Ad

சனி, 8 ஜனவரி, 2022

ஈஸி மஷ்ரூம் ஃப்ரை | சிப்பிக் காளான் குழம்பு | ஸ்டஃப்டு மஷ்ரூம் - வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

அசைவ ருசி வேண்டும்... ஆனால் சைவமாக இருக்க வேண்டும்.... இப்படியொரு பிரிவினரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கான மெனுவில் மஷ்ரூமுக்கு முக்கிய இடமுண்டு. மஷ்ரூமில் செய்து அசத்தக்கூடிய வெரைட்டி ரெசிப்பீஸை இந்த வார வீக் எண்டுக்கு விருந்தாக்குங்கள்...

தேவையானவை:

பட்டன் காளான் - ஒரு பாக்கெட்
பெரிய வெங்காயம் - 3
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

ஈஸி மஷ்ரூம் ஃப்ரை

செய்முறை:

காளானை கழுவி மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, நறுக்கிய காளான் துண்டுகளைச் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். அடுப்பை சிறு தீயில்வைத்து, காளான் வேகும்வரை மூடி போட்டு வைக்கவும் (காளானிலிருந்தே நீர் பிரியும் என்பதால் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை). காளான் வெந்து, சுண்டியதும் இறக்கவும்.

குறிப்பு:

பட்டன் காளானைச் சுத்தம் செய்யும்போது, மைதா மாவை சிறிது தண்ணீரில் கரைத்து அதில் காளானை புரட்டிக் கழுவினால் பளிச்சென்று இருக்கும்.

தேவையானவை:
பட்டன் காளான் - 10 (பெரியது)
பிரெட் தூள் - தேவைக்கேற்ப
முட்டை - ஒன்று
மைதா மாவு - 3 டீஸ்பூன்
டூத்பிக் (உபயோகிக்காத பல்குத்தும் குச்சி) - சில

ஸ்டஃப் செய்ய:
பெரிய வெங்காயம் - 2
பூண்டு - 10 பல்
கொத்தமல்லித்தழை - சிறிது
பச்சை மிளகாய் - 2
சீஸ் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

ஸ்டஃப்டு மஷ்ரூம்

செய்முறை:
காளானை தண்ணீரில் நன்கு கழுவி வைக்கவும். முட்டையை அடித்து மைதா மாவுடன் சேர்த்துக் கலந்து வைக்கவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கவும். வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கி, இஞ்சி-பூண்டு பேஸ்ட், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துக் கிளறி தனியே வைக்கவும்.

காளானின் தண்டுப் பகுதியை நீக்கிவிட்டு, காளானின் நடுவே வதக்கிய கலவையை ஸ்டஃப் செய்யவும். இறுதியாக சீஸ் துருவல் வைக்கவும். இனி, தண்டு நீக்கிய மற்றொரு காளானை ஸ்டஃப் செய்த காளானோடு ஒன்றாக இணைத்து டூத் பிக்கால் காளானின் நடுவே படத்தில் காட்டியுள்ளபடி செருகவும். இரண்டும் பிரிந்து வராமல் இருக்கவே டூத்பிக்கை செருகுகிறோம். பிறகு, முட்டை-மைதா கலவையில் முக்கி எடுத்து, பிரெட் தூளில் புரட்டவும். வாணலியில் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் அடுப்பை சிறு தீயில் வைத்து, ஸ்டஃப் செய்த காளான் துண்டுகளைச் சேர்த்து, பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

தேவையானவை:

பட்டன் காளான் - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 150 கிராம்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள், சோம்புத்தூள் - தலா அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிது
பொடியாக நறுக்கிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
சோம்பு - ஒரு டீஸ்பூன்
பூண்டு - 15 பல்
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

மஷ்ரூம் சுக்கா

செய்முறை:
காளானை விருப்பமான வடிவில் நறுக்கவும். சின்ன வெங்காயத்தை நீளவாக்கிலும், பூண்டை வட்டமாகவும் நறுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு காளான் சேர்த்து உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், நறுக்கிய தேங்காய், சீரகத்தூள், சோம்புத்தூள் சேர்த்து வதக்கவும். அடுப்பை சிறு தீயில்வைத்து, மூடிபோட்டு காளானை 3 நிமிடம் வேகவிடவும். பிறகு மூடியைத் திறந்து தண்ணீர் சுண்ட (காளானில் இருந்து வெளிப்படும் தண்ணீர்) வதக்கி, மிளகுத்தூள் சேர்த்துக் கிளறி, இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

குறிப்பு:
பத்து நிமிடங்களில் சமைத்துவிடலாம்.
சாம்பார், ரசம் சாதத்துக்கு நல்ல காம்பினேஷன்.
இந்த ரெசிப்பிக்கு, வெங்காயம் அதிகம் தேவைப்படும். சின்ன வெங்காயத்துக்கு பதில் பெரிய வெங்காயமும் சேர்க்கலாம்.

தேவையானவை:
பட்டன் காளான் - 100 கிராம்
பாஸ்மதி அரிசி - 200 கிராம்
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் - தலா 2
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - ஒன்றரை டீஸ்பூன்
குடமிளகாய் - ஒன்று
நெய் - 3 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

மஷ்ரூம் மல்லி ரைஸ்

செய்முறை:
காளானை தண்ணீரில் அலசி நன்கு சுத்தம் செய்து நீளமாக நறுக்கவும். பெரிய வெங்காயம் மற்றும் குடமிளகாயை பொடியாக நறுக்கவும். பாஸ்மதி அரிசியை தண்ணீரில் 5 நிமிடம் ஊறவைக்கவும். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையை மிக்ஸியில் விழுதாக அரைத்து, வடிகட்டி சாறு எடுத்து வைக்கவும். ஒரு மடங்கு பாஸ்மதி அரிசிக்கு, இந்தச் சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து 2 மடங்கு இருக்க வேண்டும்.

அடுப்பில் குக்கர் வைத்து நெய், எண்ணெய் சேர்த்து, சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி-பூண்டு பேஸ்ட், குடமிளகாய், காளான் சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்கி, எடுத்துவைத்துள்ள சாற்றை
(கொத்தமல்லித்தழை + தேங்காய் + பச்சை மிளகாய்சாறு) சேர்த்து, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதித்ததும், பாஸ்மதி அரிசி சேர்க்கவும். குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.

குறிப்பு:
இதை சிப்பிக் காளானில் செய்வதாக இருந்தால், காளான் சேர்த்தவுடன் 10 நிமிடங்கள் வதக்கவும்.

தேவையானவை:

சிப்பிக் காளான் - ஒரு பாக்கெட்
சின்ன வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 2
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 3 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கசகசா - அரை டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
பட்டை, சோம்பு - சிறிதளவு
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

சிப்பிக் காளான் குழம்பு

செய்முறை:

சிப்பிக் காளானின் பெரிய இதழை மட்டும் நீக்கிவிட்டு, மீதியை அப்படியே தண்ணீரில் நன்கு அலசி வைக்கவும். சின்ன வெங்காயம் 10-ஐ தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துச் சூடானதும், தனியே எடுத்துவைத்த முழுதான வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி, இறுதியாக மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள் சேர்த்துப் புரட்டி, ஆறிய பிறகு, விழுதாக அரைத்து வைக்கவும். தேங்காயுடன் கசகசா சேர்த்து அரைத்து தனியாக வைக்கவும்.

அடுப்பில் சின்ன குக்கர் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் பட்டை, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதங்கியதும் நறுக்கிய காளானைச் சேர்க்கவும். இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து இரண்டு நிமிடம் வதங்கியதும் அரைத்த வெங்காய விழுது சேர்த்துக் கிளறவும். தேவையான அளவு தண்ணீரை குழம்பு பதத்துக்கு வருவது போல சேர்க்கவும். இத்துடன் உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், பாதியளவு கொத்தமல்லித்தழை சேர்த்து மூடி, இரண்டு விசில் வரும்வரை வேகவிடவும். பிறகு குக்கரைத் திறந்து அரைத்த தேங்காய்க்கலவை சேர்த்து நன்கு கொதி வந்ததும் இறக்கி, மீதமுள்ள கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:

சாதம், டிபனுக்கு நல்ல காம்பினேஷனாக இருக்கும். பட்டன் காளானை விட சிப்பிக் காளானில் சத்துகள் அதிகம். இது வேக சிறிது நேரம் பிடிக்கும்.



source https://www.vikatan.com/food/recipes/mushroom-fry-mushroom-kozhambu-stuffed-mushroom-weekend-recipes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக