Ad

செவ்வாய், 13 டிசம்பர், 2022

ஒன் பை டூ

பாபு முருகவேல், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், அ.தி.மு.க

“தி.மு.க கூட்டணியில் இருந்துகொண்டு அ.தி.மு.க-வின் நலனில் அக்கறை செலுத்தும் திருமாவளவனுக்கு நன்றி. அவர் பேசியதிலிருந்து அ.தி.மு.க-வால் ஏதோ ஒருவகையில் வி.சி.க பலனடைந்திருக்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது. அண்ணா ஒருமுறை தி.மு.க-வை அதன் தொண்டர்களால் மட்டுமே அழிக்க முடியும் என்று சொல்லியிருந்தார். தற்போதைய நிலையில், தி.மு.க-வை அதன் தலைவர்கள்தான் அழித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியான ஒரு சூழல் ஒருபோதும் அ.தி.மு.க-வுக்கு ஏற்படாது. தொண்டர்களால் உருவான இயக்கம் இது. கடைசித் தொண்டன் இருக்கும் வரை அ.தி.மு.க இருக்கும். எந்தவொரு சக்தியாலும், அ.தி.மு.க-வைப் பிளவுபடுத்தவோ, சிதைக்கவோ ஒருபோதும் முடியாது. அ.தி.மு.க-வை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடப்பாடியர் திறம்படச் செய்கிறார். சமீபத்தில் கோவையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க-வின் தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன், தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில்தான் பா.ஜ.க கூட்டணி என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அ.தி.மு.க முன்பைவிட தற்போது வலுவாக இருக்கிறது. மற்ற கட்சியில் நடக்கும் பிரச்னைகளை விட்டுவிட்டு, தமிழகத்திலுள்ள மக்கள் பிரச்னைகள் சார்ந்து திருமாவளவன் குரல் கொடுக்க வேண்டும்.”

பாபு முருகவேல், வன்னி அரசு

வன்னி அரசு, துணைப் பொதுச்செயலாளர், வி.சி.க

“உண்மைநிலையைச் சொல்லியிருக்கிறார். இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு மாநிலங்களிலும் வலுவாக இருக்கும் பிரதான கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்வது பா.ஜ.க-வின் வழக்கம். பிறகு அந்தக் கட்சியை வலுவிழக்கச் செய்து, பா.ஜ.க-வை அந்த மாநிலத்தில் விரிவாக்கம் செய்வதுதான் பா.ஜ.க-வின் செயல் திட்டம். இதைத்தான் பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பா.ஜ.க நிகழ்த்தியிருக்கிறது. பா.ஜ.க-வுக்கு என்று எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் கிடையாது, சமூகநலன் சார்ந்த அக்கறையும் கிடையாது. இதுபோல, ஏதாவது குறுக்குவழியில்தான் உள்ளே நுழைய முடியும். அ.தி.மு.க., தமிழக மக்களின் உரிமைக்காகப் பல்வேறு சமயங்களில் போராடியிருக்கிறது. இரு மொழிக் கொள்கையைப் போன்று மாநில நன்மைக்காகப் பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்திருக்கிறது. தற்போது, அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்திருக்கும் பா.ஜ.க அந்தக் கட்சியைத் துண்டுதுண்டாக உடைத்து, கட்டமைப்பைச் சிதைக்க முயல்கிறது. அதன் மூலம், தமிழகத்தில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, அதில் பா.ஜ.க உட்கார வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வின் செயல் திட்டம். இதை அ.தி.மு.க-வினர் புரிந்துகொள்ளாமல், தனித் தனிக் குழுவாக இயங்குவது அந்த இயக்கத்துக்கு நல்லதல்ல!”



source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-thirumavalavan-comments-about-admk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக