நூற்றாண்டில், திருநெல்வேலிக்கு அருகே அமைந்துள்ள மானூர் என்னும் பகுதியை ஆண்டுவந்த உக்கிரபாண்டியன் என்னும் மன்னன் இக்கோயிலைக் கட்டினார் என்கிறது தலவரலாறு. இந்தக் கோயிலை எழிலுற அமைத்த பெருமைக்கு உரியவர் உமாபதி சிவாசார்யர் என்ற சிற்பி. இருவரின் சிற்பமும் கோயிலில் அமைந்துள்ளது.
-
மன்னன் உக்கிரபாண்டியன் மானூரிலிருந்து மதுரை மீனாட்சி கோயிலுக்கு ஆண்டுதோறும் சென்று வழிபாடு செய்து திரும்புவது வழக்கம். ஒருமுறை மன்னன் தன் படைகளோடு மதுரைக்குச் செல்லும் வழியில் ஓரிடத்தில் பட்டத்து யானை படுத்துவிட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் யானையை எழுப்ப முடியவில்லை. பிறகு அந்த இடத்தைத் தோண்டிப்பார்க்க மன்னன் ஆணையிட்டார். அப்போது அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதைக் கண்டுபிடித்தனர். மன்னர் அதை வழிபட்டுத் தன் ஊர் திரும்பினார். அன்று இரவு மன்னரின் கனவினில் காட்சி கொடுத்த இறைவன், `இனி மதுரை வந்து வழிபடத் தேவையில்லை. இங்கேயே சிவலிங்கம் கிடைத்த இடத்திலேயே கோயிலைக் கட்டி வழிபடுவாயாக’ என்று கட்டளையிட்டார். அவ்வாறு அமைந்த அற்புதக் கோயிலே சங்கரநாராயணர் கோயில்.
-
பூவுலகில் பார்வதி தேவியின் சாபத்தினால் பிறந்த மணிக்கிரீவன் என்னும் கந்தர்வன், புன்னைவனக்காட்டின் காவலனாக இருந்தான். அப்போது அவன் அங்கிருந்த புற்று ஒன்றை வெட்டினான். அப்போது அந்தப் புற்றுக்குள் ஒரு சிவலிங்கமும் அதைச் சுற்றி ஒரு பாம்பும் இருந்ததைக் கண்டான். அவன் வீசிய வாளினால் பாம்பின் வால் துண்டாகியிருந்தது. துண்டான வாலோடும் பாம்பு லிங்கத்தைச் சுற்றிக்கொண்டேயிருந்தது. இந்த அதிசயத்தைக் கண்ட காவலன் ஓடிச் சென்று மன்னன் உக்கிரபாண்டியனிடம் கூறினான். மன்னனும் தன் படைவீரர்களோடு வந்து சிவலிங்கத்தினை வழிபட்டான். அப்போது இறைவன் அசரீரியாய் வாக்குரைக்க அதன்படி அங்கு பெரும் கோயில் ஒன்றை எழுப்பினான் உக்கிரபாண்டியன் என்கிறது மற்றுமொரு புராணம்.
-
இங்கே சிவனும் திருமாலும் இணைந்த திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்கள். வலப்பக்கத்தில் சிவபெருமானும், இடப்புறத்தில் திருமாலும் இணைந்த திருவடிவம். வலப்பக்கத்தில் கங்கை, பிறைச் சந்திரன், அக்கினி, ஜடாமுடி, காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் உருத்திராட்சம், இடையில் புலித்தோல், சுவாமிக்குப் பின்னான திருவாசியில் சங்கன் என்னும் நாகம் குடை பிடிப்பதாகவும் அமைந்திருக்கின்றன.
-
சிவமூர்த்தங்களில் திருமாலோடு இணைந்த மூர்த்தத்துக்கு கேசவார்த்த மூர்த்தம் என்று பெயர். இடப்பக்கமோ திருமாலின் திருவடிவம். நவமணிமுடி, காதில் மாணிக்கக் குண்டலம், மார்பில் துளசிமணி, திருமகள் மாலை, கயில் சங்கு, பீதாம்பரம் ஆகியவற்றோடு, திருவாசியில் பதுமன் என்னும் நாகம் குடைப்பிடிக்கிறது.
-
சங்கரநாராயணர் திருவருவத்துக்கு சிவனுக்குரிய வில்வமும் சாத்தப்படுகிறது. பெருமாளுக்குரிய துளசியும் மாலையாக அணிவிக்கப்படுகிறது.
-
சிவபெருமான் அபிஷேகப் பிரியர். பெருமாளோ அலங்காரப் பிரியர். சங்கரநாராயணருக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரப்பிரியராகவே திருக்காட்சி அருள்கிறார். அபிஷேகம் இல்லாமல் சிவவழிபாடு இருக்கமுடியாது என்பதால் அங்கே சந்திரமவுலீஸ்வரராக ஸ்படிக லிங்கமாகவும் இறைவன் எழுந்தருளி அபிஷேகங்களை ஏற்கிறார்.
-
சங்கரநாராயணரின் உற்சவமூர்த்திக்கு சிவராத்திரி, ஏகாதசி ஆகிய திதிகளில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஆடித்தபசை ஒட்டி நடைபெறும் திருவிழா நாள்களில் உற்சவர் திருவீதியுலா வருவார்.
-
உலகுக்கே படியளப்பவர் அந்த சிவபெருமான். மக்களுக்கு அன்னம் அருளும் அந்த ஈசனுக்கு ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் நடைபெறுவதுவழக்கம். இங்கு சங்கரன்கோவிலில் சங்கரநாராயணனுக்கோ ஆண்டில் இரு தினங்கள் அன்னாபிஷேகம். ஐப்பசிமாதத்தின் முதல் நாளிலும் சித்திரை முதல் நாளிலும் அன்னாபிஷேகம் நடைபெறும்.
-
சங்கரநாராயணர் சந்நிதியின் பின்புறம் யோக நரசிம்மர் அருள்பாலிக்கிறார். எனவே இங்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. மேலும் சிவாலயங்களில் நிகழ்த்தப்படாத சொர்க்கவாசல் திறப்பு இங்கே விசேஷமாக நடைபெறுகிறது.
-
ஆதிகாலத்தில் பிரம்மோற்சவம் என்றாலே 41 நாள்கள் நடைபெறும் விழா. தற்காலத்தில் பல கோயில்களில் அது 10 நாள் விழாவாகச் சுருக்கப்பட்டுவிட்டது. ஆனால் இங்கு இன்னும் விஸ்தாரமாக 41 நாள்கள் பிரம்மோற்சவம் கொண்டாடுகிறார்கள். பெருங்கோட்டூர் என்னும் தோப்பில் கோயில் யானை மூன்றுமுறை தொட்டுத்தரும் மண்ணைக் கொண்டு பூசை செய்தபின்னரே சித்திரைத் திருவிழா தொடங்குகிறது.
-
கோயில் மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது. தலைவாசலுக்கு நேரே சங்கரலிங்கபப் பெருமாளும், வடபகுதியில் கோமதி அம்மனும், நடுவில் சங்கரநாராயணர் சந்நிதியும் ஆகிய மூன்றுமே மூன்று கோயில்கள்போல் அமைந்துள்ளன. மூன்று கோயில்களுக்கும் தனித்தனிக் கருவறை, அர்த்தமண்டபம், மணிமண்டபம், மகாமண்டபம், சுற்று மண்டபம் என விஸ்தாரமாக அமைந்துள்ளன.
-
கோயிலுக்குள் நுழைகையில் இருக்கும் கணபதிக்கு ராஜகணபதி என்று பெயர்.
-
வடக்குப் பகுதியில் கோமதி அம்பிகையின் சந்நிதி அமைந்துள்ளது. அம்பிகையின் சந்நிதி இருக்கும் திசையின் முகப்பில் உள்ள ராஜகோபுரம் 125 அடி உயரம் கொண்டது. இந்த கோபுரத்தின் ஒன்பதாவது நிலையில் ஒரு பெரிய மணி உள்ளது. அந்த மணி இரண்டு நாழிகைகளுக்கு ஒருமுறை அடிக்கும் வண்ணம் கடிகாரம் பொருத்தி வைத்திருந்ததாகவும் தற்சமயம் கடிகாரம் பழுதாகிவிட்டதால் அந்த மணி அடிப்பதில்லை என்ற தகவலை தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் தன் வேங்கடம் முதல் குமரிவரை நூலில் எழுதியுள்ளார்.
-
கோமதி அம்மனுக்கு திங்கள்கிழமைகளில் மலர்ப்பாவாடை, வெள்ளிக்கிழமைகளில் தங்கப்பாவாடை சாத்தப் படுகிறது. அன்னையின் சந்நிதியில் மாவிளக்கு எடுப்பது இந்தத் தலத்தில் மிகவும் விசேஷம்.
-
கோமதி அம்மன் சந்நிதிச் சுற்றுப்பாதையில் இருக்கும் அபிஷேகத் தொட்டிக்கு எதிரே ஒரு தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதில் புற்றுமண் கொண்டுவந்து கொட்டுகிறார்கள். வெள்ளி, செவ்வாய் மற்றும் சிறப்பு நாள்களில் தெற்குப்புதூர் என்னும் இடத்தில் இருந்து புதுமண்ணைப் பனை ஓலைப்பெட்டிகளில் சுமந்துகொண்டுவந்து நேர்த்திக்கடனாக செலுத்துகிறார்கள் பக்தர்கள். இந்த மண் நோய்தீர்க்கும் காப்பாகக் கருதப்படுகிறது. சிராத்தத்துக்காக அந்தணர் ஒருவர் வைத்திருந்த பழம் ஒன்றினை சோழன் ஒருவன் உண்டதாகவும், அதனால் அவனுக்கு நேர்ந்த நோயை தீர இந்தத் தலப் புற்றுமண் மருந்தாகத் திகழ்ந்தது என்றும் சொல்லப்படுகிறது.
-
அம்மனுக்கு ஆவுடைத்தாய் என்னும் திருநாமமும் வழங்கப்படுகிறது. அன்னை இந்தத் தலத்துக்கு வந்து தவம் செய்தபோது தேவர்களும் ரிஷிகளும் பசுவடிவம் கொண்டு வந்து அன்னையைச் சுற்றியிருந்து காத்தனர் என்பது ஐதிகம். எனவே ஆ என்றால் பசு. பசுக்கள் காத்து நின்ற அன்னை ஆதலால் ஆவுடைத்தாய் என்னும் பெயர் அம்மனுக்கு ஏற்பட்டது. ஆவுடைத்தாய் என்பதே வடமொழியில் கோமதி என்று வழங்கப்படலானது.
-
இந்த ஆலயத்தின் மகிமைக்கு மகிமை சேர்ப்பது, ஸ்ரீகோமதி அம்மன் சந்நிதியில் (கருவறையில் இருந்து 10 அடி தொலைவில்) அமைந்திருக்கும் ஸ்ரீசக்ரக் குழி! இதில் பதிக்கப்பட்டிருக்கும் ஸ்ரீசக்ரம்... அம்பாளின் ஆணைப்படி, திருவாவடுதுறை ஆதீனம் 10-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிக சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அம்பாளின் திருப்பார்வையில் உள்ள இந்த ஸ்ரீசக்ர குழியில் அமர்ந்து, ஸ்ரீகோமதி அம்பாளை தியானித்துப் பிரார்த்திக்க, எண்ணிய காரியம் யாவும் நிறைவேறும்!
-
அன்னையின் தவத்துக்கு மகிழ்ந்து இங்கு இறைவன் சங்கரநாராயணராகக் காட்சியளித்தார் என்பது புராணம் சொல்லும் செய்தி. அன்னை ஊசி முனையில் நின்று தவம் செய்யும் அற்புதக் காட்சியும் அந்த தவத்துக்கு மகிழ்ந்து இறைவன் காட்சி கொடுத்த அற்புதமுமே ஆடித்தபசு திருவிழாவாகும்.
source https://www.vikatan.com/spiritual/temples/interesting-spiritual-informations-about-sankarankovil-gomathi-amman-temple
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக