Ad

வெள்ளி, 7 ஜனவரி, 2022

பஞ்சாப் விவகாரம்: தமிழக பாஜக ஒரு வாரம் போராட்டம் - ஒமைக்ரான் பரவும் நேரத்தில் அவசியம்தானா?

பஞ்சாப் மாநில அரசாங்கத்தையும், காங்கிரஸ் கட்சியையும் கண்டித்து தமிழக பாஜக சார்பில் பட்டினப்பாக்கம் முதல் மெரினா கடற்கரையிலுள்ள காந்தி சிலை வரை கண்டன ஊர்வலம் நேற்று நடைபெற்றது. ஒமைக்ரான் பரவல் காரணமாக பிரதமர் பங்கேற்கவிருந்த பொங்கல் விழாவை ரத்து செய்வதாகச் சொன்ன பா.ஜ.க-வினர், பேரணி, போராட்டம் என மக்கள் கூட்டத்தைக் கூட்டுவது சரிதானா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. மேலும், தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன.

பஞ்சாப் மோடி

பஞ்சாப்பில் பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகவும், அரசியல் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வதற்காகவும் ஜனவரி 5-ம் தேதி பதிண்டா விமான நிலையத்துக்கு வந்திருந்தார் மோடி. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக தேசிய தியாகிகள் நினைவிடத்துக்குச் செல்வதுதான் திட்டம். ஆனால், மோசமான வானிலை காரணமாக, சாலை வழியாகப் பயணம் மேற்கொள்வது எனத் திட்டத்தை மாற்றியமைத்தனர் பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படை அதிகாரிகள். சாலை மார்க்கமாகச் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக விவசாயிகள் சிலர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பாதி வழியிலேயே மோடியின் வாகனம் நிறுத்திவைக்கப்பட்டது. சுமார் 20 நிமிடங்கள் ஒரு மேம்பாலத்தின்மீது பிரதமர் வாகனம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றிலும் நின்று பிரதமருக்குப் பாதுகாப்பு கொடுத்தனர், சிறப்புப் பாதுகாப்புப் படையினர். பின்னர், நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு, பதிண்டா விமான நிலையத்துக்குச் சென்று, அங்கிருந்து டெல்லி திரும்பினார் மோடி.

Also Read: மோடி பயணம் ரத்து: `கூட்டமில்லை' - காங்கிரஸ்; `உயிருக்கு அச்சுறுத்தல்' - பாஜக - அரசியல் செய்வது யார்?

இந்த நிலையில், தமிழகத்தில் பிரதமர் மோடி ஜனவரி 12-ம் தேதி கலந்துகொள்ளவிருந்த, 'நம்ம ஊரு பொங்கல்' நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் 6-ம் தேதி அறிவித்தார். அதுமட்டுமல்லாமல், பஞ்சாப்பில் நடந்த சம்பவத்தைக் கண்டித்து, ஒருவார காலத்துக்கு தமிழகத்தில் அறவழியிலான போராட்டங்கள் நடைபெறும் எனவும் தெரிவித்தார் அண்ணாமலை. முதற்கட்டமாக நேற்று, பா.ஜ.க இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மெழுகுவத்தி ஏந்தும் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து, மகளிரணி சார்பில், அனைத்துக் கோயில்களிலும் மிருத்யுஞ்சய ஜெபம் எனும் பூஜை நேற்றும் இன்றும் நடைபெற்றது.

பேரணி

இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, பட்டினப்பாக்கம் முதல் மெரினா கடற்கரையிலுள்ள காந்தி சிலை வரை கண்டன ஊர்வலமும், தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டமும் நேற்று நடைபெற்றன. இதில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, மாநிலப் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி, வானதி சீனிவாசன், தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் குஷ்பு, தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். பின்னர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இனிவரும் நாள்களில், அம்பேத்கர் சிலைக்குக் கீழே அமர்ந்து போராட்டம், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதுவது, பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட பல போராட்டங்களை வரும் 13-ம் தேதிவரை முன்னெடுக்கவிருப்பதாக தமிழக பாஜக-வினர் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ஒமைக்ரான் பரவல் விஸ்வரூபமெடுத்திருக்கும் இந்த நேரத்தில் இது போன்ற தொடர் போராட்டங்கள் அவசியம்தானா என தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜனிடம் பேசினோம்.

``ஒமைக்ரான் பரவல் அதிகரித்துவருகிறது. மாஸ்க் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். மத்திய அரசின் வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பதில் நாங்களும் தெளிவாக இருக்கிறோம். பூத்துக்கு இரண்டு பேர் என எங்கள் கட்சி சார்பில் ஆட்கள் போடப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுகளையும் நாங்கள் மேற்கொண்டுவருகிறோம். ஆனால், இது எங்கள் உணர்வுகளை வெளிக்காட்டவேண்டிய ஒரு நேரம். பஞ்சாப்பில் நடந்தது மிகப்பெரிய சதித்திட்டம். இந்த நாட்டு மக்களின் நிம்மதியைச் சீர்குலைப்பதற்கான ஒரு நடவடிக்கை. பிரதமர்தான் நம் நாட்டின் தலைமை நிர்வாக அதிகாரி. அவரின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிவிட்டது பஞ்சாப் அரசாங்கம்.

கரு.நாகராஜன், பொன்.ராதாகிருஷ்ணன்

இந்தச் சம்பவம் நடந்ததற்குப் பின்னால் எங்களுக்குப் பல கேள்விகள் இருக்கின்றன. பிரதமரின் பாதுகாப்புக்குப் பின்னடைவு என்றால், அடுத்ததாக காஷ்மீரில், மேற்கு வங்கத்தில் இது போன்ற பல சம்பவங்கள் தொடர வாய்ப்பிருக்கிறது. பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இதன் மூலம் துளிர்விடும். தீவிரவாதத்தை உருவாக்குவதும், அவர்களைக் காலி செய்வதும்தான் காங்கிரஸ் கட்சியின் வேலை. இதனால், காங்கிரஸ் தலைவர்கள் இரண்டு பேரை இழந்திருக்கிறோம். ஆனாலும், அரசியல், அதிகாரம், பதவிக்காக காங்கிரஸ்காரர்கள் எந்த நிலைக்கும் இறங்குவார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு. அதை, மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்காகத்தான் இந்தப் போராட்டங்கள். இதனால், மக்கள் யாருக்கும் எந்த இடையூறும் இல்லை'' என்கிறார் அவர்.

காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, அந்தக் கட்சியின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் கோபண்ணாவிடம் பேசினோம்.

`` பிரதமர் மோடியின் உயிருக்கெல்லாம் எந்த அச்சுறுத்தலும் இல்லை. பாஜக-வினர் திட்டமிட்டு நாடகமாடிவருகிறார்கள். பஞ்சாப் சுற்றுப்பயணத்தில், முதலில் அவர் ஹெலிஹாப்டரில் செல்வதாக இருந்தது. பிறகு, மோசமான வானிலை காரணமாக சாலை மார்க்கமாகச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. பிரதமர் மோடி எஸ்.பி.ஜி பாதுகாப்பில் இருக்கிறார். அவருக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, எஸ்.பி.ஜி தலைமை அதிகாரி, மத்திய புலனாய்வுத்துறையினர், பஞ்சாப் தலைமை காவல் அதிகாரி, தலைமைச் செயலாளர் என அனைவரும் கலந்துபேசித்தான் முடிவெடித்திருப்பார்கள். இதில் பஞ்சாப் மாநில அரசை மட்டும் சம்பந்தப்படுத்த முடியாது.

கோபண்ணா

தவிர, பிரதமர் பங்கேற்கிற பேரணியில் 70 ஆயிரம் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஆனால், வெறும் 700 பேர் மட்டுமே வந்திருக்கிறார்கள். இதற்கான புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த விஷயத்தைத் தெரிந்துகொண்டுதான் பிரதமர் மோடி பயணத்தை ரத்து செய்து திரும்பியிருக்கிறார். இதில், பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்கிற பேச்சுக்கே இடமில்லை. எஸ்.பி.ஜி பாதுகாப்பில் இருக்கிற பிரதமரை யார் நெருங்க முடியும்? தமிழ்நாட்டில் பாஜக-வினர் கையிலெடுத்த எந்தப் போராட்டமும் இதுவரை வெற்றிபெறவில்லை. அதனால், இந்த விஷயத்தைக் கையிலெடுத்திருக்கிறார்கள். இதைவைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். அவர்கள் முயற்சி வெற்றிபெறாது. தமிழ்நாட்டு மக்களிடம் எந்த அனுதாபத்தையும் அவர்கள் பெற முடியாது'' என்கிறார் அவர்.

மேற்கண்ட விஷயங்கள் குறித்து, திமுக-வின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தியிடம் பேசினோம்.

``அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கோ, மாநாடுகளுக்கோ தற்போது அனுமதி இல்லை. பொது இடங்களில் மக்கள் அதிகமாகக் கூடக் கூடாது என்கிற ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படிதான் மாநில அரசு இங்கே நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஆனால், ஒன்றிய அரசின் உத்தரவை தமிழக பாஜக-வினர் மதிப்பதில்லை. அரசியலமைப்புச் சட்டத்தையே மதிக்காதவர்கள் அவர்கள். அதனால், இதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. பஞ்சாப்பில் பிரதமர் போகும்போது கோஷம் போட்டவர்கள் பாஜக-வினர்தான். மக்கள் போராடியது வேறு இடம். அரசியல்ரீதியாக பஞ்சாப்பில் காங்கிரஸை வீழ்த்த முடியாமல்தான் இது போன்ற விஷயங்களைக் கையிலெடுக்கிறார்கள்.

இராஜீவ் காந்தி

அதேவழியில் தமிழகத்திலும் கொள்கைரீதியாக வெல்ல முடியாமல், சட்ட, ஒழுங்குப் பிரச்னையை உருவாக்கப் பார்க்கிறார்கள். சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்று பேசுகிற அண்ணாமலையே இது போன்ற விஷயங்களை முன்னெடுப்பது வேடிக்கையாக இருக்கிறது. மாநாடு, பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி இல்லாதபோதும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஜனநாயகரீதியாக அரசு அனுமதியளிக்கப்படுகிறது. ஆனால், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும். அதை பாஜக-வினர் மீறினால், வழக்கு பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கைகளை உறுதியாக எடுப்போம்'' என்கிறார் அவர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-protests-for-a-week-is-it-necessary-at-a-time-when-omicron-is-spreading

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக