Ad

செவ்வாய், 7 ஜூன், 2022

Doctor Vikatan: திடீரென உருவான மச்சம்; அழகா... ஆபத்தா?

என் வயது 49. திடீரென முதுகில் ஒரு மச்சம் தோன்றியுள்ளது. அது ஒரே அளவில் இல்லாமல் வளர்வது போல உணர்கிறேன். இது சாதாரண மச்சம்தானா... அல்லது வேறு பிரச்னையின் அறிகுறியாக இருக்குமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்

மச்சம் என்பதை பலரும் அழகு சார்ந்த விஷயமாகவே பார்க்கிறார்கள். எல்லா மச்சங்களையும் அழகு என்று நினைத்துக் கடந்துபோக முடியாது. சில வகை மச்சங்கள் ஆபத்தின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

மருத்துவர் தலத் சலீம்

மச்சங்கள் கரடுமுரடான முனைகள் இல்லாமலும், வழுவழுப்பாகவும் குவிந்த வடிவிலும் இருந்தாலோ, 3 முதல் 6 மி.மீ விட்டத்தில் இருந்தாலோ, அளவிலும் நிறத்திலும் வடிவத்திலும் மாறாமல் அப்படியே இருந்தாலோ, அவை ஆபத்தில்லாத மச்சங்கள் என எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால், மச்சங்களில் ஏதேனும் மாற்றங்களை உணர்ந்தால், அவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது. ஆபத்தான மச்சங்கள், 'மெலனோமா' என்ற சருமப் புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். அதாவது, சருமத்தில் திடீரென மச்சம் போல தோன்றும். ஆண்களுக்கு நெஞ்சு மற்றும் முதுகுப் பகுதியிலும், பெண்களுக்கு கால்களின் கீழ்ப்பகுதியிலும் இந்த அறிகுறி தெரியும்.

உங்களுக்கு இருப்பதாகச் சொல்லும் மச்சத்தில் அசாதாரணமான நான்கு விஷயங்களை கவனியுங்கள்.

A (ASYMMETRY)
மச்சத்தின் ஒரு பாதியானது மறுபாதியுடன் பொருந்தாமல் இருக்கும்.

B ( BORDER)
மச்சத்தின் ஓரங்கள் சொரசொரப்பாகவோ கரடுமுரடாகவோ இருக்கும்.

C (COLOUR)
மச்சத்தின் நிறம் கறுப்பு, சிவப்பு, பழுப்பு நிறங்களின் கலவையாக இருக்கும்.

மச்சம்

D ( DIAMETER)
6 மி.மீக்கும் அதிகமாக இருக்கும். இவற்றில் சில நேரம் அரிப்பும் ரத்தக் கசிவும் இருக்கலாம்.

இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சரும மருத்துவரை அணுகி, பரிசோதனைகள் மேற்கொள்வது பாதுகாப்பானது. ஆபத்தான மச்சங்கள் என உறுதியானால் மருத்துவர் அவற்றை முறையாக, பாதுகாப்பாக அகற்றுவார்.



source https://www.vikatan.com/health/healthy/is-it-normal-for-a-new-mole-to-appear

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக