Ad

வியாழன், 8 டிசம்பர், 2022

குமரி: காவல் நிலையத்தில் காவடி கட்ட அனுமதி மறுத்த அதிகாரிகள் - போராட்டத்துக்கு பின் அனுமதி!

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்திக் கீழ் இருந்தபோது ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று, குற்றங்கள் குறைந்து மக்கள் அமைதியாக வாழவும், நீர்வளம் செழித்து விவசாயம் தழைத்தோங்கவும் தக்கலை காவல் நிலையம் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வைத்து காவடி கட்டி பவனியாக வேளிமலை குமாரசுவாமி கோயிலுக்கு கொண்டு செல்வது வழக்கம். இதற்காக காவல் துறையினரும், பொதுப்பணித் துறையினரும் விரதமிருந்து காவடி கட்டி எடுத்துச் செல்வது ஆண்டுதோறும் நடந்துவரும் வழக்கமாகும். திதுவிதாங்கூர் மன்னர் காலத்தில் தொடங்கிய இந்த பாரம்பரியம் சுதந்திரத்துக்கு பிறகும், மொழிவாரியாக கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த பிறகும் தொடர்ந்து நடந்து வருகிறது. காவல் துறையினரும், பொதுப்பணித்துறையினர் மட்டுமல்லாது குமரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்ககில் இருந்தும் பக்தர்கள் காவடி கட்டி வேளிமலை குமாரசுவாமி கோயிலுக்கு செல்வது வழக்கம். கடந்த ஆண்டும் தக்கலை காவல் நிலையத்தில் இருந்து காவடி கட்டி குமாரசுவாமி கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த ஆண்டின் கார்த்திகை கடைசி வெள்ளியான இன்று தக்கலை காவல் துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் இருந்தும், பொதுப்பணி துறை அதிகாரிகளும் ஊழியர்களும் தக்கலை பொதுப்பணித் துறை அலுவலகத்தில் இருந்தும் காவடி எடுத்துச் சென்று நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற இருந்தது. அதற்காக நேற்று தக்கலை காவல் நிலையத்தில் பூஜைகளுக்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத், தக்கலை காவல் நிலையத்தில் இருந்து போலீஸார் காவடி எடுத்து செல்லும் பாரம்பரிய நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததாக தகவல் வெளியானது.

இந்த தகவல் அறிந்த பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் இன்று அதிகாலையில் தக்கலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பாரம்பரிய காவடி கட்டு நிகழ்வுக்கு அனுமதி வழங்க கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து இந்து முன்னணி கோட்ட தலைவர் மிசா சோமன், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் சிவகுமார், வழக்கறிஞர் வேல்தாஸ் ஆகியோர் கூறும்போது, "சப்-கலெக்டர், நீதித்துறையில் உள்ளவர்கள் காவல் நிலையத்துக்கு வந்து காவடி பவனியை கோயிலுக்கு வழியனுப்பி வைப்பார்கள். குமாரசுவாமிக்கு போலீஸ் காவடியை அபிஷேகம் செய்தபிறகு வரும் வேறு காவடி அபிஷேம் செய்யமாட்டார்கள். அதுபோல கோட்டாறு சவேரியார் ஆலயத்தில் நடக்கும் முதல் நாள் திருவிழா கோட்டாறு காவல் நிலையத்தில் இருந்து நடத்தப்படுவது வழக்கம். எனவே பாரம்பர்யத்தை மாற்றக்கூடாது" என்றனர்.

தக்கலை காவல் நிலைநிலையம் முன்பு குவிந்துள்ளவர்கள்

அதேசமயம் போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, "காவல் நிலையத்தில் காவடி கட்ட முடியாது. விருப்பப்படும் காவலர்கள் விடுப்பு எடுத்து தங்கள் வீடுகளில் இருந்து காவடி கட்டி கோயிலுக்கு கொண்டு செல்லலாம்" என தெரிவித்துள்ளனர். இதனால் பக்தர்களும், இந்து அமைப்பினரும் போராட்டம் நடத்தினர். மேலும் கிராமங்களில் இருந்து பக்தர்கள் எடுத்துவரும் காவடிகளை தக்கலை காவல் நிலையம் முன் வைக்கப்போவதாகவும், காவல் நிலையத்தில் வைத்து காவடிகட்டி எடுத்துச் சென்ற பிறகுதான் அனைத்து காவடிகளையும் குமாரசுவாமி கோயிலுக்கு எடுத்துச்செல்வோம் எனவும் இந்து அமைப்பினர் அறிவித்தனர். .

இதனிடையே பொன்.ராதாகிருஷ்ணன் காவல் நிலையத்தில் வந்து அமர்ந்து போராட்டம் நடத்த போவதாக அறிவித்ததை தொடர்ந்து காவல் நிலையத்தில் காவடி கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/tamilnadu/police-kavadi-issue-in-kanniyakumari-police-station-what-happened

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக