Ad

திங்கள், 7 நவம்பர், 2022

பாரத் ஜோடோ யாத்திரையில் கே.ஜி.எஃப் 2 பாடல்... ட்விட்டர் கணக்கை முடக்க நீதிமன்றம் உத்தரவு!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த யாத்திரை இப்போது தெலங்கானாவில் இருந்து மகாராஷ்டிராவிற்குள் வந்துள்ளது. நாண்டெட் மாவட்டத்தில் மகாராஷ்டிரா எல்லையில் ராகுல் காந்தியை மாநில காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்றனர். நேற்று இரவு ராகுல் காந்தி குருத்வாரா ஒன்றில் தங்கினார். அந்த குருத்வாராவில் நடக்கும் குருநானக் ஜெயந்தியிலும் ராகுல் காந்தி பங்கேற்கிறார். இந்த யாத்திரையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே ஆகியோரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த ஜோடோ யாத்திரை தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கன்னட படமாக கேஜிஎஃப்-2 படத்தின் பாடல்களை பயன்படுத்தி ட்விட்டரில் இரண்டு வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். அனுமதி இல்லாமல் காங்கிரஸ் கட்சியினர் கேஜிஎஃப்-2 படத்தின் பாடல்களை பயன்படுத்திவிட்டதாக பெங்களூரு யஷ்வந்த்பூர் காவல் நிலையத்தில் எம்.ஆர்.டி.மியூசிக் சார்பாக அதன் மேலாளர் நவீன் குமார் புகார் செய்தார்.

காப்புரிமை விதிகளை மீறி படத்தின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தனது புகாரில் குறிப்பிட்டு இருந்தார். இப்படத்தின் பாடல்களை விலைக்கு வாங்க தங்களது கம்பெனி அதிக அளவு முதலீடு செய்திருப்பதாக கூறி சிடி ஒன்றையும் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உட்பட 3 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இவ்வழக்கு உடனே பெங்களூரு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, இதனை அங்கீகரிப்பது இசை திருட்டை ஊக்குவிப்பதற்கு வழிவகுக்கும். எனவே காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பதிவுகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கவேண்டும் என்றும், பாரத் ஜோடோ யாத்திரை பிரசாரம் தொடர்பான ட்விட்டர் பதிவுக்கு தற்காலிகமாக தடை விதித்தும் கோர்ட் உத்தரவிட்டது. மேலும் ஜோடோ யாத்திரை தொடர்பான இரண்டு லிங்க்களுக்கும் கோர்ட் தடை விதித்தது. இத்தடை குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, `கோர்ட் நடவடிக்கைகள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது. கோர்ட் உத்தரவு நகலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. சமூக வலைத்தளத்தை பார்த்துதான் கோர்ட் உத்தரவு குறித்து தெரிந்து கொண்டோம். சட்டப்படி என்ன செய்யவேண்டுமோ அதை செய்வோம்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

மகாராஷ்டிராவிற்குள் ஜோடோ யாத்திரை இருக்கும் போது வரும் 10ம் தேதி சரத்பவார் அதில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் சரத்பவார் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக்குழுக்கூட்டம் ஷீரடியில் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு கூட டாக்டர்களின் துணையோடு சென்று சரத்பவார் உரையாற்றியுள்ளார். இதனால் ஜோடோ யாத்திரையில் சரத்பவார் தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு கலந்து கொள்வார் என்று முன்னாள் முதல்வர் அசோக் சவான் தெரிவித்துள்ளார். இன்று ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்திக்க இருக்கிறார். அதனை தொடர்ந்து வியாழக்கிழமை நாண்டெட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் உரையாற்ற இருக்கிறார். குஜராத் உட்பட இரண்டு மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து கொண்டு இருக்கும் நிலையில் ராகுல் காந்தி ஜோடோ யாத்திரையில் தீவிரமாக இருக்கிறார்.



source https://www.vikatan.com/news/politics/block-congress-twitter-account-for-using-kgf-2-song-in-bharat-jodo-yatra

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக