Ad

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

சத்தீஸ்கர்: `உடல்நிலை மோசம்; பழுதடைந்த பாதைகள்!’ - 15 கி.மீ சுமந்து செல்லப்பட்ட தாய், குழந்தை

இந்தியாவின் பல்வேறு கிராமங்களிலும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் இதனால், மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாவதாகவும் அவ்வப்போது வெளிவரும் செய்திகள் கவலையை அளிப்பதுண்டு. அவ்வகையில் தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்கள் அதிகமாக வசிக்கும் ஒரு கிராமத்தில் சாலைகள் மிகவும் மோசமாக இருந்ததால் மருத்துவமனைக்கு விரைந்து செல்ல முடியாமல் தாயும் குழந்தையும் பாதிப்படைந்துள்ள சம்பவம் அம்மாநிலத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சூரஜ்பூர் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகமாக வாழும் பைஜன்பாத் கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்தக் கிராமத்தில் உள்ள மலைப்பாதைகள் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் நோய்வாய்ப்பட்ட தாயையும் அவரின் பச்சிளம் குழந்தையையும் அக்கிராமத்து மக்கள் மூங்கில் குச்சியில் இணைக்கப்பட்ட கூடையில் வைத்து சுமார் 15 கி.மீ தொலைவு சுமந்து சென்றுள்ளனர். இதையடுத்து, 10 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் ஒன்று அவர்களை அழைத்துச் சென்றுள்ளது. பாதைகள் சீராக இல்லாததால் தாயையும் குழந்தையையும் 25 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சுமார் 3 மணி நேரம் ஆகியுள்ளது.

Also Read: கோவை: `70 டிகிரி சாய்வில் வீடுகள்; பள்ளிக்கு 5 கி.மீ நடை!’ - நாகுரூத்துபதி பழங்குடி கிராமம்

இந்தச் சம்பவம் அம்மாநிலத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இரண்டு நாள்கள் கழித்து அம்மாவட்ட நிர்வாகம் எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ திட்டத்தின் கீழ் அப்பாதையில் சாலை அமைத்துத் தருவதாக அம்மக்களுக்கு உறுதியளித்துள்ளது. இந்தக் கிராமமானது மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் எல்லைகளில் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தைச் சுற்றி அடர்த்தியான காடு இருப்பதால் ஆம்புலன்ஸ் எதுவும் செல்ல முடிவதில்லை என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். இதேமாதிரியான சம்பவம் அப்பகுதியில் நடப்பது இது முதல்முறை அல்ல என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலைப்பாதை

பாதிப்படைந்த 22 வயது பெண் ராமதேசியா என்பவருக்கு குழந்தை பிறந்தது முதல் உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறது. அவரது பிரசவத்தின்போதும் அவரை அக்கிராம மக்கள் கட்டில் ஒன்றில் வைத்து சுமந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அவரின் கணவர் பேசும்போது, ``திங்கள்கிழமை அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. இதையடுத்து, அருகில் இருந்த சுகாதார மையத்துக்குத் தகவல் தெரிவித்தோம். என் மனைவியையும் குழந்தையையும் ஒரு கூடையில் அமர்த்தி ஆம்புலன்ஸ் நின்றுகொண்டிருந்த பகுதிவரை சுமந்து சென்றோம்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். பருவமழைக் காலங்களில் அதிகம் பாதிப்புகளைச் சந்திப்பதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கிராமத்தைச் சுற்றியிருக்கும் 15 கிராமங்களும் போக்குவரத்துக்கு மிகவும் அதிக சிரமத்தை எதிர்கொள்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



source https://www.vikatan.com/news/india/woman-and-child-carried-in-basket-for-15-km-to-reach-the-hospital-in-chhattisgarh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக