Ad

செவ்வாய், 6 டிசம்பர், 2022

மகாதீபம் ஏற்றுவதில் மல்லுகட்டு... `திமுக-வினரை தெய்வம் பார்த்துக்கொள்ளும்' - ஓபிஎஸ் மகன் ஆவேசம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் அதிமுக  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பண்ணைவீடு அருகே உள்ள மலையில் கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. கடந்த 2002 முதல் ஓபிஎஸ் எம்.எல்.ஏ., அமைச்சர், முதல்வராக இருந்தபோது அவருடைய குடும்பத்தாரின் முயற்சியால் அவர்களின் சொந்த செலவில் கோயில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பக்தர்கள் சென்று வரும் வகையில் கோயிலுக்கு மலையில் சாலை அமைக்கப்பட்டு கோயிலை சுற்றிவர கிரிவலப்பாதையும் ஏற்படுத்தப்பட்டு, 2012-இல் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்யும் ஜெயபிரதீப்

​இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும்,  கடந்த 14 ஆண்டுகளாக ஓ.பி.எஸ் குடும்பத்தினர் கார்த்திகை தீபம் ஏற்றி வந்தனர். கார்த்திகை திருவிழாவின் போது மின் விளக்குகள், தோரணங்கள், மேற்கூரைகள் உள்பட தேவையான அனைத்து வசதிகளும் ஓ.பி.எஸ் தனது சொந்த செலவில் செய்து வந்தார்.

​இந்நிலையில் ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு இந்த ஆண்டு கார்த்திகை திருநாள் விழா ஏற்பாடுகள் ஒரு மாதத்திற்கு முன்பிருந்து செய்யப்பட்டது. இதில் கோயில் அன்பர் பணிக்குழுவின் தலைவரும், ஓபிஎஸ் இளைய மகனுமாகிய ஜெயபிரதீப் தலைமையில் அனைத்துப் பணிகளும் நடைபெற்றன. 

தங்கதமிழ்ச்செல்வன்

வழக்கம் போல ஓபிஎஸ் குடும்பத்தினர் கோயில் விழாவை முன்னின்று நடத்துவதை பெரியகுளம் திமுக எம்.எல்.ஏ சரவணக்குமார்,  தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் விரும்பவில்லை எனச் சொல்லப்படுகிறது. இந்துசமய அறநிலைத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில் விழாவில் தொகுதி எம்.எல்.ஏ அல்லது கோயில் செயல் அலுவலர் தான் மகாதீபம் ஏற்ற வேண்டும் கூறிவந்தனர். மேலும் இதுதொடர்பாக செயல் அலுவலரிடமும் மனு அளித்திருந்தனர்.

​இந்நிலையில் ​​கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக வழக்கம்போல் ஓபிஎஸ் குடும்பத்தினர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியகுளம் பாலசுப்ரமணியர் கோயில் ராமதிலகம் என்ற பெண் செயல் அலுவலரை கார்த்திகை தீபம் ஏற்ற எம்.எல்.ஏ சரவணக்குமார்,  தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோர் மேடை ஏற்றி நிறுத்தினர்.

ராஜபட்டரை தடுத்த திமுகவினர்

​அதே​வேளையில் ஓபிஎஸ்-ன் இளைய மகன் ஜெயபிரதீப் மற்றும் அவரது குடும்பத்தினர் என பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது ஜெயபிரதீப்புக்கு பரிவட்டம் கட்டப்பட்டு, திருப்பரங்குன்றம் முருகன் கோயில் ராஜாபட்டர் மகாதீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். அப்போது தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்ட திமுகவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

​இதனிடையே கோயில் பூசாரி கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக தீபத்துடனும்,  செயல் அலுவலர் கார்த்திகை தீபம் ஏற்ற தீ பந்தத்துடனும் இருவருக்கிடையே போட்டி ஏற்பட்டது. அப்பொழுது கோயில் பூசாரி கார்த்திகை தீபம் ஏற்ற முற்பட்டபோது பெரியகுளம் எம்.எல்.ஏ பூசாரியின் வேட்டியை பிடித்து பின்னே இழுக்க என தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியாக ஜெயபிரதீப் கையில் வைத்திருந்த விளக்கை கோயில் பூசாரி பெற்றுக் கொண்டு கார்த்திகை தீபத்தை ஏற்றி வைத்தார்.​ ​இதனால் ஆத்திரமடைந்த தங்க தமிழ்ச்செல்வன், சரவணகுமார்  மற்றும் திமுகவினர் ஓபிஎஸ் தரப்பினர் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்பு அந்த இடத்தை விட்டு ஆவேசமாக கிளம்பிச் சென்றனர்.

பரிவட்டத்துடன் ஜெயபிரதீப்

இதையடுத்து தீபம் ஏற்றும் மேடையில்​ நின்றிருந்த ​ஜெயபிரதீப்​,​ ​``திமுக மாவட்ட செயலளாருக்கு இங்கு என்ன வேலை. நான் எனது தந்தை ஓபிஎஸ் உள்ளிடோர் சிவபக்தர்கள், இறைப்பணி செய்து கொண்டிருக்கிறோம். இந்தக் கோயில் அன்பர் பணிக்குழுவில் உறுப்பினர்களோடு உறுப்பினர்களாக இருந்து பணி செய்கிறோம். இதில் சாதி, அரசியலுக்கு இடமில்லை. இருப்பினும் கோயிலுக்கு வந்தவர்களை உள்ளே வழிபட அழைத்தோம். அவர்களே ஆகமவிதிகளை மீறி தீபம் ஏற்றுவதிலேயே குறியாக இருந்தனர். ​தி​.​மு​.​கவினர்​ ​அரசியல் காரணங்களுக்காக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை  மக்களும் தெய்வமே பார்த்துக் கொள்வார்கள்” எ​னக் கூறிவிட்டு கீழே இறங்கினார். 

​இதனைத் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கைலாசநாதர் திருக்கோவிலுக்கு வந்து கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட கொப்பறையில் ஒரு குடம் நெய் ஊற்றி கார்த்திகை தீபத்தை வழிபட்டு பின்பு கைலாசநாதர் சாமி தரிசனம் செய்தார்.

கோயில் பாதையில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள்

கார்த்திகை தீபம் ஏற்றுவதில் ஓபிஎஸ் குடும்பத்தினருக்கும் தி​.​மு​.​கவினருக்கும் இடை​​யே ஏற்பட்ட இந்த வாக்குவாதத்தால் கார்த்திகை தீபம் ​6.05 மணிக்கு ஏற்றப்பட வேண்டியது ​காலதாமதமாக 7 மணிக்கு ஏற்றப்பட்டது. ​மலை அடிவாரம் முதல் கோயில் நுழைவுவாயில் வரை தரிசனத்திற்காக காத்திருந்த ​மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். 



source https://www.vikatan.com/government-and-politics/politics/mahadeepam-at-periyakulam-god-will-take-care-of-dmk-says-ops-son

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக