சூப்பர் 12 சுற்றின் கடைசி நாள் போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கடைசி நாளில் நெதர்லாந்து ஒரு தரமான சம்பவத்தைச் செய்திருக்கிறது. நெதர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான போட்டியில் தென்னாப்பிரிக்க அதிர்ச்சி தோல்வியை அடைந்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவின் தோல்வியால் இந்திய அணி தனது கடைசி போட்டியை ஆடுவதற்கு முன்பாகவே அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறது.
அடிலெய்டில் நடந்த இந்த ஆட்டத்தில் பவுமாவே டாஸை வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்திருந்தார். நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்திருந்தது. 20 ஓவர்களில் அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை எடுத்திருந்தது. ஓப்பனிங் இறங்கிய மைபர்க், ஓ டவுட் இருவருமே ஓரளவுக்கு நல்ல தொடக்கமே கொடுத்தனர். இந்த பார்ட்னர்ஷிப்பே அரைசதத்தை கடந்திருந்தது. இங்கிடி, ரபாடா, பர்னல், நோர்கியா என தென்னாப்பிரிக்காவின் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுமே பவர்ப்ளேயிலேயே அறிமுகம் ஆகியிருந்தனர். நால்வராலுமே கூட தென்னாப்பிரிக்காவின் ஓப்பனிங் கூட்டணியை உடைக்க முடியவில்லை. பார்ட் டைமரான மார்க்ரம் வந்தே இந்தக் கூட்டணியை பிரித்தார். நெதர்லாந்து அணி எங்கேயும் பெரிதாக சறுக்கவில்லை. வீழ்ச்சியை சந்திக்கவில்லை. சீராக ஆடி போட்டியளிக்கக்கூடிய ஒரு ஸ்கோரை எட்டியிருந்தனர். டாம் கூப்பர், ஆக்கர்மன் போன்றோரிடமிருந்தும் கணிசமான பங்களிப்பு கிடைத்திருந்தது.
தென்னாப்பிரிக்காவிற்கு டார்கெட் 159. அடிலெய்டு பேட்டிங் ஒத்துழைக்கக்கூடிய மைதானம். அங்கே இது ஒரு சுமாரான டார்கெட்தான். ஆனால், அதை கூட எட்ட முடியாமல் தென்னாப்பிரிக்க அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்திருக்கிறது. நெதர்லாந்து பௌலர்கள் பவர்ப்ளேக்குள்ளாகவே பவுமா, டீகாக் என இரண்டு ஓப்பனர்களையும் வெளியேற்றினர். கொஞ்சம் நின்று அதிரடி காட்டத் தொடங்கிய ரூஸ்ஸோவின் விக்கெட்டை க்ளவர் சரியான நேரத்தில் வீழ்த்திக் கொடுத்தார். க்ளவர் 10வது ஓவரை வீசினார். அதில்தான் ரூஸ்ஸோவின் விக்கெட் கிடைத்திருந்தது. க்ளவரின் முதல் ஸ்பெல் அந்த ஒரே ஓவரோடு முடிவுக்கு வந்தது.
இதன்பிறகு 16வது ஓவரைத்தான் வீசினார். ஆனால், இங்கேயும் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார். ஒரு ஷார்ட் பிட்ச் டெலிவரியில் மில்லரின் விக்கெட்டை வீழ்த்தினார். பின்பக்கமாக ஓடிச் சென்று மெர்வும் மில்லர் கொடுத்த கேட்ச்சை அட்டகாசமாக பிடித்திருந்தார். அதே ஓவரில் பர்னலின் விக்கெட்டையும் க்ளவர் வீழ்த்தினார். ஹென்றிச் க்ளாசனின் விக்கெட்டை டீ லீட் வீழ்த்திக் கொடுத்தார்.
முக்கியமான விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்டதால் கடைசிக்கட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார்கள்.
Have loved and admired South African cricket. But their tryst with the World Cup is like one of those Hindi movie tragedies from the 50s and 60s. And there doesn't seem to be a happy ending in the last scene!
— Harsha Bhogle (@bhogleharsha) November 6, 2022
தென்னாப்பிரிக்காவின் இந்தத் தோல்வியின் மூலம் இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பே அரையிறுதிக்கு தகுதிப்பெற்றிருக்கிறது. மேலும், பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்திற்கும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தென்னாப்பிரிக்கா 5 புள்ளிகளையும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் 4 புள்ளிகளையும் வைத்திருக்கின்றன.
நடக்கவிருக்கும் பாகிஸ்தான் vs வங்கதேசம் போட்டியில் வெல்லும் அணி 6 புள்ளிகளோடு அரையிறுதிக்கு முன்னேறும். இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டாலும் ஒரு புள்ளியை பெற்று ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தானே அரையிறுதிக்கு செல்லும். ஆக தென்னாப்பிரிக்க அணி இந்த முறையும் அரையிறுதி வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டுள்ளது.
இதுக்கு முன்னாடி, இப்படி நிறைய தடவை நடந்திருக்கு. ஆனா, இதான் ஃபர்ஸ்ட் டைம்!
source https://sports.vikatan.com/cricket/t20-worldcup-south-africas-shocking-defeat-to-the-netherlands-opens-the-door-for-pakistan-and-bangladesh
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக