Ad

சனி, 15 ஜனவரி, 2022

"பருத்திவீரன் தந்த வலிகளைப் பற்றிக் கூறினால் அதற்குக் காரணமானவர்களைப் பற்றிக் கூறவேண்டும்"- அமீர்

ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்காக பேச்சாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட பேராசிரியை பர்வீன் சுல்தானா, பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி வருகிறார். ‘கதைப்போமா with பர்வீன் சுல்தானா’ என்ற பெயரிலான அந்த நிகழ்வில் தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான அமீரை சந்தித்து அண்மையில் உரையாடினார்.

நீண்ட அந்த உரையாடலில் இருந்து சில துளிகள்.

பாரதிராஜா, பாலுமஹேந்திரா, பாலா, அமீர், கனி, சசிகுமார் இப்படி ஒரு குருத்துவம் தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கிறது. அதில் உங்களுடைய இடம் என்ன?

எல்லோருடைய பார்வையிலும் ஒரு திரைசார்ந்த குருவாக எனக்கு இருப்பவர் பாலா. ஆனால் ஒரு குருவாக நின்று அவர் வழிநடத்தினாரா என்பது கேள்வி தான். அதற்கு முன்பாகவே திரையரங்கை குருவாக ஏற்றுக்கொண்டிருந்தேன். திரைதான் எனக்கு அதிகமாக சினிமா கற்றுக்கொடுத்தது, மனிதர்கள் அல்ல.

இயக்குநர் அமீர்

அதே போல இந்த சினிமாவில் வெற்றிபெற கடந்துவரும் கஷ்டங்களை நான் இதுபோன்ற நேர்காணலில் சொன்னால் அதை அவமானமாகக் கருதுவேன். நான் ஒன்றும் இந்த தேசத்திற்காக கஷ்டப்படவில்லை, இந்த சமூகம் முன்னேற வேண்டும் என்பதற்காகவோ பாடுபடவில்லை. நான் நல்லபடியாக இருக்கவேண்டும், எனக்குள் இருக்கும் சினிமா பார்வையை வெளிக்கொண்டுவர வேண்டும், என்னை வீழ்த்த நினைத்தவர்களுக்கு முன்னால் எழுத்து நின்று காட்ட வேண்டும் என்பதற்காகத்தானே கஷ்டப்பட்டேன். இதை கஷ்டம் என்று சொன்னால் உண்மையாக கஷ்டப்படுபவர்கள் என்ன சொல்வார்கள். இதெல்லாம் எனக்கு வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும். பிறர் காயப்படுவதற்காக இதைச் சொல்லவில்லை. என்னுடைய பார்வை இது.

"தமிழ் சினிமாவின் மிக முக்கிய படங்களுள் ஒன்று பருத்திவீரன். அப்படத்தை பற்றிக் கூறுங்கள். அதன் பிறகு இத்தனை இடைவெளி ஏன்?"

"பருத்திவீரனுக்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய வலி இருக்கிறது. இதே விகடனில் பருத்திவீரனின் திரைக்கதை புத்தகம் வெளிவந்தபோது அதன் முன்னுரையில் இத்திரைப்படத்தை நான் எடுத்திருக்கவே கூடாது என்று குறிப்பிட்டுள்ளேன். அப்படம் எனக்கு அங்கீகாரம், அடையாளத்தை கொடுத்தாலும் ஒரு மனிதனாய் எனக்கு எந்த சந்தோஷத்தையும் தரவில்லை வலிகளை மட்டுமே தான் தந்தது என்று சொல்லவேண்டும். அந்த வலிகளை பற்றிக் கூறினால் அதற்கு காரணமானவர்களை பற்றி கூறவேண்டும். அவர்களின் பின்புலத்தை கூறவேண்டும். அதனால் அதைப் பற்றி பேச வேண்டாம்.

பருத்திவீரனைப் பற்றி கூறவேண்டுமென்றால் நான் கிராமத்தில் பிறந்து வளரவில்லை என் நண்பர்கள் பலர் கிராம பின்னணியிலிருந்து வந்தவர்கள். அப்படி கிராமங்களுக்கு பயணப்படும் போது அந்த வாழ்வியல் என்னை அப்படியே ஈர்த்துவிட்டது. அந்த மனிதர்கள். அவர்களின் அன்பு அதை வெளிக்காட்டும் விதம் அனைத்தையும் நான் உள்வாங்கி எனக்குள்ளேயே ஒழித்து வைத்திருந்தேன். இதை எல்லாம் நான் சேர்த்து கொண்டுவந்த இடம் தான் பருத்திவீரன். அதற்கடுத்ததாகவும் எனக்குள்ளே பல கிராமத்து கதைகள் வைத்திருந்தேன்.

இயக்குனர் அமீர்

ஆனால் பருத்திவீரனின் வெற்றியினால் தொடர்ந்து அதே போன்ற கதாபாத்திரங்கள் கொண்ட பல கிராமத்து கதைகள் வெளிவர தொடங்கின. சுமார் பத்து வருட காலத்திற்கு இதே போல படங்கள் வெளியாகி மக்களை படாத பாடு படுத்திவிட்டன. இதைக்கண்டு எனக்குள்ளும் ஒரு சோர்வு உண்டாகிறது. நான் மீண்டும் படம் தொடங்காததை கண்டு விமர்சனங்களும் வந்தன.

அவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன் நான் பருத்திவீரன் எடுத்தது உங்களுக்காக அல்ல, எனக்காக என் ரசிகர்களுக்காவே இத்திரைப்படத்தை எடுத்தேன். அவர்களுடன் நான் என்றும் தொடர்பில் இருப்பேன். அதனால் வேறு ஒரு களத்தில் திரைப்படம் எடுக்க எண்ணி ஆதிபகவனைத் தொடங்கினேன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலித்தாவை அமீர் சந்தித்தது, அவர்கள் இருவருக்குமிடையே நடைபெற்ற சுவாரஸ்யமான உரையாடல் பற்றித் தெரிந்துகொள்ள கீழுள்ள லிங்கில் முழுமையாகக் காணுங்கள்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/parvin-sultanas-kathaipoma-show-with-ameer-sultaan-part-2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக