Ad

திங்கள், 7 நவம்பர், 2022

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - பரிசு ரூ.5,000

புதிர்ப்போட்டி-49 விடைகள்...

சரியான விடையுடன்... `இந்த நவயுக தீபாவளி கொண்டாட்டத்தில் நீங்கள் மிஸ் செய்யும் அந்தக்கால தீபாவளி பற்றிய நாஸ்டால்ஜியா விஷயம் ஒன்றை சுருக்கமாகப் பகிர்ந்துகொள்ளுங்கள்'... `நச்’ வரிகள் எழுதி ரூ.500 பரிசு பெறும் 10 பேர்...

1. அ.வசந்தா, திருவள்ளூர்: அந்தக் காலத்தில் அம்மியில் அரைத்துச் செய்த சமையல் ருசியும், உரலில் மாவு இடித்துச் செய்த முறுக்கு, அதிரசம் ருசியும் இந்தக் கால தீபாவளி உணவில் கிடைக்கவில்லை. நான் இதைத்தான் மிஸ் பண்ணுகிறேன்.

2. ஆர்.பூஜா, சென்னை-1: அண்டை வீட்டிலிருந்து கிடைக்கும் அதிரசம், முறுக்குகளை ஒரு வாரத்துக்கு வைத்து உண்ணுவோம். அது தற்போது குறைந்துவிட்டது, ஒரு ‘ஃபீலிங்’காகவே உள்ளது.

3. ஆர்.ஆனந்தி, கபிஸ்தலம், தஞ்சாவூர்: கிராமமே ஒன்று திரண்டு டூரிங் தியேட்டருக்குப் படையெடுக்க, கூட்டத்தோடு கூட்டமாக தீபாவளி பலகாரங்களை மடியில் வைத்துக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டே செகண்டு ரிலீஸாகும் புதுப்படங்களை ரசித்துப் பார்க்கும் அந்த இனிய நினைவுகள் இனி வரவே வராது.

4. கே.ஆர்.சாந்தி, மதுரை-1: புத்தாடை அணிந்துகொண்டு மாமா, அத்தை, சித்தப்பா, சித்தி ஆகியோரின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு, கூடவே எட்டணா, நாலணா என்று தீபாவளி காசு வாங்கிக்கொண்டது எல்லாம் ‘மிஸ்ஸான’ விஷயம் தானே!

5. எம்.மதுமிதா, சென்னை-92: அம்மியில் அரைத்த மருதாணி கையில் சிவக்கிறதா என தூங்காமல் அதையே பார்ப்பது, யார் வீட்டிலிருந்து அதிகமான பலகாரம் வருகிறது என்று எண்ணுவது, இரவு முழுவதும் தூங்காமல் மறுநாள் சீக்கிரம் எழுந்து வெடி வெடிப்பது, யார் வீட்டில் அதிக வெடி வெடித்து பேப்பர் இருக்கிறது எனப் பார்ப்பது எல்லாமே இப்போது மிஸ்ஸிங்!

6. டி.முருகப்ரியா, ஈரோடு: தனக்கு பல் இல்லாவிட்டாலும் பேரன், பேத்திகள் ஆசையாகச் சாப்பிட வேண்டுமென பாட்டி சுடும் முறுக்கும், அதிரசமும் கண்முன்னே நிற்கிறது. அதற்குத் தேவை யானவற்றை பாட்டி கேட்க, கேட்க ஓடி, ஓடி வாங்கித்தரும் தாத்தா வும் பாட்டியும் இப்போது இல்லை. எத்தனை விதமான ஸ்வீட்ஸ் வாங்கினாலும் தாத்தா - பாட்டிக்காகவும், முறுக்கு - அதிரசத்துக்காக வும் மனம் ஏங்குகிறது.

7. ஏ.உமாராணி, தர்மபுரி: அந்தக் காலத்தில் எங்கள் தெருவே ஜமா சேர்ந்துதான் தீபாவளிக்கு துணி வாங்க காலையில் செல்வோம். அவரவர் விருப்பம், பட்ஜெட்டுக்கேற்ப வாங்கிக்கொண்டு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வருவதற்கு இரவு ஒன்பது மணி ஆகிவிடும். இப்போது ஆன்லைனில் ஆர்டர் செய்து விதம்விதமாக வாங்கினாலும் அன்று நாள் முழுக்க கடை கடையாக ஏறி இறங்கி செய்த தீபாவளி பர்ச்சேஸை மறக்க முடியாது.

8. ஜி.திவ்யா, திருச்சி-18: மருதாணியை அம்மியில் வைத்து அரைத்து கையில் வைத்துக்கொள்வதும், யாருக்கு அதிகம் சிவந்துள்ளது என்று மறுநாள் காலை எழுந்து போட்டி போட்டுக் கொண்டு கையைக் கழுவுவோம். இப்போது விதம்விதமாக நகப் பூச்சு, மெஹந்தி வைத்துக்கொண்டாலும் மருதாணி வைத்து மகிழும் காலம் மிஸ்ஸிங்.

9. ஜானகி, கோவை-36: அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஸ்நானத்தை மிஸ் செய்கிறேன். மூன்று மணிக்கெல்லாம் எழுந்து, தோழிகளை அழைத்துக்கொண்டு அடர்ந்த கருநீல வானத்தை ரசித்தபடி கதை பேசிக்கொண்டே நீரில் குளித்த அந்த கங்கா ஸ்நானத்தை மிஸ் செய்கிறேன். அடுத்து புத்தாடை மீதான ஆசை, எதிர்பார்ப்பு, ஏக்கம்... அனைத்தும் தொலைந்து போயின.

10. ர.ராஜம் பிரியா, சென்னை-20: நான்கு மணிக்கே எழுந்து எண்ணெய் வைத்து தலைகுளித்து, புத்தாடை அணிந்து மெல்லிய மழைத்தூறலில் பட்டாசு வெடித்து, சாமி கும்பிட்டு, பெரியவர்கள் ஆசி பெற்று எட்டு மணிக்கெல்லாம் பலகாரம் சாப்பிடுவோம். இப் போது என் பிள்ளைகள் எழுந்துகொள்வதே எட்டு மணிக்குத்தான்.



source https://www.vikatan.com/news/general-news/puthirpotti-49-answers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக