Ad

சனி, 5 நவம்பர், 2022

`தலைவா' - அண்ணாமலை முதல் லியாகத் வரை... ஆஸ்பயர் சுவாமிநாதனின் 3 நாள் `அரசியல்' பயிற்சி வகுப்பு!

தேர்தல் வியூக வல்லுநர் ஆஸ்பயர் சுவாமிநாதனின் ஆஸ்தர் நிறுவனம் நடத்திய 'தலைவா' நிகழ்ச்சி, ஒரு புது மாற்றத்தை தமிழக அரசியல் அரங்கில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. நவம்பர் 2-ம் தேதி தொடங்கி, மூன்று நாள்கள் நடந்த இந்த நிகழ்ச்சியில், அரசியலில் சாதிக்க விரும்புபவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட்டன. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடங்கி, அ.தி.மு.க-வில் பன்னீர் அணியைச் சேர்ந்த தலைவர் ஜெ.சி.டி.பிரபாகர் வரை பலரும் தங்கள் அனுபவங்களை இந்த பயிற்சி வகுப்பில் வழங்கினர்.

அண்ணாமலை

முதல்நாள் பயிற்சி வகுப்பின் தொடக்கத்திலேயே கலந்துகொண்ட பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, "பாரதப் பிரதமர் மோடி, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா... இவர்கள் இருவரும் அசாதாரணமான சூழ்நிலையில், அரசியலுக்குள் நுழைந்தவர்கள். தங்களை உருவாக்கி, செதுக்கி, பத்து ஆண்டு காலத்தில் உச்சகட்ட நிலையை அடைந்தவர்கள். ஒரு தலைமையின் மிகப்பெரிய வேலையே, மற்றொரு தலைமையை உருவாக்குவதுதான். அரசியலுக்கு ஒருவர் வரும்போது, அது நமக்கு தேவையா என யோசித்து முடிவெடுக்க வேண்டும். வியூகங்களை வகுத்துக் கொள்ள வேண்டும். சரியாக முடிவெடுக்காதவர்கள்தான் அரசியலில் தோல்வியைச் சந்திக்கிறார்கள். அரசியலில் வெற்றிப்பெற வெளிப்படை தன்மை அவசியம்" என்றார்.

அண்ணாமலையைத் தொடர்ந்து, 'பாரத் ஜோடோ யாத்திரை' குறித்தும், காங்கிரஸ் கட்சியின் புதிய பரிணாமம் குறித்தும் விளக்கிப் பேசினார் காங்கிரஸ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாள சசிகாந்த் செந்தில். அ.தி.மு.க தலைவர் ஜெ.சி.டி.பிரபாகருக்கு 'எம்.ஜி.ஆர் ஓர் ஆளுமை' என்கிற தலைப்பு ஒதுக்கப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆரின் அரசியல் குறித்தும், அவர் வகுத்த வியூகங்கள், அவரின் ஆளுமைப் பண்புகள் குறித்தும் விரிவாகப் பேசினார் பிரபாகர். இந்த நிகழ்ச்சியில், பலரது கவனத்தையும் கவர்ந்தது இயக்குநர் லியாகத் அலிகானின் பேச்சுதான்.

லியாகத் அலிகான்

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பர், அவரின் 'இதய தளபதி' என அறியப்பட்டவர்தான் லியாகத் அலிகான். விஜயகாந்துடன் ஏற்பட்ட மனக்கசப்பால், அவரிடமிருந்து பிரிந்தார். லியாகத்திடம், 'தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் அரசியல் வளர்ச்சி - வீழ்ச்சி' தலைப்பு ஒப்படைக்கப்பட்டது. தலைப்புக்கு ஏற்ப வார்த்தைகளில் விளையாடிவிட்டார் லியாகத். இரண்டாம் நாள் நிகழ்ச்சியின் இறுதியில், பா.ஜ.க தலைவர் குஷ்பு கலந்துகொண்ட 'கேள்வி-பதில்' நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதி நாளில், பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தனர். இந்த நிகழ்வுகளுக்கு இடையே, அரசியலில் தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வது எப்படி? தேர்தல் வியூகங்கள் வகுப்பது எப்படி? ஒரு சட்டமன்றத் தொகுதியில் பூத் கமிட்டி அமைப்பதில் தொடங்கி, பிரசாரம் செய்வதுவரை களப்பணி எப்படி செய்ய வேண்டும்... என்பதைப் பற்றியெல்லாம் ஆஸ்பயர் ஸ்வாமிநாதன் வகுப்பெடுத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்றோரிடம் இந்த வகுப்புகள் ஒரு புது உத்வேகத்தை ஊட்டியதை மறுப்பதற்கில்லை.

இந்த நிகழ்ச்சியின் தேவை குறித்து ஆஸ்பயர் சுவாமிநாதனிடமே பேசினோம். "15 ஆண்டுகளுக்கு முன்னர், பலரிடமும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் படிக்க வேண்டுமென்கிற வேகம்தான் இருந்தது. அரசியலில் ஈடுபட வேண்டுமென்கிற ஆர்வம் இருந்ததில்லை. அந்த மனவோட்டம் மாறியிருக்கிறது. இளைஞர்கள் பலரும் அரசியலில் ஈடுபட ஆர்வமாக இருப்பதை உணர்ந்தேன். அவர்களுக்குத் தேவையான பயிற்சியை அளிப்பதுதான் 'தலைவா' நிகழ்ச்சி. அ.தி.மு.க-விலிருந்து நான் ராஜினாமா செய்தபிறகு, பல்வேறு கட்சிகளிலிடமிருந்து, எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், இளைஞர்களிடம் அரசியல் உத்வேகத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக, 'தலைவா' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ஒவ்வொரு வருடமும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் கட்சிக்குத் தேவையான இளம் தலைவர்களைத் தேடி தேர்ந்தெடுப்பார்கள். அதுபோல, தமிழகத்திலும் இளம் தலைவர்களை அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுப்பதற்கும், புதிய தலைவர்களை உருவாக்குவதற்கும் 'தலைவா' நிகழ்ச்சி கைகொடுக்கும்" என்றார்.

ஆஸ்பயர் சுவாமிநாதன்

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, தமிழகத்திலுள்ள மொத்த வாக்காளர்களில் ஏறத்தாழ 60 சதவிகிதம் பேர் 45 வயதுக்கு கீழானவர்கள்தான். அவர்களின் மனவோட்டத்திற்கு ஏற்ப, தேர்தல் வியூகங்களையும் வாக்குறுதிகளையும் தமிழக அரசியல் கட்சிகள் மாற்றி வருகின்றன. இந்தச் சூழலில், இளைஞர்கள் அதிகப்படியாக தேர்தல் அரசியலில் பங்கேற்க வேண்டிய காலச்சூழலும் உருவாகியிருக்கிறது. அந்தப் புதிய தலைவர்களுக்கு தேவையான வியூக நுணுக்கங்களையும், ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறது ஆஸ்பயர் சுவாமிநாதனின் 'தலைவா' நிகழ்ச்சி. இதுபோன்ற நிகழ்ச்சி தமிழகத்திற்குப் புதியதும், பாராட்டப்பட வேண்டியதும்கூட.



source https://www.vikatan.com/news/politics/article-on-aspire-swaminathans-3-days-political-training-programme-thalaiva

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக