Ad

செவ்வாய், 4 ஜனவரி, 2022

பிரதமர் மோடிக்கு திமுக அரசு 'சிறப்பு' வரவேற்பு! - கூட்டணிக் கட்சிகளின் பார்வை என்ன?

தமிழ்நாட்டில் புதிதாகத் தொடங்கியுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைக்க ஜனவரி 12-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. 2018-க்குப் பிறகு பிரதமர் மோடி எப்போது தமிழ்நாடு வந்தாலும் #GoBackModi எனச் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்து வந்தனர். ஆனால், தற்போது `மோடி தமிழ்நாட்டின் விருந்தினர்’ எனவும் `இந்தத்துவாதான் எதிரி மோடி அல்ல’ எனவும் தி.மு.க-வினர் பேசி வருகிறார்கள். ஆனால், தி.மு.க-வின் பிரதான கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, ``பிரதமர் மோடி மருத்துவக் கல்லூரியைத் திறந்து வைக்கத் தமிழ்நாடு வருகிறார் என்பதில் எங்களும் மகிழ்ச்சிதான் என்றாலும் இப்போதும் தமிழக மக்களுக்கு எதிராகவும் விரோதமாகவும் மோடி இருப்பதால் அவரின் வருகை எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. எனவே, மோடி தமிழ்நாடு வருவதற்கு வருத்தத்தையும் எதிர்ப்பையும் தெரிவிக்கிறோம். மோடி தமிழ்நாட்டுக்கு வருவதால் எந்தப் பலனும் இல்லை. தி.மு.க உடன் நாங்கள் கூட்டணியில் இருப்பதாலேயே எல்லாவற்றிற்கும் எங்களிடம் தி.மு.க கேட்டுக்கொண்டு செயல்படவேண்டும் என்ற அவசியமில்லை” எனத் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

``தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது பற்றி திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்” என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேசியிருக்கிறார். மேலும், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், ``பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருவதை ஏற்க மாட்டோம். அதை அடையாளப்படுத்தும் விதமாகக் கறுப்புக்கொடி காட்டக் கூட தயங்க மாட்டோம்” என்றும் கூறியுள்ளார்.

ஸ்டாலின் - அழகிரி

பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையில் தி.மு.க-வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வெவ்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகள் பிரதமர் மோடி தமிழ்நாடு வருவதை எவ்வாறு அணுக உள்ளன என்பதை அறிந்து கொள்ளத் தலைவர்கள் சிலரிடம் பேசினோம்...

Also Read: எதிர்க்கட்சியாக `கோ பேக் மோடி’... ஆளும்கட்சியாக `ப்ளீஸ் கம்’ - பிரதமர் வருகையும் திமுக திட்டமும்!

கோபண்ணா,  காங்கிரஸ் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகத்துறைத் தலைவர்

``மத்திய மாநில அரசுகளுக்கு இடையே நல்லுறவு இருப்பது தமிழ்நாட்டுக்குத்தான் நல்லது. தமிழ்நாட்டின் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என தி.மு.க தலைமையிலான அரசு அழைத்திருப்பதில் எந்தத் தவறும் இல்லை. இதே மாதிரியான நிகழ்வுகள் கடந்த காலங்களிலும் நடந்திருக்கிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது இரண்டு தரப்புக்கும் நன்மை தராது. ஆனால், பிரதமர் மோடியைப் பொறுத்தவரைத் தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறார். தமிழ்நாட்டின் முதல்வர் கேட்ட எதையும் அவர் நிறைவேற்றவில்லை. வெள்ள நிவாரண நிதி கேட்ட போது கூட தமிழ்நாட்டைப் புறக்கணித்துவிட்டு இதர ஏழு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கி தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தும் போக்கு இப்போதும் தொடர்கிறது.

ஆனால், தமிழ்நாடு முதல்வர் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக, மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டுக்குப் பிரதமர் மோடி வருவது அரசு ரீதியிலான உறவில் தானே தவிரக் கட்சி ரீதியில் இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். கொள்கை ரீதியில் பா.ஜ.க-வை தி.மு.க தலைவர் ஸ்டாலின் மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை இருக்கும் தி.மு.க கொள்கை ரீதியில் பா.ஜ.க உடனோ மோடியுடனோ எந்த வகையில் இணைந்து செல்ல மாட்டார்.

கோபண்ணா

தமிழ்நாட்டின் நலனைப் புறக்கணிக்கும், பாதிக்கும் அனைத்து விவகாரத்தில் மோடியைத் தமிழ்நாட்டின் விரோதியாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். காங்கிரஸ் கமிட்டியின் நிலையும் அதுதான். உரிமைக்குக் குரல் கொடுக்க அ.தி.மு.க அஞ்சியதால்தான் அப்போது மோடிக்கு எதிராக அனைவரும் குரல் கொடுத்தோம். ஆனால், இன்று தமிழ்நாட்டில் ஆளும் அரசின் நிலை அப்படியில்லை.”

கே.கனகராஜ்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்

``மோடி என்கிற தனி நபர் பிரச்னை இல்லை. அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தத்துவம் இவர்களைப்போல ஆயிரம் மடங்கு மோசமானவர்களை உருவாக்கும். இதுதான் அந்தத் தத்துவத்துக்கு உரிய மரியாதை. மோடி அரசு விழாவுக்கு வருகிறார். அதனால் வரவேற்கிறோம் என்பதில் உடன்பாடு இல்லை. முந்தைய காலகட்டத்திலும் மோடி அரசு விழாவுக்குத்தான் வந்தார். கேள்வி என்னவென்றால் அதிகாரத்தில் இருக்கும் எந்தக் கட்சிக்கும் மத்தியிலிருந்து வரும் ஒரு தலைவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் எனச் சொல்வதில் சிக்கல் இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை மோடியை, பா.ஜ.க-வை விரும்பவில்லை. ஆனாலும் எங்களுக்கும் சேர்த்துத்தானே அவர் பிரதமர். அதை மாற்ற முடியுமா? ஆனால், பா.ஜ.க., மோடி., ஆர்.எஸ்.எஸ் செயல்படுத்தும் மக்கள் விரோதச் செயல்களுக்கு எதிரான மனநிலை நீர்த்துப் போகாமல் காக்க வேண்டுமே தவிர மற்றபடி தனிநபர்களுக்கு மரியாதை கொடுப்பதில் தவறில்லை. எங்களை ஏன் காட்டுமிராண்டிகள் எனச் சொல்கிறீர்கள் என வாஜ்பாய் ஜோதிபாசுவிடம் கேட்ட போது காட்டுமிராண்டிகளை வேறு எப்படி அழைப்பது எனத் தைரியமாகக் கேள்வி கேட்டவர் ஜோதி பாசு. ஆனால், அப்படி எல்லோரும் கேட்டுவிட முடியாது. அவருக்கு இருக்கும் வயசு அனுபவம் இந்தத் தைரியத்தைக் கொடுக்கிறது.

கனகராஜ்

மோடியை எதிர்க்க வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு, வரிச் சுமை, சுகாதாரத்தில் பின் தங்கியிருத்தல் என பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்துமில்லை. ஆனால், #GoBackModi எனப் பதிவிட்டுத்தான் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றில்லை.”

விக்ரமன், வி.சி.க மாநிலச் செய்தித் தொடர்பாளர்

``மத்திய அரசு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கம் உட்பட ஆறு மாநிலங்களுக்குத் தேசிய பேரிடர் நிவாரண நிதி வழங்கியிருக்கிறது. ஆனால், இந்த மாநிலங்களையெல்லாம்விட மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழ்நாடுதான். இது குறித்து தமிழ்நாடு முதல்வர் விரிவாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியும் எந்தப் பதிலும் இல்லை. இப்படியான சிறுபிள்ளைத்தனமான அரசியலைத்தான் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் பா.ஜ.க செய்து வருகிறது. சனாதன எதிர்ப்பில் எப்போதும் வி.சி.க தெளிவாக இருக்கிறது. பா.ஜ.க-வுக்கு மட்டுமல்ல அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராகவும் எப்போதும் வி.சி.க முன்னின்று செயல்படும். கோவையில் ஆர்.எஸ்.எஸ், ஒரு பள்ளியில் அவர்களின் கொள்கையைப் பரப்பும் வகையில் செயல்பட்டதற்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். சத்தீஸ்கரில் ஆர்.எஸ்.எஸ்-இன் கிளை அமைப்புகள் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் எனப் பேசியிருக்கிறார்கள். விஷ்வ ஹிந்து பரிசத்தின் தலைவர், இஸ்லாமியர்களை ஒரு புற்று நோயாக உருவகித்துப் பேசியிருக்கிறார். இந்த நாட்டில் சட்டம் சிறுபான்மையினருக்கான பாதுகாப்பு வழங்கியிருக்கிறது. அதை பா.ஜ.க-வினர் மதிக்கவில்லை. பா.ஜ.க-வுக்கு எதிராக ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்சியையும் அணி திரட்ட வேண்டும் என்பதில் வி.சி.க உறுதியாக இருக்கிறது. பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருவதை ஆளும் கட்சியாக எப்படி அணுகுகிறார்கள் என்பது அவர்களது நிலைப்பாடு. வி.சி.க-வைப் பொறுத்தவரை மோடி பிரதமர் என்பதைவிட அவர் பா.ஜ.க-வின் முகமாகத்தான் பார்க்கிறோம். “விவசாயிகள் போராட்டத்தில் சுமார் 500 விவசாயிகள் இறந்து விட்டனர் என்று நான் கூறியதற்கு, ‘அவர்கள் சாவுக்கு நானா காரணம்? என மோடி திமிராகப் பதிலளித்தார்” என மேகலாய ஆளுநர் சத்ய பால் மாலிக் கூறியிருக்கிறார்.

விக்ரமன் வி.சி.க

மோடிய தமிழ் மண் எப்படி வரவேற்க முடியும்? பாசிசத்தை எப்போதும் எதிர்க்கிறோம். வேரோடும் வேரடி மண்ணோடும் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராகத்தான் செயல்படுவோம். மோடி தமிழ்நாடு வருவதில் வி.சி.க விரும்பவில்லை. அதில் எந்த மாற்றமும் இல்லை.”



source https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-special-welcome-to-pm-modi-what-is-the-view-of-the-coalition-parties

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக