Ad

சனி, 3 டிசம்பர், 2022

மும்பை தாராவி குடிசைகளை கோபுரமாக்கப்போகும் அதானி குழுமம்: வீடுகளின் விலை கிடு கிடுவென அதிகரிப்பு!

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியாகக் கருதப்படும் மும்பை தாராவியில் இருக்கும் குடிசைகளை இடித்துவிட்டு அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் 20 ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்து வருகிறது. இதற்கு முந்தைய அரசுகள் தாராவி குடிசை மேம்பாட்டுத் திட்டத்துக்கு டெண்டர் விட்டது. அவை தொடர்ந்து தடைபட்டு வந்தது. கடைசியாக தேவேந்திர பட்நவிஸ் அரசு ஆட்சியில் இருந்தபோதும் தாராவி குடிசை மேம்பாட்டுத் திட்டத்துக்கு டெண்டர் விடப்பட்டு வெளிநாட்டு நிறுவனம் ஒன்று இத்திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டது. ஆனால், அந்த நிறுவனத்துக்கு பணியை வழங்க விரும்பாத அரசு அதை அப்படியே கிடப்பில் போட்டது. முந்தைய உத்தவ் தாக்கரே அரசு அந்த டெண்டரையே ரத்து செய்துவிட்டது.

தாராவி குடிசைகள்

அதானி நிறுவனம்

தற்போது புதிதாக வந்துள்ள அரசு கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் இத்திட்டத்தை தூசி தட்டி எடுத்து சர்வதேச அளவில் டெண்டர் விட்டது. இதில் 8 நிறுவனங்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டன. அதானி, டிஎல்எஃப் உட்பட் மூன்று நிறுவனங்கள் இறுதிக்கட்ட ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதானி நிறுவனம் இறுதி செய்யப்பட்டுள்ளது. தாராவி குடிசை மேம்பாட்டுத் திட்டம் இறுதி செய்யப்பட்டது, தாராவி குடிசைவாசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாராவியில் பெரும்பாலான வீடுகள் 10x10 என்ற அளவில் உள்ளதால், கழிவறை வசதி கூட வீட்டுக்குள் கட்ட முடியாத நிலை இருந்தது. இதனால் அதிகமான தமிழர்கள் இப்பகுதியில் தங்களது வீடுகளை விற்பனை செய்துவிட்டு, புறநகர் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். தற்போது தாராவியில் தமிழர்கள் எண்ணிக்கை குறைந்து, வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தாராவியில் உள்ள குடிசைகள்...

தாராவியில் 2000-ம் ஆண்டுக்குள் கட்டப்பட்ட குடிசை வீடுகளுக்கு, இலவச வீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால், அதிகமான வீடுகள் 2000-ம் ஆண்டுக்குப் பிறகு கட்டப்பட்டுள்ளது.

தாராவி குடிசைமேம்பாட்டு ஆணைய அதிகாரி ஸ்ரீனிவாஸ்

தாராவியில் ஸ்பார்க் என்ற குடிசை மேம்பாட்டு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தாராவி விகாஷ் சமிதி என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. அதன் தலைவர் சண்முகையாவிடம் இது குறித்து கேட்டதற்கு, ``2005-ம் ஆண்டு தாராவியில் எத்தனை குடிசைகள் இருக்கின்றன என்று முகேஷ் மேத்தா என்பவரால் கணக்கெடுக்கப்பட்டது. அப்போது 66,000 குடிசைகள் இருந்தன. 2010-ம் ஆண்டு மீண்டும் மாஷெல் என்ற அமைப்பு குடிசைகளைக் கணக்கெடுப்பு நடத்தியது. இதில் 90,000 குடிசைவாசிகள் இருப்பதாகத் தெரிவித்தது. ஆனால், இப்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருக்கும். அதிகமான தமிழர்கள் தங்களது வீடுகளை விற்று விட்டுச் சென்றுவிட்டனர். குடிசைகள் புனரமைக்கப் படும்போது அவர்கள் மீண்டும் இங்கு வர வாய்ப்பு ஏற்படும்" என்று தெரிவித்தார்.

தாராவி உட்பட மும்பை முழுவதும் உள்ள குடிசைகள் கணக்கெடுப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காகப் ஸ்பார்க் அமைப்பு பாடுபட்டு வருகிறது. இந்த அமைப்பின் செயலாளர் சேகரிடம் இது குறித்து கேட்டதற்கு, ``தாராவியில் தற்போது இருக்கும் குடிசைகள் கட்டடங்களாகக் கட்டப்பட்ட பிறகு, அவை அடுக்குமாடி குடிசைகளாக மாறக்கூடாது என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. மக்களின் எதிர்ப்பார்ப்புக்கு தக்கபடி அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்தால் மட்டுமே இத்திட்டம் மக்களுக்கு பயனளிக்கும். அதோடு குடிசைவாசிகளுக்கு கட்டப்படும் வீடுகளையும், விற்பனைக்காகக் கட்டப்படும் வீடுகளையும் தனித் தனியாகப் பிரித்து கட்டி மக்களிடம் பாகுபாடு ஏற்படுத்தக் கூடாது. 2000-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே வசிக்கும் சிலர் போதிய ஆவணங்கள் இல்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கும் மாற்று வீடு கொடுக்க வேண்டும்'' என்றார்.

தாராவியில் 60,000 குடிசைகளும், 13,000 கடைகள், சிறுதொழில் நிறுவனங்கள் இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

மும்பை தாராவி குடிசைகள்

அதானி நிறுவனம் என்ன செய்யப்போகிறது?

2019-ம் ஆண்டு டெண்டர் விட்டபோது தோல்வியடைந்த அதானி நிறுவனம் இப்போது இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்று இருக்கிறது. தாராவியில் எத்தனை குடிசைகள் 2000-ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டது என்பது குறித்து முதலில் அதானி நிறுவனம் கணக்கெடுப்பு நடத்த இருக்கிறது. 20,000 கோடி செலவில் தகுதியுள்ள அனைத்து குடிசைவாசிகளுக்கும் 405 சதுர அடியில் இலவச வீடுகள் கட்டிக்கொடுக்க இருக்கிறது.

தாராவியில் மண்பாண்டங்கள், லெதர், ரெடிமேடு ஆடைகள், பர்ஸான் எனப்படும் தின்பண்டங்கள் தயாரிக்கும் சிறுதொழில்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. இதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை செய்கின்றனர். அவர்களை எங்கு மாற்றப்போகின்றனர் என்ற கவலை தொழிலதிபர்களியே ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலதிபர் கிருஷ்ணா ஷேட் கூறுகையில், ``தாராவியில் இருந்து எந்த ஒரு பகுதிக்கு தயாரிப்பு பொருள்களை எளிதில் எடுத்து செல்ல முடியும். ஆனால், மற்ற பகுதியில் இது போன்ற வசதிகள் கிடையாது'' என்றார்.

தாராவி குடிசை மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.வி.ஆர். ஸ்ரீனிவாஸ் இது குறித்து கூறுகையில், தற்போது 2.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், சுமார் 6.5 லட்சம் பேர் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு ஏழு ஆண்டுகளில் மீண்டும் வீடுகள் கட்டப்பட்டு குடியமர்த்தப்படுவார்கள். இதற்கான முழு திட்டத்திற்கும் ரூ. 20,000 கோடி செலவாகும். தாராவி குடிசை மேம்பாட்டுத் திட்டம் மிகவும் சிக்கலானது. மாற்று வீடுகள் பெற தகுதியில்லாதவர்களுக்கு குடியிருப்புகள் வழங்குவதுதான் மிகவும் சவாலானது. அரசின் ஒத்துழைப்போடு இதற்கு தீர்வு காண்போம். குடிசையில் இரண்டு மாடி அல்லது மூன்று மாடி இருந்தாலும் கீழ் தளத்தில் இருக்கும் ஒருவருக்கு மட்டும்தான் மாற்று வீடு கொடுக்க முடியும். புதிய கணக்கெடுப்பில் தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மும்பை தாராவி குடிசைகள்

அதானி குழுமம் தாராவி குடிசைகளை மேம்படுத்தும் பணிகளை செய்ய உள்ளதால், குடிசைகளின் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. 15 முதல் 20 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட குடிசைகள், தற்போது 20 முதல் 25 லட்சம் வரை விலை அதிகரித்துள்ளது. 10 லட்சம் மக்கள் வசிக்கும் தாராவி குடிசைப்பகுதியை 7 ஆண்டுக்குள் மேம்படுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பையின் மிகவும் புகழ்பெற்ற பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் பகுதிக்கு மிகவும் அருகில் தாராவி உள்ளது. மேம்படுத்தப்பட்ட பிறகு தாராவி புதுப்பொழிவு பெறும் என்பதில் சந்தேகமில்லை.



source https://www.vikatan.com/news/adani-group-to-develop-mumbais-dharavi-slums-house-prices-are-on-the-rise

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக