Ad

செவ்வாய், 8 நவம்பர், 2022

கப்பலில் சிக்கித் தவித்த 300-க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள்... விரைந்து மீட்ட சிங்கப்பூர் கடற்படை!

கொரோனா தொற்றின் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் நிலைகுலைந்தது. அதை தொடர்ந்து, இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நீடித்துவருகிறது. அங்கு அத்தியாவசிய பொருள்களின் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்திருக்கிறது. அதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

கப்பல்

இந்த நிலையில், இலங்கை தமிழர்கள் 300-க்கும் அதிகமானோர் இலங்கையில் இருந்து புகலிடம் தேடி கப்பல் ஒன்றில் கனடா செல்ல புறப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் சென்ற கப்பல் பிலிப்பைன்ஸ், வியட்னாமிடையே சென்றபோது திடீரென நடுக்கடலில் மூழ்க தொடங்கியிருக்கிறது. உடனே கப்பலில் இருந்த சிலர், இலங்கை கடற்படையை தொடர்பு கொண்டு, தாங்கள் ஆபத்தான நிலையில் இருப்பது தொடர்பாக கூறியிருக்கின்றனர்.

அதை தொடர்ந்து, கொழும்பில் உள்ள கடல்சார் இணைப்பு ஒருங்கிணைப்பு மையம் சார்பில், சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் அரசுகளுக்கு, இலங்கை மக்கள் சென்ற கப்பலின் அபாய நிலை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கப்பல்

இது தொடர்பாக தகவல் கிடைத்தவுடன், அந்தந்த அரசுகள் சார்பில் மீட்பு படையினர் இலங்கை தமிழர்கள் சென்ற கப்பலை நோக்கி அனுப்பப்பட்டிருக்கின்றன. அதில், சிங்கப்பூர் கடற்படையினர் கப்பல் மூழ்கிக் கொண்டிருந்த இடத்திற்கு விரைந்து சென்று அந்தக் கப்பல் பயணித்த 306 அகதிகளையும் பத்திரமாக மீட்டிருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் அருகில் இருக்கும் வியட்னாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அதன் பிறகு கப்பலில் பயணித்தவர்களின் விவரங்கள் தெரிவிக்கப்படும் என்று இலங்கை அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த கப்பலில் ஏராளமான பெண்களும் குழந்தைகளும் இருந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/international/over-300-sri-lankan-refugees-rescued-by-singapore-navy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக