Ad

திங்கள், 6 ஜூன், 2022

`கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பு; இந்தியா மீள 12 ஆண்டுகள் ஆகும்!’ - ரிசர்வ் வங்கி

கொரோனா மூலம் ஏற்பட்ட பாதிப்புகள் குறைந்த மாதிரி இருந்தாலும் இதனால் ஏற்பட்ட பிரச்னைகள், பாதிப்புகள் சரியாக இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ என்கிற பீதி இப்போது உலக நாடுகளைப் பற்றிக்கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள், ஏழை நாடுகள் என எவ்விதமான வித்தியாசமின்றி அனைத்து நாடுகளையும் கொரோனா வாட்டி வதைத்துள்ளது.

இதில் இந்தியா வர்த்தகம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வருமானம், மக்களின் உடல்நலம் என அனைத்திலும் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது. இந்தப் பாதிப்பிலிருந்து இந்தியா எப்போது முழுமையாக வெளியேறும் என்பது குறித்து ரிசர்வ் வங்கி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொருளாதாரம்

கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார இழப்பில் இருந்து இந்தியா முழுமையாக வெளியில் வர இந்தியாவுக்கு இன்னும் 12 ஆண்டுகள் எடுக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. தொற்றுநோய் காரணமாக இந்தியாவின் பொருளாதார உற்பத்தி கிட்டத்தட்ட ரூ. 52 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்தது, என ரிசர்வ் வங்கி `நாணயம் மற்றும் நிதி அறிக்கை 2021-22’ என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நிதியாண்டு அடிப்படையில் கணக்கிட்டால் 2020-21-ல் ரூ.19.1 லட்சம் கோடியும், 2021-22-ல் ரூ.17.1 லட்சம் கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தரவுகள் கூறுகின்றன. 2022-23-ல் ரூ.16.4 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகித அடிப்படையில் பார்க்கும்போது 2020-21-ம் ஆண்டில் நாட்டின் ஜிடிபி மைனஸ் 6.6 சதவிகிதம், 2021-22-க்கு 8.9 சதவிகிதம் வளர்ச்சி விகிதமாக உள்ளது. 2022-23-க்கு 7.2 சதவிகிதமாக இருக்கும் என மதிப்பிட்டிருக்கிறது.

இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த நிதியாண்டில் 7.5 சதவிகிதத்துக்கு மேல் வளர்ச்சி அடையும் என எடுத்துக் கொண்டாலும் இந்தியா தனது கோவிட்-19 இழப்பில் இருந்து 2034-35-ம் ஆண்டில்தான் முழுமையாக வெளியேற முடியும் என ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறியுள்ளது.

பொருளாதாரம்

கொரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகள் பொருளாதாரத்தின் வளர்ச்சியைப் பெரிதும் பாதித்து வருகிறது. மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் காலாண்டு முடிவுகளில் இதன் தாக்கம் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு நிதியாண்டின் வளர்ச்சியுடன் கூடுதலான வளர்ச்சியை அடைந்தால் மட்டுமே கொரோனா தொற்று பாதிப்புகளைத் தீர்க்க முடியும்.

அந்த வகையில் இந்தியா கொரோனா பாதிப்பில் இருந்து மீள 2034-35-ம் ஆண்டுகள் வரை தேவைப்படும் என ஆர்.பி.ஐ கணித்துள்ளது. இதற்குமேல் மக்களுக்கு வேறு நெருக்கடிகள் வருமோ எனத் தெரியவில்லை. எதற்கும் மக்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லதுதானே?



source https://www.vikatan.com/business/finance/indias-economy-may-take-12-years-to-overcome-covid-losses-says-rbi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக