Ad

புதன், 7 டிசம்பர், 2022

நெல்லை மாவட்ட எஸ்.பி-க்கு பிடி வாரன்ட் பிறப்பித்த ஆணையம்! - காரணம் என்ன தெரியுமா?

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையை அடுத்த சிவந்திபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், பரமானந்தம். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அவரின் நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்ததுடன், நிலத்துக்குள் நுழைய முடியாதபடி வேலி அமைத்தனர். தனக்கு ஏற்பட்ட இந்தப் பிரச்னை குறித்து அவர் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தில் புகார் செய்தார். இந்த புகார் தொடர்பாக நெல்லை எஸ்.பி-யான சரவணனுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

காவல்துறை

பரமானந்தம் அளித்த புகார் குறித்து விசாரித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி ஜூன் 10-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு நெல்லை மாவட்ட எஸ்.பி-யான சரவணனுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், ஆணையத்தின் நோட்டீஸுக்கு உரிய பதில் அளிக்கவில்லை. அதனால் அவரை அக்டோபர் 27-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு ஆணையம் உத்தரவிட்டது. அந்த அழைப்பாணையை ஏற்று அவர் ஆஜராகவோ பதில் அளிக்கவோ செய்யவில்லை.

அதனால் அதிருப்தியடைந்த ஆணையம், ஏற்கெனவே அனுப்பிய நோட்டீஸை அலட்சியப்படுத்தியதற்காக ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டதுடன் நவம்பர் 30-ம் தேதி ஆஜராகுமாறு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி 30-ம் தேதி மீண்டும் இந்த மனு மீதான விசாரணை நடந்தபோது எஸ்.பி.சரவணன் ஆஜராகவில்லை. அவருக்குப் பதிலாக கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் மாரிராஜ் ஆஜராகியிருந்தார்.

நெல்லை எஸ்.பி சரவணன்

ஆணையம் நெல்லை எஸ்.பி தொடர்ந்து ஆஜராகாமல் தவிர்த்ததால் அதிருப்தியடைந்தது. இந்த நிலையில், ”நெல்லை எஸ்.பி சரவணன், இந்த ஆணையத்தில் ஆஜராவதை தகுதிக் குறைபாடாக நினைக்கிறார். தன்னை இந்த ஆணையம் கட்டுப்படுத்தாது எனக் கருதுகிறார், அவரது செயலைக் கண்டிக்கும் வகையில் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன், அவரை தென்மண்டல ஐ.ஜி கைதுசெய்து ஆணையத்தில் ஆஜர்படுத்த வேண்டும்” என ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இது குறித்து காவல்துறையினரிடம் கேட்டதற்கு, “நெல்லை எஸ்.பி சரவணனுக்கு ஜாமீனில் வரக்கூடிய பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அவர் விரைவில் ஆணையத்தின் முன்பாக ஆஜராவார்" எனத் தெரிவித்தனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/nellai-sp-was-issued-bailable-warrant-to-appear-before-the-scst-welfare-committee

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக