Ad

ஞாயிறு, 4 டிசம்பர், 2022

BANvIND: `இந்திய பவுலர்களைப் பதம் பார்த்த மெஹடி ஹாசன்!' - வங்கதேசம் திரில் வெற்றி!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடுகிறது என்றாலே பரபரப்பான திரில்லருக்கு பஞ்சம் இருக்காது. மற்ற அணிகளுடன் வங்கதேசம் சற்று தொய்வடைந்து காணப்பட்டாலும் இந்தியா என்று வந்துவிட்டால் தன்னுடைய முழு திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற நினைப்பதை நாம் நெடுங்காலமாக வரலாற்றின் பக்கங்களில் கண்டு வருகிறோம்.

2007 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் தொடங்கிய இந்த திரில்லர்கள் 2016 டி20 உலகக்கோப்பை, 2018 நிதாஸ் டிராபி என சென்று சற்று முன் முடிந்த டி20 உலகக்கோப்பை வரை தொடர்ந்தது. இதன் நீட்சியாகத் தற்போது மற்றும் ஒரு திரில்லர் போட்டியை இந்த இரண்டு அணிகளும் பார்வையாளர்களுக்கு கொடுத்துள்ளன.
ரோஹித் ஷர்மா

ஆட்டம் தொடங்குவதற்கு முன்னால் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய கேப்டன் ரோகித், "வரும் உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் எட்டு, ஒன்பது மாதங்களுக்கு மேல் இருப்பதாகவும் அதனால் தற்போதே அதைப் பற்றி பேச தேவையில்லை" என்று கூறியிருந்தார். பெயரளவில் அவர் கூறியிருந்தாலும் இந்தியா தற்போதைய அதற்கான திட்டத்தில் இறங்கி உள்ளது அணித்தேர்வில் தெளிவாக தெரிந்தது. தொடர்ந்து சில போட்டிகளாக சொதப்பி வந்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பண்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். கூடவே ஆறு பந்துவீச்சாளர்கள் தேவை என்பதால் வழக்கத்திற்கு மாறாக ஒரு பேட்டர் இல்லாமல் இந்திய அணி களம் கண்டது.

ஒரு எக்ஸ்ட்ரா பேட்டர் இல்லாத குறையை மிக விரைவில் இந்திய அணியை வங்கதேசம் உணர வைத்தது. தவான் இடதுகை வீரர் என்பதால் விரைவாகவே வங்கதேசத்தின் ஆஃப்-ஸ்பின்னர் மெஹடி ஹாசன் பந்து வீச வந்தார் வந்து வேகத்திலேயே தவானின் விக்கெட்டையும் வீழ்த்தினார். அதன் பின்பு ரோஹித் மற்றும் கோலி இணைந்து சில பவுண்டரிகளை அடித்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு இரண்டு சமகால பேட்டிங் ஜாம்பவான்கள் இணைந்து விளையாடுவதை காண ரசிகர்கள் தயாரான போது அந்த ஆர்வத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சகிப் அல் ஹசன். எந்த இரண்டு பேர் விளையாடுவதை காண மொத்த இந்திய ரசிகர்களும் தயாராகினார்களோ அந்த இருவரையும் ஒரே ஓவரில் வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார் ஷகிப்.

அதன் பின்பு ஸ்ரேயாஸ் சிறிது நேரம் தாக்குப் பிடித்தாலும் வழக்கமான ஷார்ட் பால் பவுலிங் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆல்ரவுண்டர்கள் என்ற முறையில் அணிக்குள் வந்த வாஷிங்டன் மற்றும் ஷபாஷ் இருவருமே பெரிதான பங்களிப்பை வழங்கவில்லை. ராகுல் மட்டுமே தனித்து நின்று தன்னால் முடிந்த வரை அவ்வப்போது பவுண்டரிகள் அடித்தார். இத்தனைக்கும் வங்கதேச அணியின் நம்பர் 1 சுழற்பந்து வீச்சாளரான ஷகிப் பெரிதான வேரியேஷன் எல்லாம் முயற்சிக்கவில்லை. நேராக ஸ்டம்புக்கு குறி பார்த்து தான் பந்தை வீசினார். அதை அடிப்பதிலேயே இந்திய வீரர்களுக்கு சிக்கல்கள் இருந்தன.

Rahul
ராகுல் 70 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து எபாடட் ஹுசைன் பந்தில் ஆட்டமிழந்தார். ராகுல் ஆட்டம் இழந்து சிறிது நேரத்திலேயே இந்திய அணி 186 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

வங்கதேசம் சார்பாக ஷகிப் 5 விக்கட்டுகளையும், எபாடட் நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

மிக எளிதான இலக்கை துரத்திய வங்கதேச அணிக்கு ஆரம்பத்திலேயே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. தீபக் சஹார் வீசிய இன்னிங்ஸின் முதல் பந்திலேயே வங்கதேச துவக்க வீரர் சாண்டோ அவுட் ஆனார். கடந்த 2013இல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி ஒன்றில் முதல் பந்திலயே புவனேஸ்வர் குமார் விக்கெட் எடுத்ததைப் போன்ற அனுபவத்தைக் கொடுத்தது இந்த விக்கெட். இந்தியாவின் பந்துவீச்சு சிறப்பாக இருந்து சீரான இடைவெளியில் இந்திய அணிக்கு விக்கெட்டுகளை பெற்றுக் கொடுத்த வண்ணம் இருந்தன. அதிலும் சகிப் அல் ஹஷனை அவுட் ஆக்க விராட் பிடித்த கேட்ச் சமூக வலைதளங்களில் மிக வைரலாக பரவியது.

ஒரு கட்டத்தில் 136 ரன்களுக்கே வங்கதேச அணியின் 9 விக்கெட்டுகளையும் இந்திய அணி வீழ்த்தி இருந்தது.

வெற்றிக்கு இன்னமும் 50 ரகங்களுக்கு மேல் தேவைப்பட்ட காரணத்தினால் இந்திய அணி இந்த போட்டியில் எளிதில் வென்று விடும் என்று தான் பலரும் கணித்தனர். ஆனால் வங்கதேச அணி வேறு கணக்கு வைத்திருந்தது.

அந்த அணியின் ஆல் ரவுண்டர் மெஹடி ஹாசன் ஒரு பக்கத்தில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தாலும் மிக மிக கவனத்துடனும் பொறுமையுடனும் களத்தில் நின்று அவ்வப்போது தேவையான பவுண்டரிகளை அடித்துக் கொண்டிருந்தார். முதல் சில பவுண்டரிகளை இந்திய வீரர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் போகப் போக அவர் அடிக்கும் ஒவ்வொரு பவுண்டரியும் இந்திய வீரர்கள் முகத்தில் சோக ரேகையை பரவ விட்டது. இதன் காரணமாக எழுந்த அழுத்தத்தால் அவர் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பு ஒன்றை கீப்பர் ராகுல் தவறவிட்டார். கடைசி கட்டத்தில் சஹார், குல்தீப் சென் என இருவரும் சற்று மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்த வங்கதேசம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

மெஹடி ஹாசன்

அடுத்தது என்ன?

புவனேஷ்வர் மற்றும் ஷமி இருவருமே அடிக்கடி காயத்துக்கு உள்ளாகும் வீரர்கள் என்பதால் இந்த இருவரை மட்டுமே முற்றிலும் நம்பி உலகக் கோப்பை தொடருக்கு செல்வது மிகப்பெரிய பின்னடைவைக் கொடுக்கும். பும்ராவுடன் இணைந்து பந்துவீச இன்னொரு பந்துவீச்சாளரை இந்திய அணி தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதிக அழுத்தங்கள் நிறைந்த உலகக்கோப்பை போட்டிகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற பயிற்சிகளை எல்லாம் இது போன்ற திரில்லர் போட்டிகள் தான் கொடுக்கும். ஆகையால் இந்திய அணி மீண்டும் இந்த பந்துவீச்சாளர்களுக்கு நம்பிக்கையூட்டி வரும் போட்டிகளில் விளையாட வைப்பது இந்தியாவுக்குதான் நன்மை பயக்கும்.



source https://sports.vikatan.com/cricket/bangladesh-cricket-team-gives-shock-to-indian-fans

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக